கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண், 52.9 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்திருந்த மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2024 சனவரியில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றது. 2022 சனவரி தொடக்கம் முதற்தடவையாக நடுநிலையான அடிப்படை அளவினை இச்சுட்டெண் விஞ்சிச்சென்றமையை இது அடையாளப்படுத்துகின்றது. மாதகாலப்பகுதியில் புதிய கட்டடவாக்கப் பணி படிப்படியாகக் கிடைக்கப்பெறுகின்றமையாக இருக்கின்ற அதேவேளை, இடைநிறுத்தப்பட்ட சில கருத்திட்டங்களும் மட்டுப்படுத்தப்பட்டளவில் மீளத்தொடங்கப்பட்டன என பல பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர்.
புதிய கட்டளைகள், முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் சனவரியில் அதிகரித்தன. தற்போது, வெளிநாட்டு நிதியளிக்கப்பட்ட கருத்திட்டங்கள் மற்றும் தனியார் நிதியளிக்கப்பட்ட உள்நாட்டுக் கருத்திட்டங்கள் ஆகிய இரண்டும் கிடைக்கப்பெறுகின்றமை உயர்வானதாகும் என அநேகமான பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர். அதேவேளை, மொத்த நடவடிக்கை மற்றும் புதிய கட்டளைகள் என்பனவற்றில் ஏற்பட்ட அதிகரிப்புகளுக்கிசைவாக கொள்வனவுகளின் அளவு மாதகாலப்பகுதியில் மீட்சியடைந்தது. எதுஎவ்வாறிருப்பினும், பிரதானமாக பெறுமதிசேர்க்கப்பட்ட வரிக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் தாக்கத்தின் காரணமாக பொருட்களின் விலைகளில் அதிகரிப்புக்கள் பரந்தளவில் எடுத்துக்காட்டப்பட்டன. அதேவேளை, நிரம்பலர்களின் விநியோக நேரம் மாதகாலப்பகுதியில் நீட்சியடைந்து காணப்பட்டது.