நிதியியல் முறைமை உறுதிபாட்டுக் குழு

நிதியியல் முறைமையின் நிலையுறுதியை உறுதிப்படுத்தலானது 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தில் எடுத்துரைக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் குறிக்கோள் ஒன்றாகும். ஏனையவற்றுக்கு மத்தியில்,  நிதியியல் முறைமையின் அபிவிருத்தியையும் வினைத்திறனையும் பரிசீலனையில் கொண்டு இக்குறிக்கோள் அனுசரிக்கப்படவேண்டியிருக்கின்றது. நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக் குழுவானது நிதியியல் முறைமையில் தோற்றம்பெறுகின்ற இடர்நேர்வுகள் பற்றிய முழுமையான நோக்கினை கருத்திற்கொள்வதன் மூலம் இக்குறிக்கோளை நிறைவுசெய்வதை நோக்கி ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சியினை உறுதிசெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக் குழுவின் பிரதான வகிபாகம் உறுப்பினர்கள் மற்றும் வேறு பங்குதாரர்கள் மூலம் எடுத்துக்காட்டப்படும் நிதியியல் முறைமை நிலையுறுதி தொடர்புபட்ட நோக்குகளை மதிப்பிடுவதும் நிதியியல் முறைமையில் காணப்படும் இடர்நேர்வுகளைக் கண்காணிப்பதும் அத்துடன் உறுப்பினர்கள் மூலம் வழங்கப்படும் தொழில்நுட்ப உள்ளீடுகளின் அடிப்படையில் அத்தகைய இடர்நேர்வுகளைத் தணிப்பதற்கும் ஆளும் சபைக்கு பரிந்துரைகளை மேற்கொள்வதும் ஆகும். 

இவ்வகிபாகத்தினை நிறைவுசெய்வதில், நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக் குழு,  

(அ)    நிதியியல் முறைமை நிலையுறுதியையும் ஒட்டுமொத்தமாக, நிதியியல் முறைமைக்கான எதிர்பார்க்கையினையும் மதிப்பிடுதல் வேண்டும்;

(ஆ)    சந்தையிலிருந்து தோன்றுகின்ற ஒட்டுமொத்த முறைமையினையும்; பாதிக்கின்ற இடர்நேர்வுகளையும் நிதியியல் நிறுவனங்களின் ஒன்றுடன் ஒன்றுக்கிடையிலான தொடர்பு உள்ளடங்கலாக பொருளாதாரக் காரணிகளையும் கண்காணித்தல் வேண்டும்;

(இ)    நிதியியல் முறைமை நிலையுறுதியை வலுப்படுத்தி பேணிக்காக்கும் நோக்குடன் தரப்பட்ட ஏதேனும் நேரத்தில் கொள்கை வழிமுறைகள் மற்றும் அவசியமானதெனக் கருதப்படுகின்ற நடவடிக்கைகள் என்பவற்றை கலந்தாராய்தல், வரைவிலக்கணம் செய்தல் மற்றும் தெரிவுசெய்தல் வேண்டும்;

(ஈ)    இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் முறைமை நிலையுறுதிப் பொறுப்பாணைக்கு ஆதரவளிப்பதற்காக கொள்கை வழிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் மீது ஆளும் சபைக்கு வேண்டப்படுகின்ற போது பரிந்துரை வழங்குதல். இப்பரிந்துரைகள் குறிப்பாக பேரண்ட முன்மதியுடைய கொள்கை வழிமுறைகள் மற்றும் முறைமை முழுவதும் உள்ளார்ந்தங்களுடன்கூடிய பேரண்ட முன்மதியுடைய ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகள் என்பவற்றை உள்ளடக்குகின்றது. 

நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக் குழுவின் உள்ளமைப்பு பின்வருமாறு

தலைவர்

நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்குப் பொறுப்பான துணை ஆளுநர்

உறுப்பினர்கள்

துணை ஆளுநர் - பேரண்டமுன்மதியுடைய கொள்கைக்குப் பொறுப்பானவர்
துணை ஆளுநர் - விலை உறுதிப்பாட்டிற்குப் பொறுப்பானவர்
உதவி ஆளுநர் - பேரண்டமுன்மதியுடைய கண்காணிப்புத் திணைக்களத்திற்கு பொறுப்பானவர்
உதவி ஆளுநர் - வங்கித்தொழில் மேற்பார்வைத் திணைக்களத்திற்குப் பொறுப்பானவர் 
உதவி ஆளுநர் - வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்திற்குப் பொறுப்பானவர்
உதவி ஆளுநர் - பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்திற்குப் பொறுப்பானவர் 
உதவி ஆளுநர் - வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானத் திணைக்களத்திற்குப் பொறுப்பானவர்
உதவி ஆளுநர் - கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு திணைக்களத்திற்குப் பொறுப்பானவர் 

பேரண்டமுன்மதியுடைய கண்காணிப்புப் பணிப்பாளர்
வங்கி மேற்பார்வைப் பணிப்பாளர்
வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைப் பணிப்பாளர்
பொருளாதார ஆராய்ச்சிப் பணிப்பாளர்
வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானப் பணிப்பாளர்
கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் பணிப்பாளர்

நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக் குழுவிற்கான செயலாளர்பேரண்டமுன்மதியுடைய கண்காணிப்புத் திணைக்களத்தின் துணைப் பணிப்பாளரொருவர்.

நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக் குழு குறைந்தது இரு மாதங்களுக்கொருமுறை சந்திக்கின்றது. இக்கூட்டங்களில், நிதியியல் முறைமையின் நிலையுறுதியுடன் தொடர்;புடைய பிரச்சினைகளையும் கரிசனைகளையும் பற்றி குறித்த திணைக்களத்தால் தயாரிக்கப்படும் அறிக்கைகளை உறுப்பினர்கள் பகுப்பாய்வு செய்கின்றனர். பேரண்டமுன்மதியுடைய மற்றும் நுண்பாகமுன்மதியுடைய குறிகாட்டிகள் போன்ற நிதியியல் துறை நிலையுறுதிக் குறிகாட்டிகளை கண்காணித்தலை உள்ளடக்குகின்ற கண்காணிப்பினூடாக நிதியியல் முறைமைக்கான இடர்நேர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டு அளவிடப்படுகின்றன. இவ் இடர்நேர்வுகளைக் குறைப்பதற்கும் நிதியியல் முறைமை நிலையுறுதியைப் பேணுவதற்கும் தேவையான வழிமுறைகள் மற்றும் கொள்கைகள் பற்றிய விதந்துரைப்புக்களை நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக் குழு ஆக்குகின்றது அல்லது ஒப்புதலளிக்கின்றது அத்துடன் அதனைத்தொடர்ந்து அத்தகைய பரிந்துரைகள் தொடர்புடைய உறுப்பு திணைக்களங்களினூடாக ஆளும் சபைக்கு சமர்ப்பிக்கப்டுகின்றன.