Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2022 திசெம்பரில் மேலும் வீழ்ச்சியடைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100)1 ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 நவெம்பரின் 65.0 சதவீதத்திலிருந்து 2022 திசெம்பரில் 59.2 சதவீதத்திற்கு மேலும் வீழ்ச்சியடைந்தது. இதேபோன்று, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 நவெம்பரின் 69.8 சதவீதத்திலிருந்து 2022 திசெம்பரில் 59.3 சதவீதத்திற்கு மேலும் வீழ்ச்சியடைந்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 நவெம்பரின் 60.4 சதவீதத்திலிருந்து 2022 திசெம்பரில் 59.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – 2022 திசெம்பர்

2022 திசெம்பரில் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலையும் தயாரித்தல் நடவடிக்கைகளில் தொடர்ச்சியான பின்னடைவினையும் எடுத்துக்காட்டின.

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், திசெம்பரில் 44.8 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து தயாரிப்பு நடவடிக்கைகளில் தொடர்ச்சியான பின்னடைவினை எடுத்துக்காட்டியது. நிரம்பலர் விநியோக நேரம் தவிர, அனைத்து துணைச் சுட்டெண்களிலும் அவதானிக்கப்பட்ட குறைவடைந்த செயலாற்றத்தினால் இப்பின்னடைவு தூண்டப்பட்டிருந்தது.   

பணிகள் கொ.மு.சுட்டெண்ணானது தொடர்ச்சியாக இரண்டு மாதங்களாக வீழ்ச்சியடைந்ததன் பின்னர் 2022 திசெம்பரில் 51.6 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து வளர்ச்சி எல்லைக்குத் திரும்பியது. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் துணைத் துறைகளில் அவதானிக்கப்பட்ட மேம்பாடுகள் மூலம் இவ்வதிகரிப்பு துணையளிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், தொழில்நிலை மற்றும் நிலுவையிலுள்ள பணிகள் என்பன மாதகாலப்பகுதியில் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தன.

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2022 நவெம்பர்

வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 நவெம்பரில் விரிவடைந்து காணப்பட்டபோதிலும் ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் தாழ்ந்தளவிலேயே காணப்பட்டது. தாழ்ந்தளவிலான உலகளாவிய கேள்வியின் காரணமாக, குறிப்பாக ஆடை ஏற்றுமதிகளுக்கான கேள்வி, வணிகப்பொருள் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 2022 நவெம்பரில் வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, வணிகப்பொருள் இறக்குமதிச் செலவினமும் 2022 ஒத்தோபருடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தபோதும் 2022 நவெம்பரில் தொடர்ச்சியாக ஒன்பதாவது மாதமாக ஆண்டிற்காண்டு அடிப்படையில் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. தொழிலாளர் பணவனுப்பல்களானது 2022 நவெம்பரிலும் மீளெழுச்சியைத் தொடர்ந்ததுடன் முன்னைய ஆண்டு மற்றும் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துக் காணப்பட்டது. முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 நவெம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகைகளில் காணப்பட்ட 40 சதவீத வளர்ச்சியால் துணையளிக்கப்பட்டு சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் அதிகரித்துக் காணப்பட்டன. அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் 2022 நவெம்பர் காலப்பகுதியில் சிறியளவிலான தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்த அதேவேளையில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை 2022 நவெம்பர் காலப்பகுதியில் சிறியளவிலான தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தது. மத்திய வங்கி அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிக்கும் பொருட்டு வெளிநாட்டுச் செலாவணித் தேவைப்பாட்டினைத் தொடர்ந்து வழங்கியது. அதன் விளைவாக, மொத்த அலுவல்சார் ஒதுக்குகளைக் கட்டியெழுப்புதல் மட்டுப்படுத்தப்பட்டு காணப்பட்டது. அதேவேளை, வங்கிகளுக்கிடையிலான சந்தையில் சராசரி நிறையேற்றப்பட்ட உடனடிச் செலாவணி வீதமானது மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலரொன்றிற்கு ஏறத்தாழ 363 ரூபாவாகத் தொடர்ந்தும் காணப்பட்டது.

