Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

பன்னாட்டு நாணய நிதியம் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் ஐ.அ.டொலர் 251.4 மில்லியன் கொண்ட நான்காவது தொகுதிக் கடனை விடுவித்துள்ளது

பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையானது இலங்கை பெற்றுக் கொண்ட மூன்றாண்டு விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் மூன்றாவது மீளாய்வினை நிறைவு செய்து, சிறப்பு எடுப்பனவு உரிமை (சிஎஉ) 177.774 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 251.4 மில்லியன்) பெறுமதியான நான்காவது தொகுதியினைப் பகிர்ந்தளித்துள்ளது.

இலங்கை சுபீட்சச் சுட்டெண் - 2016

சுபீட்சமானது, நாட்டினதும் அதன் மாகாணங்களினதும் சுபீட்சத்தின் மட்டத்தினை அளவிடுகின்றதும் ஒப்பீடு செய்கின்றதுமான ஒரு கலப்புக் குறிகாட்டியாக விளங்கும் இலங்கை சுபீட்சச் சுட்டெண்ணின்1 மூலம் அளவிடப்படுகிறது. இது முன்னைய ஆண்டின் 0.684 இலிருந்து 2016இல் 0.746 இற்கு மேம்பட்டிருக்கிறது. இலங்கை சுபீட்சச் சுட்டெண்ணின் துணைச் சுட்டெண்களின் அசைவினைப் பகுப்பாய்வு செய்யும் பொழுது, 2015 இலிருந்து 2016 வரையான காலப்பகுதியில் பொருளாதாரம் மற்றும் வியாபாரச் சூழல் மற்றும் மக்களின் நலனோம்புகை துணைச் சுட்டெண்கள் மேம்பட்ட வேளையில் சமூக பொருளாதார உட்கட்டமைப்பு துணைச் சுட்டெண்ணில் மிதமான தன்மையொன்று காணப்பட்டது. 

இடர்ப்பாட்டிலுள்ள நிதிக் கம்பனிகள் மீதான ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகள்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித் தொழில்  சட்டத்தின் கீழ், நிதித் தொழிலைக் கொண்டு நடத்துவதற்காக சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இற்கு வழங்கிய உரிமத்தினை இரத்துச் செய்வதற்கான அறிவித்தலை விடுப்பதற்கு 2017.11.06ஆம் திகதி தீர்மானித்திருக்கின்றது.

சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, அக்கம்பனியின் முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தவறான முகாமைத்துவம் மற்றும் ஒழுங்கற்ற கொடுக்கல்வாங்கல்களின் காரணமாக 2013ஆம் ஆண்டிலிருந்து கடுமையான திரவத்தன்மை நெருக்கடிகளை எதிர்நோக்கியது. இக்கம்பனிகளின் பணிப்பாளர்களும் மூத்த முகாமைத்துவமும் சொத்துக்களின் பெறுமதியினை மோசடியான முறையில் பெருப்பித்துக் காட்டியமை அவதானிக்கப்பட்டிருப்பதுடன் அத்தகைய சொத்துக்களுடன் தொடர்பான ஆவணங்களின் பரீட்சிப்புக்கள் அவை ஒன்றில் புனையப்பட்டனவாகவோ அல்லது வில்லங்கமான முறைகளுடன் சிக்க வைக்கப்பட்டனவாகவோ இருப்பதனை எடுத்துக்காட்டின.

2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தினை உருவாக்குதல்

மூலதனப் பாய்ச்சல்களை மேலும் தளர்த்தல் மற்றும் நடைமுறைக் கணக்கு கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பல்வேறு வகையான வெளிநாட்டு நாணய/ ரூபாக் கணக்குகளுடன் தொடர்புடைய செயற்பாடுகளை இலகுவாக்கும் நோக்குடன் புதிய வெளிநாட்டுச் செலாவணிச் சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும் என அரசாங்கம் அதன் 2016ஆம் ஆண்டிறக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளில் அறிவித்திருந்தது. 

இவ்வறிவித்தலினை தொடர்ந்து, வெளிநாட்டு செலாவணி தொழிற்பாடுகளுக்கான புதிய சட்டம் மற்றும் கொள்கை கட்டமைப்பொன்றானது 2017 நவெம்பர் 20ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் 1953ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தினை பிரதியிடுகின்ற 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய சட்டத்தின் ஏற்பாடுகளானது இலங்கை மத்திய வங்கியில் புதிதாக உருவாக்கப்பட்ட வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தினூடாக நடைமுறைப்படுத்தப்படும். 

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - செத்தெம்பர் 2017

2017 செத்தெம்பரில் ஏற்றுமதித் துறைச் செயலாற்றமானது ஏற்றமதிகளில் ஏற்பட்ட இரட்டை இலக்க வளர்ச்சியினால் தூண்டப்பட்டு தொடர்ந்து மூன்றாவது மாதமாக மாதாந்த ஏற்றுமதிகளை ஐ.அ.டொலர் 1 பில்லியன் அளவினை விஞ்சிக் காணப்பட்டன. எனினும், இம்மாத காலப்பகுதியில் எரிபொருள் மற்றும் அரிசி என்பனவற்றின் உயர்ந்த இறக்குமதிகள் காரணமாக வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. 2016 செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் முக்கிய சேரிடங்களிலிருந்து வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் ஓரளவு குறைந்த எண்ணிக்கை காரணமாக சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் இம்மாத காலப்பகுதியில் மிதமாக வீழ்ச்சியடைந்தன. 2017இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்களில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியின் விளைவாக செத்தெம்பரிலும் தொழிலாளர் பணவனுப்பல்கள் தொடர்ந்தும் மிதமானதாகக் காணப்பட்டது. எனினும், தொடர்ச்சியான முதலீட்டாளர் நம்பிக்கையினைப் பிரதிபலிக்கின்ற விதத்தல், சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கானது கொழும்புப் பங்குச் சந்தை மற்றும் அரச பிணையங்கள் சந்தை என்பனவற்றிற்கான உயர்ந்த வெளிநாட்டு உட்பாய்ச்சல்களின் காரணமாக இம்மாத காலப்பகுதியில் தொடர்ந்தும் பலம் பெற்றது.

2017 ஒத்தோபாில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2017 செத்தெம்பரில் 8.6 சதவீதத்திலிருந்து 2017 ஒத்தோபரில் 8.8 சதவீதத்திற்கு அதிகரித்தது.  

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றம் 2017 செத்தெம்பரில் 6.8 சதவீதத்திலிருந்து 2017 ஒத்தோபரில் 7.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.  

Pages

செய்தி வெளியீடுகள்

சந்தை அறிவிப்புகள்