தீர்மானம்
பொதுநோக்கு
தீர்மானமென்பது நிதியியல் முறைமை உறுதிப்பாட்டைப் பேணுவதற்கும் அத்தகைய நிதியியல் நிறுவனத்தின் முக்கிய தொழிற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கும் வைப்பாளர்களைப் பாதுகாப்பதற்கும் அத்துடன் பொதுமக்கள் நிதியங்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் நிதியியல் நிறுவனமொன்றின் முறிவடைதலை ஒழுங்கான முறையில் முகாமைசெய்வதற்கு தீர்மான அதிகாரசபையினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கொண்ட தொகுப்பு எனக் குறிப்பிடப்படுகின்றது.
தீர்மானத்தின் குறிக்கோள்கள் உரிமம்பெற்ற நிதியியல் நிறுவனமொன்றின் முறிவடைதல் நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டை பாதுகாக்கின்ற அதேவேளை நிதியியல் நிறுவனத்தின் முக்கிய தொழிற்பாடுகளின் தொடர்ச்சியைப் பேணுகின்ற விதத்தில் முகாமைசெய்யப்படுவதை உறுதிசெய்வதேயாகும். அரசாங்க நிதியியல் ஆதரவிற்கான தேவையினைக் குறைப்பதன் மூலம் பொதுமக்கள் நிதியங்களைப் பாதுகாப்பதற்கும்> வைப்பாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கும் அத்துடன் சொத்துக்களின் பெறுமதி தேவையின்றி அழிவதைத் தடுப்பதற்கும் தீர்மானம் முனைகின்றது. ஒட்டுமொத்தமாக> முறைமைசார் இடையூறுகளை குறைத்து நிதியியல் முறைமை உறுதிப்பாட்டைப் பாதுகாக்கின்ற ஒழுங்கானதும் வினைத்திறன்மிக்கதுமான தீர்மானச் செயன்முறையை வசதிப்படுத்துவதை இக்கட்டமைப்பு இலக்காகக் கொண்டுள்ளது.
ஆற்றல்வாய்ந்த மற்றும் நிலையான நிதியியல் முறைமையானது செயற்றிறன்மிக்க ஒழுங்குமுறை, வலுவான நிதியியல் நிறுவனங்கள், சிறந்ந ஆளுகை, நன்கு தொழிற்படும் சந்தைகள் மற்றும் தாக்குபிடிக்கும்தன்மைக் கொண்ட கொடுப்பனவு முறைமைகள் போன்றவற்றிலேயே தங்கியிருக்கின்றது. இந்த பரந்தளவிலான உறுதிப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தினுள், நிதியியல் உறுதிப்பாட்டிற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை ஆரம்ப இடைத்தலையீட்டினூடாக தடுப்பது, கண்டறிவது மற்றும் தணிப்பது அத்துடன் தேவையானவிடத்து முறிவடைந்த நிதியியல் நிறுவனங்களுக்கு ஒழுங்கான தீர்மானத்தை மேற்கொள்வது போன்றவற்றில் தீர்மான தொழிற்பாடு கவனம்செலுத்துகின்றது.
தீர்மானத்தின் சட்ட ரீதியிலான கட்டமைப்பு
2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கி சட்டத்தின் கீழ், இலங்கை மத்திய வங்கியானது தீர்மான அதிகாரசபையாக அங்கீகரிக்கப்பட்டு, இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்கமுறைப்படுத்தப்பட்டு மேற்பார்வைசெய்யப்படும் நிதியியல் நிறுவனங்களுக்கான, பொதுமக்கள்; நிதியங்களுக்கு இடர்நேர்வு ஏற்படாத வகையில், தீர்மான நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தீர்மானத் திட்டமிடல் மற்றும் நிறைவேற்றுவதில் தகவலைப் பகிர்தல் மற்றும் ஒத்துழைப்பை என்பவற்றுக்கு வெளிநாட்டு மேற்பார்வையாளர்கள் மற்றும் தீர்மான அதிகாரிகளுடன் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கு இலங்கை மத்திய வங்கி சட்டம் இலங்கை மத்திய வங்கிக்கு மேலும் அதிகாரமளித்துள்ளது.
