Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

காசுக்கட்டு குறைவடைந்தமை

2023.04.11 அன்று நாணயச் செயற்பாடுகளின் போது, இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்தில் ரூ. 5 மில்லியன் பெறுமதியான (ரூ. 5,000 நாணயத்தாள் வகை) காசுக்கட்டு குறைவடைந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த விடயம் சம்பந்தமாக உள்ளக ஆய்வுகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட அதேவேளை, கோட்டை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது. பொலிஸ் விசாரணைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த விடயத்தை முழுமையாக விசாரணை செய்வதற்கும் மற்றும் உள்ளகக் கட்டுப்பாடுகள், செயன்முறைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் அவசியமான வழிமுறைகளை இலங்கை மத்திய வங்கி எடுத்து வருகின்றது. பொலிஸ் அதனுடைய விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தொடர்ந்தும் அதன் ஆதரவினை வழங்கும்.   

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2023 மாச்சு

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டுக்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2023 மாச்சில் சாதகமான எல்லைக்குத் திரும்பின.

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்இ தொடர்ச்சியாக ஒன்பது அளவீட்டு காலங்களின் பின்னர், 2023 மாச்சில் 51.4 சுட்டெண் புள்ளியினைப் பதிவுசெய்து சாதகமாக மாறியது. பிரதானமாக பருவகால கேள்வியின் காரணமாக புதிய கட்டளைகள், உற்பத்தி துணைச் சுட்டெண்களில் அதிகரிப்பினால் மாதத்திற்கு மாத இவ்விரிவடைதல் தூண்டப்பட்டிருந்தது. எனினும்,  தொழில்நிலை, கொள்வனவுகளின் இருப்பு மற்றும் நிரம்பலர் விநியோக நேரம் துணைச் சுட்டெண்கள் நடுநிலையான அடிப்படை அளவிற்கு கீழேயே காணப்பட்டன. 

பொருளாதாரத் தோற்றப்பாடு தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநரினால் வெளியிடப்பட்ட கருத்துக்களின் தவறான அறிக்கையிடலை மத்திய வங்கி தெளிவுபடுத்துகின்றது

அண்மையில் நிகழ்ந்த ஊடக சந்திப்பொன்றினைத் தொடர்ந்து மத்திய வங்கியின் ஆளுநரினால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலான தவறான அறிக்கையிடலை இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்த விரும்புகின்றது. அத்தகைய ஊடக அறிக்கைகள் ‘பொருளாதாரத்தில் கடினமானதொரு காலகட்டத்தினை ஆளுநர் எதிர்பார்க்கின்றார்’ எனக் குறிப்பிட்டிருந்தன. எதிர்பார்க்கப்படுகின்ற சீர்திருத்தங்கள் தாமதமானாலோ அல்லது தடம்புரள்வினை எதிர்கொண்டாலோ எதிர்வருகின்ற காலப்பகுதியில் பொருளாதாரம் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் குறித்த கலந்துரையாடலின் பின்னணியில் ஆளுநரினால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களிற்கு ஒட்டுமொத்தமாகத் தவறான பொருட்கோடலாக இது காணப்படுகின்றது. 2022இல் காணப்பட்ட முன்னெப்பொழுதுமில்லாத சமூக-பொருளாதார பதற்றங்களுடன் ஒப்பிடுகையில் அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட கடினமானதும் வேதனையளிக்கின்றதுமான கொள்கைசார் வழிமுறைகள் பொருளாதார நிலைமைகளை உறுதிப்படுத்துவதற்குத் துணைபுரிந்துள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

நாணயக்கொள்கை மீளாய்வு : இல. 03 – 2023 ஏப்பிறல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2023 ஏப்பிறல் 04ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 15.50 சதவீதம் மற்றும் 16.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. அண்மைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகள் மற்றும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களின் மீதான பேரண்டப்பொருளாதார எறிவுகள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு, பன்னாட்டு நாணய நிதியத்திலிருந்தான நீடிக்கப்பட்ட நிதிய வசதியின் இறுதிப்படுத்தல் மற்றும் வீழ்ச்சியடைகின்ற இடர்நேர்வு மிகையினைப் பிரதிபலிக்கின்ற உயர்வடைந்த சந்தை வட்டி வீதங்களின் கீழ்நோக்கிய நகர்வு என்பவற்றினைத் தொடர்ந்து சந்தை மனோபாவங்களில் ஏற்பட்ட மேம்பாடுகளுக்கு மத்தியில் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற பணவீக்க வீழச்சிப்பாதைச் செய்முறையின் தொடர்ச்சியினை வசதிப்படுத்துவதற்கு நாணய நிலைமைகள் தொடர்ந்தும் போதியளவில் இறுக்கமாவிருப்பதனை நிச்சயப்படுத்தும் பொருட்டு தற்போதுள்ள இறுக்கமான நாணயக் கொள்கை நிலையின் பேணுகை அத்தியாவசியமானதென சபை அபிப்பிராயப்பட்டது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2023 மாச்சில் மேலும் தளர்வடைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 பெப்புருவரியின் 50.6 சதவீதத்திலிருந்து 2023 மாச்சில் 50.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் இவ்வீழ்ச்சியானது, 2023இல் பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியினால் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க வேகக்குறைவுப் பாதைக்கு இசைவாக காணப்படுகின்றது.

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2023 பெப்புருவரி

2023 பெப்புருவரியில் ஏற்றுமதி வருவாய்களில் ஏற்பட்ட குறைப்புடன் (ஆண்டிற்காண்டு) ஒப்பிடுகையில் இறக்குமதிச் செலவினமானது குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்து, வர்த்தகப் பற்றாக்குறையில் கணிசமானளவிலான மிதமடைதலொன்றினைத் தோற்றுவித்தது. 

தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் என்பன 2023 பெப்புருவரியில் தொடர்ந்தும் மேம்பட்டன.

மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் அண்மைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் 2023 பெப்புருவரி இறுதியளவில் மேலும் வலுவடைந்தன.

செலாவணி வீத நிர்ணயித்தலில் அனுமதிக்கப்பட்ட கணிசமான நெகிழ்ச்சித்தன்மையினைத் தொடர்ந்து செலாவணி வீதமானது 2023 மாச்சில் குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்து காணப்பட்டது.

கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை மற்றும் அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் என்பன 2023 பெப்புருவரி காலப்பகுதியில் தேறிய உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன.

ஐ.அ.டொலர் 3 பில்லியன் தொகையிலான பன்னாட்டு நாணய நிதியத்திலிருந்தான நீடிக்கப்பட்ட நிதிய வசதிக்கு ஒப்புதலளிக்கப்பட்டதுடன் இதன் முதலாம் தொகுதி 2023 மாச்சில் பகிர்ந்தளிக்கப்பட்டது.

Pages

சந்தை அறிவிப்புகள்