Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் பத்தொன்பது மாதங்களுக்கு பின்னர் 2023 யூனில் ஒற்றை இலக்க மட்டங்களுக்கு திரும்பியுள்ளது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 யூனின் 12.0 சதவீதத்திலிருந்து 2023 யூலையில் 6.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் இவ்வீழ்ச்சியானது, பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியினால் 2023 யூனில் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க வீழ்ச்சிப் பாதைக்கு இசைவாக காணப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி அதன் தொடக்க நாணயக்கொள்கை அறிக்கையினை (2023 யூலை) வெளியிடுகின்றது

நாணயக்கொள்கை அறிக்கையின் வெளியீடானது நாணயக்கொள்கையின் வெளிப்படைத்தன்மையினை மேம்படுத்துவதற்கான முக்கியமானதொரு படிமுறையினைக் குறிப்பதுடன் நாணயக்கொள்கைத் தீர்மானங்களை உருவாக்குவதில் இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையினால் பரிசீலனையிற்கொள்ளப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துவதனூடாக அனைத்து ஆர்வலர்களுடனான ஈடுபாட்டினை ஊக்குவிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நாணயக்கொள்கை அறிக்கையானது உள்நாட்டு மற்றும் உலகளாவிய துறைகள் மீதான தற்போதைய பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் அவற்றின் தோற்றப்பாடு என்பவற்றின் பகுப்பாய்வின் அடிப்படையிலமைந்த பணவீக்கம் மற்றும் ஏனைய முக்கிய பேரண்டப்பொருளாதார மாறிகளின் எதிர்கால போக்கு தொடர்பிலான மத்திய வங்கியின் மதிப்பீட்டினை வழங்குகின்றது. தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகள் என்பவற்றினைக் கருத்திற்கொண்டு பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பன மீதான எறிவுகளிற்கான இடர்நேர்வுகளின் சமநிலை தொடர்பிலான மதிப்பீடொன்றினை வழங்குவதனையும் நாணயக்கொள்கை அறிக்கை நோக்காகக் கொண்டுள்ளது. அத்தகைய மதிப்பீடானது நாணயக்கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்கையில் நாணயச் சபையின் சிந்தனை குறித்து சகல ஆர்வலர்களுக்கும் அதிக தெளிவினையளிப்பதில் இது துணைபுரியும்.

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2023 யூன்

ஏற்றுமதி வருவாய்கள் 2023 யூனில் தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக ஐ.அ.டொலர் 1.0 பில்லியனிற்கு மேலாகத் தொடர்ந்தும் காணப்பட்ட அதேவேளையில் இறக்குமதிச் செலவினமானது முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்தது.

தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் என்பன முன்னைய ஆண்டின் யூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2023இன் தொடர்புடைய காலப்பகுதியில் தொடர்ந்தும் குறிப்பிடத்தக்களவு மேம்பாடடைந்தன.

2023 யூன் மாத காலப்பகுதியில் அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் குறிப்பிடத்தக்களவிலான தேறிய உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன.

வரவு செலவுத்திட்ட ஆதரவிற்காக உலக வங்கியிடமிருந்தான ஏறத்தாழ ஐ.அ.டொலர் 250 மில்லியன் பெறுகையானது மொத்த அலுவல்சார் ஒதுக்கு மட்டத்தினை 2023 மே இறுதியில் காணப்பட்ட ஐ.அ.டொலர் 3.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில் யூன் இறுதியளவில் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 3.7 பில்லியனிற்கு உயர்த்தியது.

இலங்கை ரூபாவானது 2023 யூனில் ஐ.அ.டொலரிற்கெதிராக ஓரளவு தளம்பல்தன்மையினைப் பதிவுசெய்தமையானது சந்தைச் சக்திகளின் மூலம் செலாவணி வீதம் நிர்ணயிக்கப்படுவதனைப் பிரதிபலித்தது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் (கட்டடவாக்கம்) - 2023 யூன்

கட்டடவாக்கத் தொழிற்துறையின் அபிவிருத்திகளை உரிய காலத்தில் எடுத்துக்காட்டும் நோக்குடன் 2017 யூனில் கட்டடவாக்க நடவடிக்கைகளுக்காக கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீட்டை இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் திணைக்களம் தொடங்கியது. இவ்வளவீட்டினைத் திணைக்களம் ஆறு ஆண்டுகளாக தொடர்ந்தும் முன்னெடுத்து,  இலங்கை மத்திய வங்கிக்கு முக்கிய தொழிற்துறை விடயங்களை வழங்கி,  கொள்கை வகுப்பு செயன்முறைக்கு உதவியளித்தது. தற்போது தயாரித்தல் மற்றும் பணிகள் என்பவற்றுக்கான வேறு இரண்டு கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் அளவீடுகளை வங்கி மாதாந்த அடிப்படையில் வங்கியின் வெப்தளத்தில் வெளியிடுகின்றது. ஆகையினால், 2023 யூன் அளவீட்டுச் சுற்றிலிருந்து தொடங்கி பொதுமக்களின் தகவல்களுக்காக கட்டடவாக்க கொள்வனவு முகாமையாளர்கள் சுட்டெண் அளவீட்டுப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

