Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி – 2022இன் முதலாமரையாண்டு

கொழும்பு மாவட்டத்தின் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2022இன் முதலாமரையாண்டு காலப்பகுதியின் போது ஆண்டுக்காண்டு 17.0 சதவீத மாற்றத்தினால் 186.9 ஆக அதிகரித்தது. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் ஆண்டு அதிகரிப்பும் (17.0) அரையாண்டு அதிகரிப்பும் (4.6 சதவீதம்) 2021இன் அரையாண்டுப் பகுதியில் அவதானிக்கப்பட்ட அதிகரித்த போக்கின் வீழ்ச்சியைக் காண்பித்தன.

காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளும் அதாவது, வதிவிடக் காணி விலைமதிப்பீட்டு குறிகாட்டி, வர்த்தகக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி ஆகிய அனைத்தும் ஒட்டுமொத்த அதிகரிப்பிற்குப் பங்களித்துள்ளன. கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி 20.6 சதவீதம் கொண்ட அதிகூடிய  ஆண்டு அதிகரிப்பினைப் பதிவுசெய்து, அதனைத் தொடர்ந்து வர்த்தகக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியும் வதிவிடக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியும் காணப்பட்டன.

பொதுமக்கள் வசமுள்ள வெளிநாட்டு நாணயத்தை வைப்பு செய்வதற்கான/விற்பனை செய்வதற்கான பொதுமன்னிப்பு

பொதுமக்கள் வசமுள்ள வெளிநாட்டு நாணயத்தை வங்கித்தொழில் முறைமையினுள் கவர்ந்துகொள்ளும் பொருட்டு, வெளிநாட்டு நாணயத் தாள்களை உடமையில் வைத்திருக்கின்ற இலங்கையிலுள்ள அல்லது வதிகின்ற ஆட்களுக்காக பின்வருவனவற்றுக்காக நிதி அமைச்சர் 2022.08.15 அன்று தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் 1 மாத பொதுமன்னிப்புக் காலத்தினை வழங்கும் கட்டளையொன்றினை வழங்கியுள்ளார்:

i. கட்டளையில் குறித்துரைக்கப்பட்டவாறு தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கில் அல்லது வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கில் ஏற்புடையவாறு வைப்பிலிடுதல்; அல்லது

ii. அதிகாரமளிக்கப்பட்ட வணிகருக்கு (உரிமம்பெற்ற வர்த்தக வங்கி அல்லது தேசிய சேமிப்பு வங்கி) விற்பனை செய்தல்

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2022 ஓகத்து 17ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. இத்தீர்மானத்தை மேற்கொள்கையில் சபையானது முன்னைய நாணயக்கொள்கை மீளாய்வுடன் ஒப்பிடுகையில் பொருளாதார நடவடிக்கையில் எதிர்பார்க்கப்பட்டதனைக் காட்டிலும் பாரிய சுருக்கத்தினையும் விலை அழுத்தங்களின் எதிர்பார்க்கப்பட்டதனைக் காட்டிலும் விரைவான தளர்த்தலையும் எடுத்துரைக்கின்ற பிந்திய மாதிரி அடிப்படையிலமைந்த எறிவுகளை பரிசீலனையில் கொண்டிருந்தது. அவசரமற்ற இறக்குமதிச் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளுடன் ஒன்றிணைந்து ஏற்கனவே செயற்பாட்டிலுள்ள சுருக்க நாணயக்கொள்கை மற்றும் இறைக்கொள்கைகள் அண்மைய காலத்தில் தனியார் துறைக்கான கொடுகடனில் குறிப்பிடத்தக்க சுருக்கத்தினையும் தொழிலின்மையில் மீட்சிக்கான நிச்சயமற்ற சாத்தியப்பாட்டு இடர்நேர்வுகளையும் விளைவிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அண்மைய காலத்தில் மையப் பணவீக்கமானது உயர்ந்தளவில் காணப்படுமென எறிவுசெய்யப்பட்டுள்ளமைக்கு மத்தியிலும், இதுகாலவரையிலும் மத்திய வங்கி மற்றும் அரசாங்கம் என்பவற்றினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கை சார்ந்த வழிமுறைகள் எதிர்வரவுள்ள காலப்பகுதியில் உலகளாவிய பண்ட விலைகளில் எதிர்பார்க்கப்பட்ட வீழ்ச்சியுடனும் உள்நாட்டு விலைகளுக்கு அது கடத்தப்படுவதுடனும் இணைந்து எவையேனும் மொத்தக்கேள்வி அழுத்தங்களை கட்டுப்படுத்துவதற்கு உதவியளித்து, அதனூடாக பணவீக்க எதிர்பார்க்கைகளை நிலைநிறுத்துமென நாணயச்சபை அபிப்பிராயப்பட்டுள்ளது. 