உரிமம்பெற்ற வங்கிகளுக்கான விரிவான தீர்மானக் கட்டமைப்பானது 2023 செத்தெம்பர் 15 அன்று இயற்றப்பட்டு 2023 நவெம்பர் 15 தொடக்கம் நடைமுறைக்குவந்த 2023ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வங்கித்தொழில் சட்டத்தின் 57ஆம் பிரிவின் பிரகாரம், சட்டத்தின் I மற்றும் IIஆம் பகுதிகளின் பிரயோகத்தை உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளுக்கும் நீடிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி 2025 ஏப்பிறல் 16 அன்று திகதியிடப்பட்ட 2432/02ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் கட்டளையொன்றை வெளியிட்டது. இதற்கமைவாக, தொடர்ந்தியங்குவதாக வைப்பாளர்களை பாதுகாத்து, ஒட்டுமொத்த நிதியியல் முறைமை உறுதிப்பாட்டையும் பாதுகாக்கின்ற நிதியியல் நிறுவனவத்தை மீளமைக்கின்ற குறிக்கோளுடன், உரிமம்பெற்ற வங்கி அல்லது உரிமம்பெற்ற நிதிக் கம்பனி மூலதனம், திரவத்தன்மை, கடன்தீராற்றலற்ற தன்மை அல்லது ஏனைய இடர்நேர்வுகளை எதிர்கொள்கின்றபோது இலங்கை மத்திய வங்கி மற்றும் பொருத்தமானவிடத்து அரசாங்கம் உரிய நேரத்தில் தீர்மான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வங்கித்தொழில் சட்டம் நியதிச் சட்ட அடிப்படையினை வழங்குகின்றது. நிதியியல் நிறுவனமொன்றுக்கு தீர்மானத்தை மேற்கொள்கின்றபோது, வங்கித்தொழில் சட்டத்தின் 14ஆம் பிரிவானது இலங்கை மத்திய வங்கியின் குறிப்பிட்ட தீர்மானத் தத்துவங்களை குறித்துக்காட்டுகின்றது. இந்த ஏற்பாட்டின் கீழ், தேவையானவாறு முக்கியத் தொழிற்பாடுகளின் தொடர்ச்சியை உறுதிசெய்வதற்கு நிதியியல் நிறுவனத்தை பொறுப்பேற்பதற்கு> அதன் பங்குகளின் பரிமாற்றத்தை செயலுறுத்துவதற்கு, அத்துடன் தெரிவுசெய்யப்பட்ட அல்லது அனைத்து சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களைப் கைமாற்றுவதற்கு நிர்வாக தத்துவக்காரரை நியமிப்பதற்கு இலங்கை மத்திய வங்கிக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவேயுள்ள அல்லது புதிய பங்குடைமையாளர்களினூடாக இலங்கை மத்திய வங்கி நிதியியல் நிறுவனத்தை மீள்மூலதனமயப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் நடைமுறைப்படுத்தலாம், அல்லது தேவையானவிடத்து இடைக்கால வங்கியைத் தாபிப்பதற்கான மூலதனத்தை வழங்குமாறு நிதி அமைச்சரைக் கோரலாம். இதற்குமேலதிகமாக, அத்தகை இடைத்தலையீட்டை நியாயப்படுத்தும் வகையில் இலங்கை மத்திய வங்கியினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, தீர்மானச் செயன்முறைக்கு துணையளிப்பதற்கு அமைச்சரிடமிருந்து தற்காலிக நிதி உதவியினை இலங்கை மத்திய வங்கி கோரலாம்.
நிலையுறுதிக்கு தீர்மானம் எவ்வாறு ஆதரவளிக்கின்றது?
- நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் நம்பகமான தெரிவுகள் இடம்பெறும் விதத்தில் இலங்கை மத்திய வங்கி உரிமம்பெற்ற வங்கிகளுக்கும் மற்றும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளுக்கான தீர்மான திட்டமிடலை முன்னேற்றகரமாக மேற்கொள்கின்றது.
- இடர்நேர்வுகள் தோற்றம்பெறுகின்ற போது (மூலதனம், திரவத்தன்மை, கடன்தீராற்றலற்ற தன்மை அல்லது ஏனையவை), நிதியியல் நிறுவனத்தை நிலையுறுதிப்படுத்துவதற்கும், சாத்தியமாயின் புத்துயிரளிப்பதற்கும் உடனடி வழிமுறைகளை இலங்கை மத்திய வங்கி நடைமுறைப்படுத்த முடியும்.
