நாணயக் கொள்கைக் குழு

 

நாணயக் கொள்கைக் குழு (MPC)

நாணய விதிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டவாறு, மத்திய வங்கியின் முதன்மைத் தொழிற்பாடு நாட்டிற்கான நாணயக் கொள்கையினைத் தீர்மானிப்பதும் அதனை நடைமுறைப்படுத்துவதுமாகும். கடந்த பல ஆண்டுகளாக பொருளாதாரம், குறிப்பாக நிதியியல் துறையானது, நிதியியல் துறைச் சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுவருகின்ற அமைப்பியல்சார் மாற்றங்கள் என்பவற்றுடன் இணைந்து ஆழமடைந்து நவீனத்துவம் வாய்ந்ததொன்றாக மாற்றமடைந்திருக்கின்றது. இதன் விளைவாக, நாணயக் கொள்கையினைத் தீர்மானிப்பதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் மத்திய வங்கிப் பணிகளின் சிக்கல் தன்மை அதிகரித்துள்ளது. எனவே, நாணயக் கொள்கைப் பகுப்பாய்வுகளையும் உருவாக்கத்தினையும் வலுப்படுத்துவதற்கான மத்திய வங்கியினது முயற்சியின் பகுதியொன்றாகவும் தீர்மானங்களை வகுக்கின்ற செயன்முறையின் வெளிப்படைத்தன்மையினை மேம்படுத்துவதனை நோக்கிய நடவடிக்கையொன்றாகவும் முறைசார்ந்த நாணயக் கொள்கைக் குழுவொன்று 2001இன் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டது.

தற்போது நாணயக் கொள்கைக் குழுவிற்கு ஆளுநர் தலைமை வகிப்பதுடன் அது பின்வரும் உறுப்பினர்களை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது:

தலைவர்

ஆளுநர்

உறுப்பினர்கள்

    • அனைத்து துணை ஆளுநர்/கள்
    • பொருளாதார ஆராய்ச்சி, புள்ளிவிபர, உள்நாட்டுத் தொழிற்பாடுகள், பன்னாட்டுத் தொழிற்பாடுகள் ஆகிய திணைக்களங்களுக்கு பொறுப்பான உதவி ஆளுநர்/ஆளுநா்கள்
    • பொருளாதார ஆராய்ச்சிப் பணிப்பாளர்
    • பணிப்பாளர், புள்ளிவிபரம்
    • பணிப்பாளர், உள்நாட்டுத் தொழிற்பாடுகள்
    • பணிப்பாளர், பன்னாட்டுத் தொழிற்பாடுகள்
    • பணம் மற்றும் வங்கித்தொழில் என்பவற்றை மேற்பாா்வைசெய்கின்ற பொருளாதார ஆராய்ச்சி மேலதிகப் பணிப்பாளர்

நாணயக் கொள்கைக் குழுவின் செயலாளர்

    • பணம் மற்றும் வங்கித்தொழிலை மேற்பார்வையிடும் பொறுப்பான பொருளாதார ஆராய்ச்சியின் துணைப் பணிப்பாளர் (மாற்று ஏற்பாடாக பணம் மற்றும் வங்கித்தொழில் பிரிவின் தலைவர்)

குழுவின் முதன்மைத் தொழிற்பாடு யாதெனில், தோற்றம் பெறுகின்ற நாணய மற்றும் பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகளை எதிர்வுகூறுதல் மற்றும் மதிப்பீடு செய்தல் என்பவற்றுடன் நாணயச் சபையின் பரிசீலனைக்காக நாணயக் கொள்கையின் பொருத்தமான எதிர்காலப் பணிப்புரைகளின் மீது விதந்துரைப்புக்களை மேற்கொள்வதுமாகும்.

நாணயக் கொள்கைக் குழு கிரமமான இடைவெளியில், குறைந்தபட்சம் ஆண்டொன்றிற்கு எட்டுத் தடவையாவது கூடுகிறது. இக்கூட்டங்களில் நாணயச் சபைக்கான விதந்துரைப்புக்களை உருவாக்குவதில் நாணயக் கொள்கைக் குழுவின் நிதானமான சிந்தனைக்குத் தளமாக அமையக்கூடிய நாணயம், வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை மற்றும் விலை அபிவிருத்திகள் தொடர்பில் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தினாலும் மற்றைய திணைக்களங்களினாலும் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை இறை, வெளிநாட்டுத் துறை மற்றும் உண்மைத் துறைகளின் அபிவிருத்தியுடன் சேர்ந்து உறுப்பினர்கள் பரிசீலிக்கின்றனர். தற்பொழுது, பேரண்டப்பொருளாதார எதிர்வுகூறல்களை, குறிப்பாக பணவீக்க எதிர்வுகூறல்களை உள்ளடக்கிய அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதாரம் மற்றும் நாணயப் பகுப்பாய்வுகளை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தினால் தொழில்நுட்ப உள்ளீடுகள் வழங்கப்படுகின்றன.

ஆர்வலர் ஈடுபாட்டுக் குழு (SEC)

முன்னர் தொழிற்பட்டுவந்த இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை ஆலோசனைக் குழு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக் குழு என்பவற்றை முன்னர் தொழிற்பட்டுவந்த இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை ஆலோசனைக் குழு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக் குழு என்பவற்றை மாற்றீடுசெய்து 2022 யூலையில் இலங்கை மத்திய வங்கியின் ஆர்வலர் ஈடுபாட்டுக் குழு நிறுவப்பட்டுள்ளது. தலைசிறந்த தொழில்சார் நிபுணர்கள், கல்வியலாளர்கள் மற்றும் தனியார் துறை ஆளணியினர் உள்ளடங்கலாக பல்தரப்பட்ட ஆர்வலர்களை குழு உள்ளடக்கியுள்ளமையினால் மத்திய வங்கியானது அதன் கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்ளும் செயன்முறையில் அவர்களது நிபுணத்துவத்துவம் மற்றும் அனுபவத்திலிருந்து பயனடைந்து கொள்கின்றது.