இலங்கை அரசாங்கமானது 2007 தொடக்கம் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளை வழங்கிவருகின்றது. இலங்கை அரசாங்கம் சுதந்திரம் பெற்றது முதல் நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் உள்ளடங்கலாக அதன் படுகடன் கடப்பாடுகளை உரிய காலத்தில் தீர்ப்பனவு செய்வதன் மீது மாசற்ற பதிவொன்றினைப் பேணி வந்துள்ளது.
2014 சனவரி மற்றும் ஏப்பிறல் மாதங்களில் வழங்கப்பட்ட முறையே ஐ.அ.டொலர் 1,000 மில்லியன் மற்றும் 500 மில்லியன் நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் 2019 சனவரி மற்றும் ஏப்பிறல் மாதங்களில் முதிர்ச்சிபெறவுள்ளன. இலங்கை அரசாங்கமானது உபாயமற்ற சொத்துகளின் உரிமை மாற்றல் பெறுகைகள் ஊடாகவும் கூட்டு ஏற்பாடுகள் மூலம் நிதியளித்தல் ஊடாகவும் 2019இல் முதிர்ச்சியடைகின்ற நாட்டிற்கான பன்னாட்டு முறிக் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான முன்நிதியளித்தல் ஒழுங்குகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ளது.
பன்னாட்டு மூலதனச் சந்தைகளுக்கான மேலதிக அணுகுவழிகளுக்கான பொருத்தமான வாயிலொன்றை கண்டறிகின்ற அதேவேளை இலங்கை அரசாங்கமும் இலங்கை மத்திய வங்கியும் மரபுசார்ந்த யூரோ டொலர் பன்னாட்டு நாணய முறி வழங்கல்களுக்கு வெளியிலான அதிகார எல்லைகளுக்கான வெளிநாட்டு நிதியளித்தல் மூலங்களின் அடிப்படையிலான பன்னாட்டு சந்தையினை மேலும் பன்முகப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை ஏற்கவே ஆரம்பித்துள்ளன.