இலங்கை மத்திய வங்கி அதனது அரையாண்டு வெளியீடான – “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2018இன் முக்கிய பண்புகளும் 2019இற்கான வாய்ப்புக்களும்” என்பதனை இன்றைய தினம் வெளியிட்டுள்ளது.
2018இல் இலங்கைப் பொருளாதாரத்தின் செயலாற்றம் தொடர்பான சுருக்கம் இவ்வெளியீட்டில் வெளிக்காட்டப்பட்டவாறு கீழே தரப்பட்டுள்ளது:
இலங்கைப் பொருளாதாரம் உலகப் பொருளாதார அபிவிருத்திகளிலிருந்து எழுகின்ற புதுப்பிக்கப்பட்ட சவால்களுக்கு முகங் கொடுத்தமை ஆண்டின் முதற்காலாண்டில் அவதானிக்கப்பட்ட வலுவான உறுதித்தன்மைப் பாதையினை தடங்கலுறச் செய்தது. பொருளாதாரம் 2017இல் பதிவுசெய்யப்பட்ட ஒப்பீட்டளவில் தாழ்ந்த வளர்ச்சியான 3.3 சதவீதத்தினைத் தொடர்ந்து 2018இன் முதலரைப்பகுதியில் 3.6 சதவீதம் கொண்டதொரு மெதுவான வேகத்தில் வளர்ச்சியடைந்தது. இக்காலப்பகுதியில் நிலவிய சாதகமான வானிலை நிலைமைகளினால் ஆதரவளிக்கப்பட்டு வேளாண்மை செயற்பாடுகள் 2018 முதலரைப்பகுதியில் தமது மீட்சியினைத் தொடர்ந்தன. முக்கியமாக கட்டடவாக்கம் மற்றும் சுரங்கமகழ்தலும் கல்லுடைத்தலும் துணைத் துறைகளின் மட்டுப்படுத்தப்பட்ட செயலாற்றத்தினால் கைத்தொழில் செயற்பாடுகளின் வளர்ச்சி மெதுவடைந்தது. நிதியியல் பணிகள், மொத்த விற்பனை மற்றும் சில்லறை வியாபாரம் மற்றும் ஏனைய தனியாள் பணிகளின் செயற்பாடுகளது வளர்ச்சியினால் முக்கியமாக தூண்டப்பட்டு பணிகள் செயற்பாட்டின் விரிவாக்கம் பரந்துபட்டதாகவிருந்தது. இதேவேளை, தொழிலின்மை வீதத்தில் 2018 முதலரைப்பகுதியில் ஒரு அதிகரிப்பு அவதானிக்கப்பட்டது. தளம்பலடையும் உணவு விலைகளின் அசைவுகள் மற்றும் உள்நாட்டில் பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் ஏனைய நிருவகிக்கப்பட்ட விலைகளின் மேல் நோக்கி திருத்தங்களினொரு விளைவாக சில மாதங்களில் மேல் நோக்கிய உயர்ந்த போதிலும் நுகர்வோர் விலைப் பணவீக்கம் 2018இன் இற்றை வரை தாழ்ந்ததாகவே தொடர்ந்துமிருந்தது.