வெளிநாட்டுத் துறையானது நடைமுறைக் கணக்கிற்கான வலுவான உட்பாய்ச்சல்களினால் ஆதரவளிக்கப்பட்டு 2024 ஒத்தோபரில் அதன் நேர்மறையான உத்வேகமொன்றினைத் தொடர்ந்து, ஒதுக்குகளில் அதிகரிப்பொன்றினையும் இலங்கை ரூபாவின் உயர்வடைதலொன்றினையும் தோற்றுவித்தது.
மத்திய வங்கியின் அண்மைக்கால எறிவுகளுக்கமைவாக, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாகவும் எதிர்மறையான புலத்தில் காணப்பட்டு, 2024 ஒத்தோபரின் 0.8 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 2024 நவெம்பரில் 2.1 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்தினைப் பதிவுசெய்தது.
கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), 2024 ஒத்தோபரில் மீளெழுச்சியடைந்து, 54.3 மொத்த நடவடிக்கைச் சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்திருந்தது. தேர்தல் தொடர்பான நிச்சயமற்றதன்மைகள் தீர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒத்தோபரில் கட்டடவாக்கச் செயற்றிட்டங்களின் தொழிற்பாடுகள் மீண்டும் உத்வேகம் பெற்றுள்ளதென பல பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர்.
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது 2024 நவெம்பர் 26ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை மேலும் தளர்த்துவதற்கும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஓரிரவுக் கொள்கை வீதத்தினை 8.00 சதவீதமாக நிர்ணயிப்பதற்கும் தீர்மானித்துள்ளது. இம்மாற்றத்துடன் கொள்கை வட்டி வீதத்தின் வினைத்திறனான குறைப்பானது நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் தொழிற்பாட்டு இலக்காகத் தொடர்ந்து தொழிற்படுகின்ற சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதத்தின் தற்போதைய மட்டத்திலிருந்து ஏறத்தாழ 50 அடிப்படைப் புள்ளிகளாக அமையும்.
ஒற்றைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறையின் திட்டமிடப்பட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பில் சனவரி 2024இல் இலங்கை மத்திய வங்கியின்; ஆண்டுக்கான கொள்கை அறிக்கையிலும் அதனை தொடர்ந்து 2024 செத்தெம்பரிலும் அறிவிக்கப்பட்டவாறு, இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது 2024 நவெம்பர் 27இலிருந்து இரட்டைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறையிலிருந்து ஒற்றைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்தது. இது மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பில் மேலுமொரு குறிப்பிடத்தக்க மேம்பாட்டை குறிக்கிறது. இதற்கமைய, மத்திய வங்கி தனது நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை சமிக்ஞை செய்வதற்கும் தொழிற்படுத்துவதற்கும் அதன் முதன்மை நாணயக் கொள்கைக் கருவியாக ஓரிரவு கொள்கை வீதத்தினை அறிமுகப்படுத்துகிறது. இலங்கை மத்திய வங்கியின் நாணயக்; கொள்கை நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தைக் குறித்துக்காட்டி தொடர்பூட்டுவதற்கு ஓரிரவு கொள்கை வீதமானது காலத்திற்குக் காலம் மீளாய்வு செய்யப்பட்டு தேவைக்கேற்ப சீராக்கப்படும். இந்த மாற்றம், நிதியியல் சந்தைகள் மற்றும் பரந்த பொருளாதாரத்திற்கு நாணயக் கொள்கை சமிக்ஞையிடலின் வினைத்திறன் மற்றும் செயற்றிறனையும் ஊடுகடத்தலையும் மேம்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.
2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் பயனைக்கொண்டு, நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்களின் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. நிதியியல் நிறுவனங்களின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் பாரதூரம் என்பனவற்றை பரிசீலனையிற் கொண்டு தண்டப்பணங்கள் விதித்துரைக்கப்படலாம்.