கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2022 நவெம்பரில் தொடர்ச்சியாக இரண்டாவது மாதத்திற்கும் வீழ்ச்சியடைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 ஒத்தோபரின் 66.0 சதவீதத்திலிருந்து 2022 நவெம்பரில் 61.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.  அதையொத்த போக்கினைத் தொடர்ந்து, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 ஒத்தோபரின் 85.6 சதவீதத்திலிருந்து 2022 நவெம்பரில் 73.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த, அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 ஒத்தோபரின் 56.3 சதவீதத்திலிருந்து 2022 நவெம்பரில் 54.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

2022 ஒத்தோபரில் அவதானிக்கப்பட்ட கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாதாந்த மாற்றத்தில் வீழ்ச்சியானது தொடர்ந்தும் இடம்பெற்று, 2022 நவெம்பரில் 0.50 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. 0.53 சதவீதமாகவிருந்த உணவு வகையிலுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த வீழ்ச்சி இதற்கு பிரதானமாகப் பங்களித்தது. அதற்கமைய, உணவு வகையினுள் கோழி இறைச்சி, உடன் மீன் மற்றும் கருவாடு என்பவற்றின் விலைகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிகள் அவதானிக்கப்பட்டன.  எனினும், பால் மா விலைகள் மாதகாலப்பகுதியில் அதிகரித்தன. அதேவேளை, நலம் (தனியார் வைத்தியசாலைகளுக்கான கொடுப்பனவுகள், மருத்துவ/மருந்துப் பொருட்கள் கொள்வனவு), ஆடைகள் மற்றும் காலணி துணை வகைகளில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள்  காரணமாக 2022 நவெம்பரில் உணவல்லா வகை மாதாந்த அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தது. இருந்தபோதிலும், உணவல்லா வகையில் ஒட்டுமொத்த மாதாந்த அதிகரிப்பு மிதமடைவதற்குப் பங்களித்து, போக்குவரத்து (பெற்றோல் மற்றும் டீசல்) மற்றும் வீடமைப்பு, நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள் (பராமரித்தல்/மீள்கட்டுமானம், திரவப் பெற்றோலிய வாயு) துணை வகைகளில் உள்ள பொருட்களின் விலைகள் 2022 நவெம்பரில் வீழ்ச்சியடைந்தன.

அதேவேளை, ஆண்டுச் சராசரிப் பணவீக்கம், 2022 ஒத்தோபரின் 38.3 சதவீதத்திலிருந்து 2022 நவெம்பரில் 42.6 சதவீதத்திற்கு உயர்வடைந்தது.

பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 ஒத்தோபரின் 49.7 சதவீதத்திலிருந்து 2022 நவெம்பரில் 49.4 சதவீதத்திற்கு குறைவடைந்த அதேவேளை, ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம், 2022 ஒத்தோபரின் 27.8 சதவீதத்திலிருந்து 2022 நவெம்பரில் 31.4 சதவீதத்திற்கு அதிகரித்தது.

முழுவடிவம்

Published Date: 

Wednesday, November 30, 2022