2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 37(3) ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம், 2022 திசெம்பர் 28ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சிக்கு வழங்கப்பட்ட நிதித்தொழில் உரிமத்தினை இரத்துச்செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது. அதற்கமை, நிதித்தொழில் சட்டத்தின் கீழ் நிதித்தொழிலில் ஈடுபடுவதற்கு 2022 திசெம்பர் 28 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி அனுமதிக்கப்படாது. மேலும், 2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க நிதிக் குத்தகைக்குவிடுதல் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ், பதிவுசெய்யப்பட்ட நிதிக் குத்தகைக்குவிடும் நிறுவனமொன்றாக சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் பதிவுச் சான்றிதழை இரத்துச்செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களப் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார்.
“வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் துறையினை ஒருங்கிணைப்பதற்கான முதன்மைத் திட்டத்தின்” பணிப்புரைகளுக்கமைவாக சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் எஞ்சியுள்ள வைப்பாளர்களுக்கு மீள்கொடுப்பனவு செய்வதற்கு எஸ்எம்பீ பினான்ஸ் பிஎல்சிக்கு (அப்போதைய எஸ்எம்பீ லீசிங் பிஎல்சி) மூலம் மேற்கொள்ளப்பட்ட பங்களிப்பின் நோக்கில், சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் கோரப்படாத வைப்புப் பொறுப்பானது தொடர்புடைய சொத்துக்கள் பெறுமதி மற்றும் தொடர்புடைய வைப்பாளர் தகவல்கள் என்பவற்றுடன் சேர்த்து எஸ்எம்பீ பினான்ஸ் பிஎல்சிக்கு மாற்றல்செய்யப்படும்.
மேலும், இலங்கை வைப்புக் காப்புறுதி திரவத்தன்மை உதவித் திட்டத்தின் ஒழுங்குவிதிகளுக்கமைவாக வைப்பாளர் ஒருவருக்கு ரூ.1,100,000 கொண்ட உயர்ந்தபட்சத் தொகை வரையில் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் தீர்ப்பனவு செய்யப்படாதுள்ள காப்புறுதிசெய்யப்பட்ட வைப்பாளர்களுக்கு ஈடளிப்பினைச் செலுத்துவதற்கு இலங்கை வைப்புக் காப்புறுதி திரவத்தன்மை உதவித் திட்டம் காலக்கிரமத்தில் அவசியமான நடவடிக்கைகளை எடுக்கும். கோரப்படாத வைப்பு எஸ்எம்பீ பினான்ஸ் பிஎல்சிக்கு மாற்றல்செய்யப்பட்டு அத்துடன் இலங்கை வைப்புக் காப்புறுதி திரவத்தன்மை உதவித் திட்டத்தினூடாக ஈடளிப்புக் கொடுப்பனவு மேற்கொள்ளப்படும் போது சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் ஒட்டுமொத்த வைப்புப் பொறுப்பும் தீர்ப்பனவுசெய்யப்படும்.