2023 யூனுக்கான கட்டடவாக்கக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீட்டுப் பெறுபேறுகள் மீதான அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது. அளவீட்டுப் பெறுபேறுகள் இதன் பின்னர் தொடர்ந்து வருகின்ற மாதத்தின் இறுதியில் ஊடக அறிக்கைகள் வாயிலாக மாதாந்த அடிப்படையில் வெளியிடப்பட்டு புள்ளிவிபர பிரிவின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் வெப்தளத்திற்கு பதிவேற்றம் செய்யப்படும்.

கனடாவின் வன்குவர் நகரில் 2023 யூலை 11 தொடக்கம் 14 வரை இடம்பெற்ற பணம் தூயதாக்கல் மீதான ஆசிய பசுபிக் குழும வருடாந்த முழுநிறைவு கூட்டத்தொடரில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும்/தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர். நந்தலால் வீரசிங்க பங்கேற்றார்

பணம் தூயதாக்கலுக்கெதிரான/பயங்கரவாதத்திற்கு நிதியளித்தளிதலை ஒழித்தல் தொடர்பான தேசிய ஒருங்கிணைப்புக்  குழுவின் தலைவர் என்ற ரீதியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர். நந்தலால் வீரசிங்க, 2023 யூலை 11 தொடக்கம் 14 வரை கனடாவிலுள்ள வன்குவர் என்ற இடத்தில் இடம்பெற்ற பணம் தூயதாக்கல் தொடர்பான ஆசிய பசுபிக் குழுமத்தின் 2023ஆம் ஆண்டிற்கான முழுநிறைவு கூட்டத்தொடரிலும்  அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சி மன்றத்திலும் கலந்துகொண்டு இலங்கையின் பேராளர் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். லாவோ மக்கள் சனநாயகக் குடியரசு, நேபாளம் மற்றும் புருணை ஆகிய நாடுகளின் உரிய பரஸ்பர மதிப்பீடுகளில் பங்கேற்கின்ற நிபுணத்துவ மதிப்பீட்டாளர்களை இலங்கை பேராளர் குழு உள்ளடக்கியிருந்தது.

வெளிநாட்டுச் செலாவணி வெளிமுகப் பணவனுப்பல்கள் மீது விதிக்கப்பட்ட சில வரையறைகளை/இடைநிறுத்தல்களை தளர்த்தி வழங்கப்பட்ட புதிய கட்டளை

செலாவணி வீதம் மீதான அழுத்தத்தினைக் குறைத்து நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலைமையினைப் பேணிக்காப்பதன் மூலம் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக்கு உதவியளித்து பேணும் நோக்குடன் கௌரவ நிதி அமைச்சர் சில வெளிமுகப் பணவனுப்பல்களை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு/மட்டுப்படுத்துதவற்கு 2020.04.02ஆம் திகதி தொடக்கம் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் (வெளிநாட்டு செலாவணிச் சட்டம்) 22ஆம் பிரிவின் கீழ் கட்டளைகளை வழங்கியுள்ளார். 

உள்நாட்டு, வெளிநாட்டு செலாவணிச் சந்தையில் தற்போதைய அத்துடன் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகளைக் கருத்திற்கொண்டும், சர்வதேச கொடுக்கல்வாங்கல்களை மேலும் வசதிப்படுத்தும் நோக்குடனும் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் பரிந்துரையுடனும் அமைச்சரவையின் ஒப்புதலுடனும் கௌரவ நிதி அமைச்சர் வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழ் புதிய கட்டளையொன்றினை வழங்கியுள்ளார். இக்கட்டளையானது மூலதனக் கொடுக்கல்வாங்கல்களுக்கான வெளிமுகப் பணவனுப்பல்கள் மீதான சில வரையறைகளை தளர்த்தியுள்ளதுடன் புலம்பெயர்ந்தவர்களின் நடைமுறை மாற்றல்கள் மீதான மட்டுப்பாடுகளை அகற்றியுள்ள அதேவேளை முன்னைய கட்டளையின் கீழ் விதிக்கப்பட்டிருந்த வேறு இடைநிறுத்தல்கள்/ வரையறைகள் தொடர்ந்தும் அமுலிலிருக்கும். புதிய கட்டளையானது 2023.06.28 தொடக்கம் ஆறு (06) மாதங்களுக்கு வலுவிலிருக்கும். அவ்வாறு தளர்த்தப்பட்ட இடைநிறுத்தல்களின்/வரையறைகளின் தொகுப்பு கீழே அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது. 

Pages

சந்தை அறிவிப்புகள்