Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கி-ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம்-ஆசிய பசுபிக் பிரயோக பொருளியல் அமைப்பு என்பனவற்றிற்கிடையிலான இணையவழி பேரண்ட பொருளாதார மாநாட்டிற்கு இலங்கை மத்திய வங்கி இணை அனுசரணை வழங்கியது

இலங்கை மத்திய வங்கி இலங்கை மத்திய வங்கி-ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம்-ஆசிய பசுபிக் பிரயோக பொருளியல் அமைப்பு என்பனவற்றிற்கிடையிலான இணையவழி பேரண்ட பொருளாதார மாநாட்டிற்குத் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக 2021 செத்தெம்பர் 30ஆம் திகதி அன்று ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம் மற்றும் ஆசிய பசுபிக் பிரயோக பொருளியல் அமைப்புடன் கூட்டிணைந்து அனுசரணை வழங்கியது. இவ்வாண்டிற்கான கருப்பொருள் பேரண்ட பொருளாதார உறுதிப்பாட்டின் தோற்றம் பெற்றுவரும் பிரச்சனைகள் என்பதாகும்.

‘A Step by Step Guide to Doing Business in Sri Lanka’ நூல் வெளியீடு

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் ‘இலங்கையில் வியாபாரம்; செய்வதற்கான படிப்படியான வழிகாட்டல்’ நூலின் ஒன்பதாவது தொடர் பதிப்பு தற்பொழுது பொதுமக்களுக்காக ஆங்கில மொழியில் கிடைக்கப்பெறுகின்றது. வியாபாரச் சமூகத்திற்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் தேவையான தகவல்களை உள்ளடக்குகின்ற இந்நூல் அத்தகைய தகவல்களை பெற்றுக்கொள்வதில்  அவர்களின் நேரத்தையும் செலவையும்  மீதப்படுத்த வசதியளிக்கின்றது. இலங்கையில் தொழில்முயற்சியொன்றை தொடங்குதல், தொழிற்படுத்தல் மற்றும் மூடுதல் போன்றவற்றிற்கு ஏற்புடைய வலுவிலுள்ள அனைத்து ஒழுங்குவிதிகளையும் வாய்ப்புமிக்க தொழில்முயற்சியாளர்களுக்கு உபயோகமான ஏனைய தகவல்களையும்  தனியொரு மூலமாக   இக்கையேடு தன்னகத்தே கொண்டுள்ளது.

“இலங்கையின் சமூக பொருளாதாரத் தரவு – 2021” இன் வெளியீடு

இலங்கை மத்திய வங்கியினால் வருடாந்தம் வெளியிடப்படும் தரவுக்கையேடாகிய “ இலங்கையின் சமூக பொருளாதாரத் தரவு – 2021” தற்போது பொதுமக்களின் தகவலுக்காக கிடைக்கக்கூடியதாகவுள்ளது. தற்போதைய தரவுக்கையேடு தொடரின் 44வது தொகுதியாகும்.

இக் கையேடானது 14 தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, நாட்டின் தோற்றப்பாடு, முதன்மைப் பொருளாதாரக் குறிக்காட்டிகள், நாட்டின் ஒப்பீடுகள், சமூக பொருளாதார நிலைமைகள், மனித வளங்கள், தேசிய கணக்குகள், வேளாண்மை, கைத்தொழில், பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு, விலைகள் மற்றும் கூலிகள், வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் சுற்றுலா, வெளிநாட்டு நிதி, அரச நிதி அத்துடன் பணம், வங்கித்தொழில் மற்றும் நிதி போன்ற தகவல்களைக் உள்ளடக்கியுள்ளது. இக் கையேடானது, நடைமுறைத் தகவல்களின் சமூகப் பொருளாதார தரவுகளின் பரந்தளவிலான தரவுகளை சுருக்கமான வடிவத்தில் வழங்குவதால், கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள், கல்வியியலாளர்கள், தொழில்சார் நிபுணர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் பயன்மிக்க உசாத்துணை மூலமாக அமையும்.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2021 செத்தெம்பரில் 5.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது

 கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 ஓகத்தின் 6.0 சதவீதத்திலிருந்து 2021 செத்தெம்பரில் 5.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கு, 2020 செத்தெம்பரில் நிலவிய உயர் தள புள்ளிவிபரத் தாக்கம் காரணமாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து,  உணவுப் பணவீக்கம்,  (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஓகத்தின் 11.5 சதவீதத்திலிருந்து 2021 செத்தெம்பரில் 10.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை, உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஓகத்தின் 3.5 சதவீதத்திலிருந்து 2021 செத்தெம்பரில் 3.8 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 ஓகத்தின் 4.3 சதவீதத்திலிருந்து 2021 செத்தெம்பரில் 4.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.

பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டலை அறிவித்தல்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் திரு. அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் ‘பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டலினை’ 2021 ஒத்தோபர் 01ஆம் திகதி அறிவிக்கவுள்ளார். இந்நிகழ்வானது இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இடம்பெறுவதுடன் மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படும்.

நிலவுகின்ற கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுச் சூழல் மற்றும் தேவையான சமூக இடைவெளியினைக் கடைப்பிடித்தல் என்பவற்றின் காரணமாக பங்குபற்றுதலானது அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், ஆளுநரினால் மேற்கொள்ளப்படும் விளக்கவுரையானது யூடியூப் (YouTube)மற்றும் முகநூல் (Facebook) என்பவற்றின் ஊடாக நேரலையாக ஒளிபரப்பப்படும். 

வெளிநாட்டுத் துறை உறுதிப்பாடு மற்றும் ஒட்டுமொத்த நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டிற்கு ஏற்றுமதிப் பெறுகைகளின் மீளனுப்புதலினதும் மாற்றுதலினதும் முக்கியத்துவம்

இலங்கையின் வணிகப்பொருள் ஏற்றுமதித் துறை உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட 2020 காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2021இல் குறிப்பிடத்தக்க மேம்பாடொன்றினைக் காண்பித்துள்ளது. அண்மைய சுங்கத் தரவுகளுக்கமைய, 2020இல் பதிவுசெய்யப்பட்ட மாதாந்த சராசரியான ஐ.அ.டொலர் 837 மில்லியனுடன் ஒப்பிடுகையில், ஏற்றுமதி வருவாய்கள் 2021 ஓகத்து  இறுதியிலுள்ளவாறாக எட்டு மாத காலப்பகுதியின் சராசரியாக ஐ.அ.டொலர் 985 மில்லியனைக் கொண்டுள்ள வேளையில், சராசரி வருவாய்கள் 2021 யூன் - ஓகத்து  காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 1,064 மில்லியன்  பெறுமதியாக பதிவுசெய்யப்பட்டது. இலங்கை உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் பாரிய வெளிநாட்டுச் செலாவணி ஈட்டுநராக வணிகப்பொருள் ஏற்றுமதித் துறை (வெவ்வேறான உற்பத்திகள் உள்ளடங்கலாக) காணப்படுவதால் இவ் அபிவிருத்தி பாராட்டத்தக்கதொன்றாகும்.

Pages

சந்தை அறிவிப்புகள்