இலங்கை மத்திய வங்கி துணைநில் வசதிகள் மீது மிகையாக தங்கியிருப்பதை குறைப்பதற்கான வழிமுறைகளை அறிமுகப்படுத்துகின்றது

2022இன் முதலரைப்பகுதியில் கணிசமானளவு உயர்வாகவிருந்த உள்நாட்டு பணச் சந்தையின் திரவத்தன்மைப் பற்றாக்குறையானது 2022இன் பிற்பகுதியில் வீழ்ச்சியடைந்தது. எனினும், பணச் சந்தை திரவத்தன்மை நிலைமைகளில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பகுதியளவில் உள்நாட்டு பணச் சந்தைகளின் செயற்பாடு குறைவாக இருந்ததன் காரணமாக சந்தை வட்டி வீதங்கள் தொடர்ந்தும் உயர்வாக காணப்பட்டது. அதேவேளை, பல்வேறு உரிமம்பெற்ற வங்கிகள் அவற்றின் கட்டமைப்புசார் திரவத்தன்மைத் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கான சந்தை அடிப்படையிலான நிதியிடல் தெரிவுகளைக் கருத்திற்கொள்ளாது மத்திய வங்கியின் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் கீழ் ஓரிரவு துணைநில் வசதிகள் மீது தொடர்ந்தும் மிதமிஞ்சியளவு தங்கியிருக்கின்றன என்று அவதானிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து நிதியிடல் தெரிவுகளைப் பயன்படுத்திய பின்னர் மீளப் பெறும் தெரிவுகளாகப் பயன்படுத்துவதற்கு கிடைக்கக்கூடியதாகவிருக்கின்ற இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் ஓரிரவு வசதிகள் மீது மிகையாக சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான எந்தவொரு சமிஞ்சைகளை அத்தகைய உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் எடுத்துக்காட்டவில்லை.

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின் பிரகாரம் செயற்பட்டு, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2023 சனவரி 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டுநடாத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

2023 இற்கும் அதற்கு அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகள்

சுதந்திரத்திற்குப் பின்னரான பொருளாதாரத்தில் மிகவும் சவால்மிக்க ஆண்டாக 2022ஆம் ஆண்டினை இலங்கை எதிர்கொண்டது. 2019இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், 2020இல் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் பரவல் மற்றும் 2021இல் அதன்பின்னரான செயற்பாடுகள் மீதான அதன் நீடித்த தாக்கம், பாரியளவிலான சென்மதி நிலுவை அழுத்தங்களுக்கு மத்தியில் 2022இல் சமூக பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி என்பன உள்ளடங்கலாக அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான பொருளாதார அதிர்வுகள் காரணமாக தோற்றம்பெற்ற சவால்கள் முன்னெப்பொழுதுமில்லாத கொள்கைச் சமநிலைப்படுத்தல்களுடன் இணைந்து, பொருளாதார நடவடிக்கைகளைக் கடுமையாகப் பாதித்து, தனிப்பட்டவர்கள் மற்றும் வியாபாரங்களுக்குக் கற்பனைசெய்ய முடியாதளவிலான இன்னல்களை ஏற்படுத்தின. வாழ்வாதாரங்கள் இழக்கப்பட்ட வேளையில் உண்மை வருமானங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டன. இப்பொருளாதார அதிர்வுகளுடன் பின்னிப்பிணைக்கப்பட்ட பொருளாதாரத்தில் பல்வேறு துறைகளில் பல தசாப்தங்களாக நிலவிய கட்டமைப்புசார் பொருளாதாரத் தடைகள் பொருத்தமற்ற கொள்கைத் தெரிவுகளுடன் இணைந்து அதன்மூலம் பேரண்டப்பொருளாதார சமநிலையைத் தளர்த்தி தேசத்திற்கு சடுதியான மற்றும் பல்முனை கொண்ட பின்னடைவொன்றினைத் தோற்றுவித்தன.

Pages

சந்தை அறிவிப்புகள்