வங்கியின் வரலாறு
இப்பிரிவில் நீங்கள் கடந்தகால ஆளுநர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றினை வாசிக்கவும் வங்கியினதும் அதன் தலைமை அலுவலகத்தினதும் வரலாற்றினை கண்டறியவும் முடியும். நீங்கள் எமது வரலாற்றுப் புகைப்படங்களை பார்க்கவும் எமது ஞாபகார்த்த நூல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளவும் முடியும்.
1948இல் சுதந்திரமடைந்தமையினைத் தொடர்ந்து இயக்கவாற்றல்வாய்ந்த பொருளாதார மற்றும் நிதியியல் முறைமைக்கு வசதியளிப்பதற்காக, சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கை அரசாங்கம், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்து அதனை ஊக்குவிப்பதற்காக தீவிரமான நாணயக் கொள்கை அமைப்பையும் இயக்கவாற்றல் வாய்ந்த நிதியியல் துறையினையும் பேணுவதற்காக இலங்கை மத்திய வங்கியினை நிறுவியது.
வங்கியின் ஆரம்பம்
இலங்கை மத்திய வங்கி நிறுவப்படுவதற்கு முன்னர், 1884ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க தாள் நாணயக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட பணச் சபை முறைமையானது நாட்டின் நாணய அதிகாரசபையாகத் தொழிற்பட்டது. எனினும் இதன் இயலாற்றல் மிகக் குறுகியதாகும். அரசியல் சுதந்திரம் கிடைக்கப் பெற்றதன் பின்னர் நாட்டினை அபிவிருத்தி செய்வதற்கு இம்முறைமை போதுமானதல்ல என உணரப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியை நிறுவுவதற்கான தொழில்நுட்ப நிபுணத்துவத்தினை ஐக்கிய அமெரிக்காவிலிருந்து வழங்குமாறு 1948 யூலையில் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அமெரிக்கப் பொருளியலாளரான திரு. ஜோன் எக்ஸ்ரர், இப்பணியினை மேற்கொள்வதற்காக ஐக்கிய அமெரிக்காவின் பெடரல் றிசேர்வ்விலிருந்து நியமிக்கப்பட்டார்.
மத்திய வங்கிக்கான நியாயபூர்வமான தன்மை மற்றும் சட்ட ரீதியான கட்டமைப்பு என்பன தொடர்பான எக்ஸ்ரர் அறிக்கை 1949ஆம் ஆண்டு நவெம்பர் மாதம் மக்கள் பிரதிநிதித்துவச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வறிக்கையுடன் சேர்த்து, அறிக்கையின் II ஆவது பகுதியாக, விளக்கக் கருத்துக்களுடன் சேர்த்து வரைவு மசோதாவும் சமர்ப்பிக்கப்பட்டது. 1949ஆம் ஆண்டு நவெம்பர் 25ஆம் நாளன்று இம்மசோதாவானது சபையினால் 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டம் என நிறைவேற்றப்பட்டமையானது இலங்கை மத்திய வங்கியை நிறுவுவதற்கும் பணச் சபை முறைமையினை முடிவுறுத்துவதற்கும் வழியமைத்தது. 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இலங்கை மத்திய வங்கி 1950 ஓகத்து 28ஆம் நாள் தொழிற்படத் தொடங்கியது. இது, இலங்கை (சிறிலங்கா) மத்திய வங்கி என 1985 இல் மீளப் பெயரிடப்பட்டது.
நாட்டின் பணம், வங்கித்தொழில், மற்றும் கொடுகடன் முறைமை என்பனவற்றை முழுமையாக நிருவகித்து ஒழுங்குபடுத்துவதற்கான பரந்தளவு அதிகாரம் மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டது. மத்திய வங்கிக்கு நாணயத்தை வெளியிடும் ஏக உரிமையும், அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளதோடு, அது நாட்டின் பன்னாட்டு ஒதுக்குகளின் காவலனாகவும் மாறியுள்ளது. 1949 இன் நாணயச் சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மத்திய வங்கியின் முக்கிய குறிக்கோள்கள் பின்வருமாறு:
(1) உள்நாட்டு நாணயப் பெறுமதிகளை உறுதிப்படுத்தல் (விலை உறுதிப்பாட்டினைப் பேணுதல்).
(2) இலங்கை ரூபாவின் நாணய மாற்று வீதத்தின் முகப்புப் பெறுமதியினை அல்லது உறுதிப்பாட்டைப் பாதுகாத்தல் (செலாவணி வீத உறுதிப்பாட்டைப் பேணுதல்).