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரால் மேற்கொள்ளப்பட்ட அறிக்கைகளைத் தொடர்புபடுத்தி பல்வேறு இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்பட்ட தவறான செய்தி

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க அவர்கள் மூலம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாக கூறப்படுகின்ற கட்டுரையொன்றின் சிங்கள மொழிபெயர்ப்பு இந்நாட்களில் இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்பட்டு வருகின்றது.

எடுத்துக்காட்டாக, “பணவீக்கம் என்பது பிரச்சனையொன்றல்ல ஆனால் தீர்வொன்றாகும்…… இப்பொருளாதார நெருக்கடி எங்களுக்கேற்பட்ட சிறந்த விடயமொன்றாகவிருக்கலாம் - மத்திய வங்கியின் ஆளுநர் கூறுகின்றார்” என்ற தலைப்பின் கீழ் அல்லது இதேபோன்ற தலைப்புகளின் கீழ் கட்டுரைகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரந்தளவில் வெளியிடப்படுகின்ற பல சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.

முனைவர் நந்தலால் வீரசிங்க அவர்களின் பெயரில் வேறு தனிப்பட்டவர்களால் எழுதப்பட்ட “பணவீக்கம் என்பது பிரச்சனையொன்றல்ல ஆனால் தீர்வொன்றாகும்” என்ற தலைப்பிலான கட்டுரைக்கு அல்லது அதன் உள்ளடக்கங்களுக்கு முனைவர் நந்தலால் வீரசிங்க அவர்களோ அல்லது இலங்கை மத்திய வங்கியோ பொறுப்பல்ல என்பது பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது.

பணிகள் ஏற்றுமதிக் கிடைப்பனவுகளை/பெறுகைகளை கட்டாயமாக மாற்றுதல் தேவைப்பாட்டினைத் தளர்த்துதல்

பணிகள் ஏற்றுமதியாளர்கள் தமது ஏற்றுமதிப் பெறுகைகளை நாட்டிற்கு அனுப்புவதை ஊக்குவிக்கும் நோக்குடன் 2022 ஓகத்து 12 அன்று அல்லது அதற்குப் பின்னர் கிடைக்கப்பெறுகின்ற பணிகள் ஏற்றுமதி கிடைப்பனவுகளை/ பெறுகைகளை மாற்றுவதற்கான கட்டாயத் தேவைப்பாட்டினை இலங்கை மத்திய வங்கி மீளப்பெற்றுள்ளது. இலங்கைக்கு அவ்வாறு அனுப்பப்பட்ட தமது ஏற்றுமதிப் பெறுகைகளை பணிகள் ஏற்றுமதியாளர்கள் அனுமதிக்கப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தலாம். பணிகள் வழங்கும் திகதியிலிருந்து 180 நாட்களுக்குள் பணிகள் ஏற்றுமதிப் பெறுகைகளை நாட்டிற்குப் பெற்றுக்கொள்வதற்கான கட்டாயத் தேவைப்பாடு மாற்றமின்றிக் காணப்படும்.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2022 யூலை

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2022 யூலையில் குறைவடைந்தன

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2022 யூலையில் மாதத்திற்கு மாதம் அடிப்படையில் வீழ்ச்சியடைந்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் சுருக்கமொன்றினை எடுத்துக்காட்டியது. அதற்கமைய, தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணானது வழங்குநர்களின் விநியோக நேரம் தவிர அனைத்துச் சுட்டெண்களிலும் குறைவடைதல்களினால் தூண்டப்பட்டு  முன்னைய மாதத்திலிருந்து 2.7 சுட்டெண் புள்ளிக்களைக் கொண்ட வீழ்ச்சியுடன் 2022 யூலையில் 41.4 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. 

பணிகள் துறை கொ.மு.சுட்டெண், 2022 யூலையில் 43.0 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து தொடர்ச்சியாக நான்காவது மாதத்திற்கும் பணிகள் நடவடிக்கைகளில் சுருக்கத்தினை எடுத்துக்காட்டியது. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள், தொழில்நிலை மற்றும் நடவடிக்கைகளுக்கான எதிர்பார்க்கைகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சிகளினால் தொடர்ச்சியான இச்சுருக்கமடைதல் தூண்டப்பட்டிருந்தது.

Pages

சந்தை அறிவிப்புகள்