இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு இலங்கை மதுவரித் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட்டது

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் நியதிகளின் பிரகாரம் இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது பணம் தூயதாக்குதல், பயங்கரவாதி நிதியிடல் மற்றும் வேறு தொடர்புபட்ட குற்றங்கள் பற்றிய விசாரணைகள் மற்றும் வழக்குத்தொடுத்தல்கள் தொடர்புடைய தகவல்களை பரிமாற்றிக்கொள்வதற்கு இலங்கை மதுவரித் திணைக்களத்துடன் 2024 சனவரி 09 அன்று இலங்கை மத்திய வங்கியில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைக் கைச்சாத்திட்டது. 

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர் பி. நந்தலால் வீரசிங்க அவர்களின் பிரசன்னத்துடன் மதுவரி ஆணையாளர் நாயகம் திரு. ஜே. எம். எஸ். என். ஜயசிங்க, நிதியியல் உளவறிதல் பிரிவின் அப்போதைய பணிப்பாளர் திருமதி. ஈ. எச். மொஹொட்டி ஆகியோர் தொடர்புடைய நிறுவனங்கள் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்டனர். 

தேசிய மற்றும் உலகளாவிய பொருளாதார அத்துடன் நிதியியல் முறைமைகளின் உறுதிப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் பணம் தூயதாக்கலும் பயங்கரவாதி நிதியிடலும்  உலகளவில் நிகழும் நிதிசார் குற்றங்களாகும். இலங்கை மதுவரித் திணைக்களத்திற்கும் நிதியியல் உளவறிதல் பிரிவிற்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், அத்தகைய தவறுகளை தடுத்தல், கண்டுபிடித்தல் மற்றும் வழக்குத்தொடுத்தல் என்பவற்றுக்கு இன்றியமையாது காணப்படுகின்ற தகவல்களைப் பரிமாற்றிக்கொள்வதற்கு இரு நிறுவனங்களையும் இயலச்செய்யும். 

2008 தொடக்கம், நாட்டின் பணம் தூயதாக்கலுக்கெதிரானஃ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் கட்டமைப்பினை வலுப்படுத்துவதற்கு தகவல்களை பகிரும் பொருட்டு நிதியியல் உளவறிதல் பிரிவானது வெளிநாட்டு இணைத்தரப்பினர்களுடன் 44 புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் இலங்கைச் சுங்கம், குடிவரவு குடியல்வுத் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், ஆட்களைப்பதிவு செய்வதற்கான திணைக்களம், இலங்கைப் பொலிஸ் போன்றன உள்ளடங்கலாக உள்நாட்டு அரசாங்க முகவராண்மைகளுடன் 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் கைச்சாத்திட்டுள்ளது.

முழுவடிவம்

Published Date: 

Friday, February 16, 2024