(3) இலங்கையில் உயர்மட்டத்திலான உற்பத்தி, வேலை வாய்ப்பு மற்றும் உண்மை வருமானம் என்பவற்றை மேம்படுத்தி அதனைப் பேணுதல்.
(4) இலங்கையின் உற்பத்தியாக்க மூல வளங்களின் முழுமையான அபிவிருத்திக்கு ஊக்கமளித்து முன்னேற்றுதல்.
எனினும், மத்திய வங்கித்தொழிலின் உலகளாவிய போக்கினையும், பொருளாதாரத்தின் தாராளமயமாக்கலின் விளைவாக, பன்னாட்டு நிதியியல் சந்தைகளில் ஏற்பட்ட விரைவான மாற்றங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தின் கணிசமான முக்கியத்துவத்தையும் கருத்திற்கொண்டு 2000 ஆண்டில் மத்திய வங்கி நவீனமயப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தினை மேற்கொள்ள நேரிட்டதுடன் 2002இல் குறிக்கோள்கள் மாற்றம்செய்யப்பட்டன. அதற்கமைய, இரண்டு மையக் குறிக்கோள்கள் உருவாக்கப்பட்டன. அவையாவன:
(1) பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாட்டைப் பேணுதல்
(2) நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டைப் பேணுதல்
மத்திய வங்கியின் குறிக்கோள்களை முதன்மையாக எளிமைப்படுத்திய 2002இன் மேற்குறிப்பிடப்பட்ட திருத்தத்தைத் தவிர, நாணய விதிச் சட்டமானது கடந்த காலங்களில் முழுமையான மீளாய்வையும் திருத்தத்தையும் கொண்டிருக்கவில்லை. ஆகையினால், பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் மத்திய வங்கித்தொழிலின் ஒட்டுமொத்த பரிணாம வளர்ச்சி என்பவற்றின் விளைவாக உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கிணங்க நாணய விதிச் சட்டத்தின் பல எண்ணிக்கையிலான ஏற்பாடுகளை மீளாய்வுசெய்வதற்கான தேவைப்பாட்டுடன், 2023ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கிச் சட்டம் இயற்றப்பட்டது. மத்திய வங்கியின் சுயாதீனத்தை மேம்படுத்துவதற்கும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை அதிகரிப்பதற்கும் அத்துடன் இலங்கையில் தொடர்ச்சியாக விலை உறுதிப்பாட்டைப் பேணுவதற்கான நாணயக் கொள்கை கட்டமைப்பை மீளவலுப்படுத்துவதற்கும் இலங்கை மத்திய வங்கிச் சட்டம் விசேட ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது.
இதற்கமைவாக, இலங்கை மத்திய வங்கியின் குறிக்கோள்களும் மாற்றப்பட்டன.
(1) முதன்மைக் குறிக்கோள்: உள்நாட்டு விலை உறுதிப்பாட்டை அடைதலும் பேணுதலும்
(2) மற்றைய குறிக்கோள்: நிதியியல் முறைமை நிலையுறுதியை உறுதிப்படுத்தல்
முன்னாள் ஆளுநர்கள்
அஜித் நிவாட் கப்ரால்2021 - 2022 |
பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன்2019 – 2021 |
முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி2016 – 2019 |
அர்ஜூன மகேந்திரன்2015 – 2016 |
அஜித் நிவாட் கப்ரால்2006 - 2015 |
தேசமான்ய சுனில் மென்டிஸ்2004 - 2006 |
தேசமான்ய ஏ. எஸ். ஜயவர்த்தன1995 - 2004 |
எச். பீ. திசாநாயக1992 - 1995 |
முனைவர் எச். என். எஸ். கருணாதிலக1988 - 1992 |
முனைவர் டபிள்யு. இராசபுத்ரம்1979 - 1988 |
எச். ஈ. தென்னக்கோன்1971 - 1979 |
டபிள்யு. தென்னக்கோன்1967 - 1971 |
டி. டபிள்யு. ராஜபத்திரன1959 - 1967 |
சேர் ஆதர் ரணசிங்க1954 - 1959 |
தேசமான்ய என். யு. ஜயவர்த்தன1953 - 1954 |
ஜோன் எக்ஸ்ரர்1950 – 1953 (முதலாவது ஆளுநர்) |