Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை உயர்த்துகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2023 மாச்சு 03ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் 2023 மாச்சு  03ஆம் நாள் வியாபார முடிவிலிருந்து முறையே 15.50 சதவீதத்திற்கும் 16.50 சதவீதத்திற்கும் 100 அடிப்படைப் புள்ளிகளினால் உயர்த்துவதற்குத் தீர்மானித்துள்ளது. 

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2023 பெப்புருவரியில் தளர்வடைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 சனவரியின் 51.7 சதவீதத்திலிருந்து 2023 பெப்புருவரியில் 50.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் இவ்வீழ்ச்சியானது, 2023 சனவரியில் இலங்கை மத்திய வங்கியினால் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க வேகக்குறைவுப் பாதைக்கு இசைவாக பரந்தளவில் காணப்படுகின்றது.

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2023 சனவரி

வணிகப்பொருள் வர்த்தகக் கணக்குப் பற்றாக்குறையானது ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் 2023 சனவரியில் சுருக்கமடைந்து காணப்பட்டது.

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 சனவரியில் ஏற்றுமதி வருவாய்கள் வீழ்ச்சியடைந்த அதேவேளையில் இறக்குமதிச் செலவினமானது தொடர்ந்தும் மிதமடைந்து காணப்பட்டது..

தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் என்பன 2023 சனவரியில் தொடர்ந்தும் அதிகரித்தன.

மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2023 சனவரி இறுதியில் வலுவடைந்த அதேவேளையில் செலாவணி வீதமானது 2023 சனவரி காலப்பகுதியில் தொடர்ந்தும் நிலையாகக் காணப்பட்டது.

2023 சனவரி காலப்பகுதியில் அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் சிறியளவிலான தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்த அதேவேளையில் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை சிறியளவிலான தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தன.

காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி – 2022இன் இரண்டாம் அரையாண்டு

கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2022இன் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியின் போது ஆண்டுக்காண்டு அடிப்படையில் 14.8 சதவீதத்தினால்  205.2 ஆக அதிகரித்தது. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்து துணைக் குறிகாட்டிகளும் அதாவது, வதிவிடக் காணி விலைமதிப்பீட்டு குறிகாட்டி, வர்த்தகக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி ஆகிய அனைத்தும் துணைக் குறிகாட்டிகளும் ஒட்டுமொத்த அதிகரிப்பிற்குப் பங்களித்துள்ளன.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – 2023 சனவரி

2023 சனவரியில் பணிகள் நடவடிக்கைகள் சிறிதளவு விரிவடைந்த அதேவேளை தயாரித்தல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக சீர்குலைந்ததை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் எடுத்துக்காட்டின.

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2023 சனவரியில் மாதத்திற்கு மாதம் அடிப்படையில் தயாரிப்பு நடவடிக்கைகளில் தொடர்ச்சியான பின்னடைவினை சமிக்ஞைப்படுத்தியது. அதற்கமைய, நிரம்பலர் விநியோக நேரம் தவிர, அனைத்து துணைச் சுட்டெண்களிலும் வீழ்ச்சிகளினால் தூண்டப்பட்டு, முன்னைய மாதத்திலிருந்து 4.0 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட வீழ்ச்சியுடன் தயாரிப்பு கொ.மு.சுட்டெண் 2023 சனவரியில் 40.8 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. 

பணிகள் கொ.மு.சுட்டெண், 2023 சனவரியில் 50.2 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து அடிப்படையளவு மட்டத்திற்கு சற்றுமேல் காணப்பட்டது. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் துணைத் துறைகளில் அவதானிக்கப்பட்ட மேம்பாடுகள் மூலம் இவ்வதிகரிப்பு துணையளிக்கப்பட்டிருந்தது. 

முழுவடிவம்

நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குவிதிகள்

இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிதியியல் நிறுவனங்கள் மூலம் பணிகளை வழங்கும் போது நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பை நிறுவனமயப்படுத்துவதற்கான தேவையை இனங்கண்டு, இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிறுவனங்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதை இலக்காகக்கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம் அனைத்தையுமுள்ளடக்கிய புதிய ஒழுங்குவிதிகளைக் கொண்ட தொகுதியொன்றை உருவாக்கியுள்ளது. இவ்வொழுங்குவிதிகள், சந்தை நடத்தை மேற்பார்வைக்கு வசதியளிக்கின்ற அதேவேளை நிதியியல் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கான தேவையினை குறைப்பதனை இலக்காகக்கொண்டு, நிதியியல் பணிகளை வழங்குதல்ஃ பெற்றுக்கொள்ளல் என்பவற்றில் கருத்திற்கொள்ளப்படவேண்டிய விடயப்பரப்புக்கள் பற்றி பணி வழங்குநர்கள் மற்றும் பெறுநர்கள் இருவருக்குமான  தெளிவினை வழங்குவதற்கு குறித்த ஒழுங்குமுறைப்படுத்தல் மேற்பார்வையாளர்களுக்கென அதிகாரங்களை வரையறைசெய்யும் என எதிர்பார்க்கின்றன.

Pages

சந்தை அறிவிப்புகள்