ஆடை ஏற்றுமதிகளின் குறைந்தளவிலான வருவாய்களின் காரணமாக வணிகப்பொருள் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 2022 மாச்சிலிருந்து முதற்தடவையாக ஆண்டிற்காண்டு அடிப்படையில் 2022 ஒத்தோபரில் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. இறக்குமதிச் செலவினமானது 2022 செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்திருந்தபோதிலும் இறக்குமதிச் செலவினத்தின் வீழ்ச்சி தொடர்ச்சியாக எட்டாவது மாதமாக 2022 ஒத்தோபரில் (ஆண்டிற்காண்டு) தொடர்ந்தது. வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022 ஒத்தோபரில் குறிப்பிடத்தக்கதொரு சுருக்கத்தினைப் பதிவுசெய்தது. அதேவேளை, 2022 ஒத்தோபரில் தொழிலாளர் பணவனுப்பல்கள் நிலையாகக் காணப்பட்டதுடன் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் மேம்பட்டன. 2022 சனவரி தொடக்கம் ஒத்தோபர் வரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் ஐ.அ.டொலர் 1 பில்லியனை விஞ்சிக் காணப்பட்ட அதேவேளையில், தொழிலாளர் பணவனுப்பல்கள் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 3 பில்லியனை அண்மித்தும் காணப்பட்டன. அரச பிணையங்கள் சந்தையிலும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையிலும் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடு 2022 ஒத்தோபர் காலப்பகுதியில் சிறியளவிலான தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தது. மத்திய வங்கி அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிக்கும் பொருட்டு வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மையைத் தொடர்ந்தும் வழங்கியமையானது மொத்த அலுவல்சார் ஒதுக்குகளின் திரவ மட்டத்தினைக் குறைவடையச் செய்துள்ளது. அதேவேளை, வங்கிகளுக்கிடையிலான சந்தையில் சராசரி நிறையேற்றப்பட்ட உடனடிச் செலாவணி வீதமானது மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலரொன்றிற்கு ஏறத்தாழ 363 ரூபாவாகத் தொடர்ந்தும் காணப்பட்டது.
Tuesday, December 6, 2022