இலங்கையின் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றமானது வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைவதற்கு மத்தியிலும் நிதியியல் கணக்கிற்கான உயர்வான உட்பாய்ச்சல்களுடன் 2018 சனவரியில் மேம்பாடொன்றினை எடுத்துக்காட்டியது. வணிகப்பொருள் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் அதிகரித்த அதேவேளை இறக்குமதிகள் மீதான செலவினமும் மாதத்தின் போதான ஏற்றுமதி வருவாய்களின் செயலாற்றத்தினை கடந்து கணிசமாக அதிகரித்தது. எவ்வாறு இருப்பினும், கடந்த ஆண்டின் போது அவதானிக்கப்பட்ட மிதமான போக்கினை நேர்மாற்றி சுற்றுலாத்துறை வருவாய்கள் 2018 சனவரியின் போது குறிப்பிடத்தக்க வளர்ச்சியினைப் பதிவுசெய்தது. 2017இன் போது வேகக்குறைவொன்றினை அடையாளப்படுத்திய தொழிலாளர் பணவனுப்பல்களும் 2018 சனவரியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது. அதேவேளை, சென்மதி நிலுவை நிதியியல் கணக்கானது அரசாங்கப் பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை போன்றவற்றில் வெளிநாட்டு முதலீடுகளுடன் 2018 சனவரியில் உயர்வான உட்பாய்ச்சலொன்றினை தொடர்ந்தும் அனுபவித்தது. 2018 சனவரியின் இறுதியிலுள்ளவாறு, நாட்டின் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 7.7 பில்லியனாக 4.3 மாதங்கள் இறக்குமதிகளுக்குச் சமமானதாகவிருந்தன.