- இந்நடவடிக்கைகள், வைப்பாளர்களைப் பாதுகாப்பதையும், முழுமையான முறைமையின் மீதான ஆர்வலர்களின் நம்பிக்கையை பேணுவதையும் நோக்கமாகக் கொள்ளும் அதேவேளை, பொதுமக்கள் நிதிக்கு குறிப்பிடத்தக்க இடர்நேர்வு ஏற்படாமல் தவிர்க்கின்றது.
- இக்கட்டமைப்பு வெளிநாட்டு மேற்பார்வையாளர்கள் மற்றும் தீர்மான அதிகாரிகளுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதையும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இயலுமைப்படுத்துகின்றது.
இலங்கை மத்திய வங்கியின் தீர்மான அதிகாரத்தின் கீழ் இருப்பவர்கள் யார்?
உரிமம்பெற்ற வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள்:
இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் நியதிகளுக்கமைவாக, நிதியியல் நிறுவனங்களுக்கான தீர்மான அதிகாரியாக இலங்கை மத்திய வங்கி செயல்படும் அதேவேளை, வங்கித்தொழில் விசேட ஏற்பாடுகள் சட்டமும் உரிமம்பெற்ற வங்கிகளுக்கான தீர்மான அதிகாரியாக இலங்கை மத்திய வங்கியை நிறுவுகின்றது. வங்கித்தொழில் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் தீர்மான ஏற்பாடுகளின் (பகுதிகள் I மற்றும் II) உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளுக்கு அண்மையில் நீடிக்கப்பட்டதுடன், இலங்கை மத்திய வங்கியின் தீர்மான கட்டமைப்பு தற்போது உரிமம்பெற்ற வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் ஆகிய இரண்டையும் முறையாக உள்ளடக்கி, தீர்மானக் கட்டமைப்பின் அனைத்தையுமுள்ளடக்கியத்தன்மையும் ஒத்திசைவையும் அதிகரித்துள்ளது.
நிபுணர்கள் குழாமினை நியமித்தல்
வங்கித்தொழில் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ், உரிமம்பெற்ற வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் என்பவற்றிற்கான தீர்மான வழிமுறைகளை இலங்கை மத்திய வங்கி திட்டமிட்டு நடைமுறைப்படுத்துகின்றது. இவ்வழிமுறைகளை செயல்திறன்மிக்க வகையில் நிறைவேற்றுவதற்காக, இலங்கை மத்திய வங்கி சிறப்பு நிபுணர்கள் குழாமை அமைத்து, ஆர்வத்தை வெளிப்படுத்தல் வாயிலாக சுயாதீன நிபுணர்களை ஈடுபடுத்துகின்றது.
ஆர்வத்தை வெளிப்படுத்துவதற்கான அழைப்பு, தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் ஆளும் சபையின் ஒப்புதல் என்பவற்றினூடாக குழுமங்கள் அமைக்கப்படுவதுடன், ஒவ்வொரு ஈடுபாட்டிற்குமான சுயாதீனத்தன்மை மீள்சரிபார்க்கப்பட்டு, ஆய்வெல்லைகள் வழங்கப்படுகின்றன.
(1)சுயாதீன தொழில்சார் விலைமதிப்பீட்டாளர்கள் குழுமம்
முறிவடையும் அல்லது முறிவடையக்கூடிய வாய்ப்புள்ள நிதியியல் நிறுவனங்களை நிர்ணயிப்பதற்கும், தீர்மானத் தெரிவுகளை மதிப்பீடு செய்வதற்கும் அத்துடன் ‘தீர்த்துக்கட்டுதலை விடவும் எந்தக் கடன்கொடுநரும் மோசமான நிலைக்கு செல்லக்கூடாது’ எனும் நோக்கினைப் பரீட்சிப்பதற்கும் பயன்படுத்தப்படும் முன்மதியுடைய, யதார்த்தமான மற்றும் காலத்திற்கேற்ற மதிப்பீடுகளை வழங்குவதற்கு 16ஆம் பிரிவின் கீழ் இக்குழுமம் அமைக்கப்படும். வங்கித்தொழில் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் 16(5)ஆம் பிரிவினை அநுசரித்து, 2025.08.06ஆம் திகதியன்று நடைமுறைக்கு வரும் வகையில் உரிமம்பெற்ற வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் என்பவற்றின் தீர்மானத்துடன் தொடர்புடைய விலைமதிப்பீடுகளை மேற்கொள்ளும் நோக்கில், சுயாதீன தொழில்சார் விலைமதிப்பீட்டாளர்கள் குழுமத்தை நியமிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளும் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. நியமிக்கப்பட்ட குழுமத்தின் விபரங்களை இங்கே பெற்றுக்கொள்ளலாம்.
