கொடுகடன் தகவல்
வங்கிகள், நிதிக் கம்பனிகள் மற்றும் குத்தகைக் கம்பனிகளிடமிருந்து ஆட்கள்/ நிறுவனங்களினால் பெறப்பட்ட கடன்கள் பற்றிய தகவல்களின் கிடைப்பனவு வினைத்திறன்மிக்க கொடுகடன் சந்தைக்கு முக்கியமானதொன்றாகும். கடன்பாட்டாளரொருவரின் கொடுகடன் (கடன்) பற்றிய வரலாறு நிதி நிறுவனங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும் பொழுது அவர்கள் வாடிக்கையாளரின் கொடுகடன் நம்பகத்தன்மை பற்றி சிறந்த மதிப்பீடொன்றினை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இது கடன்களை செய்முறைப்படுத்துவதற்கான செலவினையும் நேரத்தினையும் குறைக்கும். மேலும், இது கடன்பாட்டாளரின் ஒழுக்கவியலை மேம்படுத்துவதுடன் ஒரே நேரத்தில் பல நிதியியல் நிறுவனங்களில் கடன்பாட்டாளர்கள் அளவுக்கு மீறி கடன்படுவதனையும் தடைசெய்யும். இந்நன்மைகள் நாட்டில் சிறந்த கொடுகடன் கலாச்சாரமொன்றினை மேம்படுத்தவும் உறுதியானதும் ஆற்றல் வாய்ந்ததுமான நிதியியல் முறைமையொன்றிற்கும் பங்களிக்கும்.
மேற்குறிப்பிட்டவற்றிற்கு வசதியளிப்பதற்காக, கடன்வழங்கல் நிறுவனங்களிலிருந்து கடன்பெற்றவர்களின் தகவல்களைத் திரட்டுவதற்காக 1995ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க சட்டத்தினாலும் 2008ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான 1990ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க இலங்கை கொடுகடன் தகவல் பணியகச் சட்டத்தின் கீழ், கொடுகடன் தகவல் பணியகம் 1990இல் நிறுவப்பட்டது. கொடுகடன் தகவல் பணியகம் கொடுகடன் நிறுவனங்களில் கடன் பெற்றவர்களின் நாளது வரை இற்றைப்படுத்தப்பட்ட கொடுகடன் வரலாற்றினை இலத்திரனியல் ரீதியாக முகாமைப்படுத்தி வருகிறது.
கொடுகடன் தகவல் பணியகம் பாதுகாப்பான கொடுக்கல்வாங்கல் பதிவேடொன்றினையும் பேணி வருகின்றது.