Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2021 செத்தெம்பர்

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2021 செத்தெம்பரில் விரிவடைந்தன

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2021 ஓகத்துடன் ஒப்பிடுகையில் 9.2 சுட்டெண் புள்ளிகளால் அதிகரித்து 2021 செத்தெம்பரில் 54.3 ஆக மீளத்திரும்பியது. புதிய கட்டளைகள் மற்றும் தொழில்நிலை துணைச் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட குறிப்பிடத்தக மேம்பாடுகள் இவ்வதிகரிப்பிற்குப் பிரதான காரணமாக அமைந்தன.

பணிகள் கொ.மு.சுட்டெண், 2021 ஓகத்தில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சியின் பின்னர் 2021 செத்தெம்பரில் 52.2 இனைக் கொண்ட சுட்டெண் பெறுமதியினை அறிக்கையிட்டு வளர்ச்சி பாதையில் நுழைந்தது. இதற்கு, புதிய வியாபாரங்கள், நிலுவையிலுள்ள பணிகள் மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் துணைச் சுட்டெண்களில் அதிகரிப்புக்கள் துணையளித்தன.

நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக் குழுவினை மீளமைத்தல்

நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக் குழுவானது 2021 ஒத்தோபர் 6ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் விதத்தில் நிதியியல் துறையில் புகழ்பெற்ற ஆளணியினரைக் கொண்டு மீளமைக்கப்பட்டுள்ளது. நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக் குழுவின் தலைவராக வரையறுக்கப்பட்ட லங்கா கிளியர் (பிறைவேட்)  லிமிடெட்டின்  தலைவர்  முனைவர் கென்னத் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இலங்கை நிதி நிறுவனங்கள் அமைப்பின் தலைவர் திரு. நிரோஷன் உதகே, கொடுகடன் தகவல் பணியகத்தின் பணிப்பாளர் / பொது முகாமையாளர் திரு. சி என் எஸ் என் அந்தோனி, வரையறுக்கப்பட்ட இலங்கை வங்கிகள் அமைப்பின் (உத்தரவாத) தலைவர் திரு. எல் எச் ஏ லக்ஷ்மன் சில்வா, பிரைஸ்வோட்டர்ஹவுஸ்கூப்பர்ஸின் முகாமைத்துவப் பங்காளர் திரு. சுஜீவ முதலிகே, இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு. சஞ்ஜய பண்டார, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் திரு. விஷகோவிந்தசாமி, சனாதிபதி சட்டத்தரணி திரு. குஷான் டி அல்விஸ், கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் திரு. சாலிய விக்ரமசூரிய, எல்ஓஎல்சி ஹோல்டிங்ஸ் பிஎல்சி இன் குழும முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. கபில ஜயவர்த்தன மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி இன் தலைவர் திரு. கிரிஷான் பாலேந்திரன் ஆகியோர் மீளமைக்கப்பட்ட நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக்குழுவின் உறுப்பினர்களாவர். நிதியியல் முறைமை உறுதிப்பாடு மற்றும் நிதியியல் துறை அபிவிருத்தி மீதான கொள்கைகளை வகுப்பதில் மத்திய வங்கிக்கு உதவும் பொருட்டு கருத்துக்களையும் ஆலோசனைகiயும் வழங்குவதற்கு வழிவகுக்கின்ற கலந்துரையாடல்களை வசதிபடுத்தும் நோக்கத்திற்காக தாபிக்கப்பட்ட நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக்குழுவானது இலங்கை மத்திய வங்கியில் தொழிற்படுகின்ற உயர் மட்ட குழுவொன்றாகும். இலங்கை மத்திய வங்கியின் பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்பு திணைக்களம் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக்குழுவின் செயலகமாக தொழிற்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2021 ஒத்தோபர் 13ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 5.00 சதவீதம் 6.00 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. பேரண்டப் பொருளாதார நிலைமைகளையும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் கவனமாக பரிசீலனையில் கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது. பொருத்தமான வழிமுறைகளுடன் நடுத்தரகாலத்தில் இலக்கிடப்பட்ட மட்டங்களில் பணவீக்கத்தினைப் பேணுகின்ற அதேவேளை எதிர்வரவுள்ள காலத்தில் பொருளாதாரம் அதன் வாய்ப்பினை அடைந்துகொள்வதற்கு ஆதரவளிப்பதற்கான அதன் கடப்பாட்டினை சபை மீளவும் வலியுறுத்தியது.

சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி - நிபந்தனையின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட நோக்கமொன்றுக்காக வியாபாரத்தினை மீள ஆரம்பித்தல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது (நாணயச் சபை) “வங்கியல்லா நிதியியல் துறையின் ஒருங்கிணைப்பிற்கான பிரதான திட்டத்தினுள்” ஒன்றினுள் கம்பனியினை இணைத்துக்கொள்ளும் சாத்தியப்பாட்டினைக் கண்டறியும் நோக்கத்திற்காக 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 31(5)(அ)ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம் 2021.10.13 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் வரையறுக்கப்பட்ட ஆறு (06) மாதங்களைக் கொண்ட காலப்பகுதிக்கு தொழிலை மீளத் தொடங்குவதற்கு சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியினை அனுமதிக்கின்ற கட்டளையொன்றினைப் பிறப்பித்துள்ளது.

சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் விவகாரங்களை தொடர்ந்தும் முகாமை செய்வதற்கும் மேற்குறித்த செயன்முறையினை தொடங்கி வசதிப்படுத்துவதற்கும் நாணயச் சபையினால் நியமிக்கப்பட்ட முகாமைத்துவக் குழாத்திற்கு (குழாம்) அதிகாரமளிக்கப்பட்டுள்ள அதேவேளை சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் பணிப்பாளர்கள், வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்தின் பணிப்பாளரினால் அத்துடன்/அல்லது குழாத்தினால் அதிகாரமளிக்கப்படவுள்ள தொழிற்பாடுகளை மாத்திரம் கொண்டுநடாத்துதல் வேண்டும்.

2022இல் முதிர்ச்சியடைகின்ற இலங்கையின் நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் விலைக் கழிவுகளில் கோரப்பட்ட போதிலும் கொள்வனவுக்காக போதியளவில் கிடைக்கப்பெறவில்லை

இலங்கை மத்திய வங்கியினால் 2021.10.01 அன்று முன்வைக்கப்பட்ட “பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாத வழிகாட்டல்” இன் பிரகாரம் நாட்டிற்கான பன்னாட்டு முறி முதலீட்டுத் தொகையானது அடுத்துவருகின்ற மூன்று வருடங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஏறத்தாழ 10 சதவீதத்திற்குப் படிப்படியாகக் குறைக்கப்படவுள்ளது.  இக்குறிக்கோளுக்கமைவாக, 2021 செத்தெம்பர் காலப்பகுதியில் எதிர்வருகின்ற 2022 இன் சனவரி மற்றும் யூலை நாட்டிற்கான பன்னாட்டு முறி முதிர்ச்சிகளின் வர்த்தகப்படுத்தலில் கழிவுசெய்யப்பட்ட விலைகளை அவதானத்திற்கொண்டு, பல எண்ணிக்கையான பன்னாட்டு வங்கிகளுடனும் முதலீட்டு வங்கிகளுடனுமான ஆலோசனையுடன் மீள்கொள்வனவு நடைமுறையொன்றினை நிறைவேற்றும் சாத்தியப்பாட்டினை மத்திய வங்கி கண்டறிந்தது.

வெளிநாட்டு பணவனுப்பல்களை வசதிப்படுத்துவதற்கு "SL-Remit" மொபைல் செயலியினை நடைமுறைப்படுத்தல்

வெளிநாட்டு பணவனுப்பல் உட்பாய்ச்சல்களை அதிகரிக்கின்ற அதேவேளை முறைசாரா வழிகளின் பயன்பாட்டை ஊக்கமிழக்கச் செய்யும் குறிக்கோளுடன் புதிய,  குறைந்த செலவு பணவனுப்பல் வழிகளை அறிமுகப்படுத்துவதற்கான தேவையினை இனங்கண்டு, இலங்கைக்கென புதிய பணவனுப்பல் வழிகளை ஆய்வுசெய்து ஆலோசிப்பதற்கும் பணவனுப்பல் செய்யப்படுகின்ற செலவினைக் குறைப்பதன் மீது பரிந்துரைகளை மேற்கொள்வதற்கும் இலங்கை மத்திய வங்கி பணியாற்றுக் குழுவொன்றினை நியமித்தது.

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, சம்பத் வங்கி, கொமர்ஷல் பாங்க் ஒவ் சிலோன் பிஎல்சி, ஹட்டன் நஷனல் வங்கி, ஹொங்கொங் அன்ட் சங்காய் வங்கி, கார்கில்ஸ் வங்கி, டயலொக் எக்ஸியாட்டா, மொபிட்டல் (பிறைவேட்) லிமிடெட் மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பவற்றிலுள்ள அனுபவம்பெற்ற தொழில்சார் நிபுணர்களை இப்பணியாற்றுக் குழு உள்ளடக்குகின்றது.

Pages

சந்தை அறிவிப்புகள்