(2)நிருவாகிக் குழுமம் (நியமிக்கப்படவேண்டியவை)
நிதியியல் நிறுவனமொன்று தீர்மானத்தில் நுழையும் போது உடனடியாக பணியமர்த்தக்கூடிய நியதிச்சட்ட முகாமையாளர்களை ஏற்பாடுசெய்வதற்கு வங்கித்தொழில் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் 18ஆம் பிரிவின் கீழ் இக்குழுமம் தாபிக்கப்பட வேண்டும். நியமிக்கப்பட்டவர்கள் தொழிற்பாடுகளை நிலையுறுதிப்படுத்தி, பெறுமதியை பாதுகாத்து, இலங்கை மத்திய வங்கி ஒப்புதலளித்த உபாயத்தை நடைமுறைப்படுத்தி, குறிக்கப்பட்ட காலவரையறைகளுக்குள் அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். தெரிவுச் செயன்முறை தகுதியும் பொருத்தப்பாடும், சுயாதீனத்தன்மை மற்றும் நிரூபிக்கப்பட்ட தலைமைத்துவப்பண்பு என்பவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, மேலும் ஒவ்வொரு நியமனமும் தெளிவான பொறுப்பாணை, நிறைவேற்றவேண்டிய பணிகள் மற்றும் முரண்பாட்டு பரிசோதனை என்பவற்றை உள்ளடக்கியிருக்கும்.
(3)ஏற்பாட்டாளர்கள் குழுமம் (நியமிக்கப்படவேண்டியவை)
ஏற்பாட்டாளர்கள் குழுமம், பொருத்தமான பெறுவர்களை அல்லது விலைக்குறிப்பீட்டாளர்களை அடையாளப்படுத்தி ஈடுபடுத்துவதன் மூலம் தீர்மானக் கொடுக்கல்வாங்கல்களை வசதிப்படுத்துவதில் இலங்கை மத்திய வங்கிக்கு ஆதரவளிக்கும். அவர்களது வகிபாகமானது, முதன்மையாக சொத்துகள் மற்றும் பொறுப்புக்களின் கைமாற்றல், பங்குகளின் கைமாற்றல் அல்லது ஒன்றிணைப்புக்களை நடைமுறைப்படுத்துதல் போன்ற தீர்மானக் கருவிகளைப் பயன்படுத்துவதுடன் தொடர்புபட்டு இச்செயன்முறைகள் செயல்திறன்மிக்கவகையிலும் வெளிப்படையாகவும் கொண்டுநடாத்தப்படுவதை உறுதிப்படுத்தும்.
தீர்மானங்கள்
தீர்மானத்துடன் தொடர்புடைய சட்டங்கள், பணிப்புரைகள், ஒழுங்குவிதிகள், ஊடக அறிவித்தல்கள் மற்றும் ஊடக அறிக்கைகள் என்பவற்றிற்கான இணைப்புக்களை இப்பிரிவு வழங்குகின்றது.
சட்டங்கள்:
2023ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்
பணிப்புரைகள்:
29.10.2024 2024ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்ட பணிப்புரைகள்: உரிமம்பெற்ற வங்கிகளுக்கான தீர்மான திட்டமிடலுக்கான தரவு மாதிரியுரு
17.09.2025 2025ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்ட பணிப்புரைகள்: உரிமம்பெற்ற வங்கிகளுக்கான மீட்புத் திட்டங்கள்
சுற்றறிக்கைகள்:
வர்த்தமானி அறிவித்தல்கள்:
16.04.2025 2025 ஆம் ஆண்டு ஏப்பிறல் மாதம் 16 ஆம் திகதிய 2432/02 ஆம் இலக்க அதி விசேஷ வர்த்தமானிப் பத்திரிகை: 2023 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 57 ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை
ஊடக அறிக்கைகள்:
ஊடக அறிவித்தல்:
எம்மைத் தொடர்புகொள்க
முகவரி :
டி ஆர் கருணாரத்ன
பணிப்பாளர்
வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானங்கள் திணைக்களம்
இலங்கை மத்திய வங்கி,
இல.30, சனாதிபதி மாவத்தை,
கொழும்பு 01,
இலங்கை
தொலைபேசி : +94112477261
தொலைநகல் : +94112477748
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்








