தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட 60.6 சுட்டெண் புள்ளிகளிலிருந்து 2018 யூன் மாதத்தில் 57.6 சுட்டெண் புள்ளிகளுக்கு குறைவடைந்ததுடன் முன்னைய வருடங்களில் அவதானிக்கப்பட்ட போக்கிற்கு ஏற்ற விதத்திலும் காணப்பட்டது. இதற்கு உற்பத்தியில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்களவிலான வீழ்ச்சி பாரியளவில் பங்களித்திருந்ததுடன் விசேடமாக உணவு, குடிபான மற்றும் புகையிலை உற்பத்திகளின் தயாரிப்பு நடவடிக்கைகளில் உணரப்பட்டது. புதிய கட்டளைகள் மற்றும் கொள்வனவுகளின் இருப்புக்களும் மாதகாலப்பகுதியில் குறைவடைந்திருந்தன. எவ்வாறாகினும், புடவைகள், அணியும் ஆடை, தோல் மற்றும் அதனுடன் சார்ந்த உற்பத்தி பொருட்களின் தயாரிப்பு நடவடிக்கைகளின் புதிய ஆட்சேர்ப்புகளின் காரணமாக ஒட்டுமொத்த தொழில்நிலை அதிகரித்திருந்தது. இதேவேளையில், சீனாவில் இறுக்கப்பட்ட சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள் மற்றும் சாதகமற்ற காலநிலை நிலைமைகள் காரணமாக உற்பத்தி உள்ளீட்டு பொருட்களின் வழங்குதலில் வழங்குனர்களினால் எடுத்துக்கொள்ளப்பட்ட நேரம் அதிகரித்திருந்தது. இதன் விளைவாக, நிரம்பலர் வழங்கல் நேரம் நீட்சியடைந்திருந்தது. ஒட்டுமொத்தமாக, கொ.மு.சுட்டெண்ணின் அனைத்து துணைச்சுட்டெண்களும் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலான பெறுமானங்களை யூன் 2018இல் பதிவு செய்ததுடன் தயாரிப்பு நடவடிக்கைகள் மே 2018 உடன் ஒப்பிடுகையில் ஒரு மெதுவான வீதத்தில் விரிவடைந்தமையினையும் காட்டியது. இதற்குமேலாக, நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்பு அடுத்த மூன்று மாதங்களுக்கான மேம்பாடு ஒன்றினை குறித்துக்காட்டியது.
பணிகள் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மே 2018இன் 56.9 சுட்டெண் புள்ளிகளிலிருந்து யூன் 2018 இல் 58.7 சுட்டெண் சுட்டெண் புள்ளிகளுக்கு அதிகரித்திருந்ததுடன், இது, வியாபார நடவடிக்கைகள், தொழில்நிலை மற்றும் நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புகள் என்பவற்றின் அதிகரித்த வளர்ச்சியினால் ஆதரவளிக்கப்பட்டிருந்தது. வியாபார நடவடிக்கைகளில் ஒரு உறுதியான வளர்ச்சியானது பிரதானமாக நிதியியல் பணிகள், நலப் பணிகள் மற்றும் மொத்த மற்றும் சில்லறை வர்த்தக பணிகள் துறைகளில் அவதானிக்கப்பட்டது. பணிகள் விநியோக வழிமுறைகளின் விரிவாக்கம் மற்றும் ரமழான் பண்டிகை காரணமாக அதிகரித்திருந்த கேள்விகள் என்பன இந்த வளர்ச்சிக்கு பங்களித்திருந்த காரணிகளாக பதிலிறுப்பாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். எவ்வாறாகினும், பொருட்கள் பரிமாற்றம் மற்றும் களஞ்சியப்படுத்தல் பணிகள் துறையின் வளர்ச்சி வேகமானது யூன் 2018 இல் எரிபொருள் விலைகளின் மேல்நோக்கிய திருத்தம் காரணமாக மெதுவடைந்திருந்தது. வியாபார நடவடிக்கைகளின் விரிவாக்கமானது, தொழில்நிலை மட்டம் 2015 திசெம்பரில் இருந்தான ஒரு உயர்வுக்கு பகுதியளவில் பங்களித்திருந்ததுடன் நிலுவையிலுள்ள பணிகளின் குறைவுக்கும் காரணமாயிருந்தது. இதேவேளை, பணிகள் வழங்குனர்களின் மூன்று மாதங்களுக்கான வியாபார தோற்றப்பாடு மீதான நம்பிக்கையும் ஒரு உயர்வான வீதத்தில் உறுதியடைந்திருந்ததுடன் பிரதானமாக வருகின்ற சுற்றுலா பருவகாலம் காரணமாக தங்குமிடம், உணவு மற்றும் குடிபான துறைகளில் நடவடிக்கைகளின் மீது காணப்பட்டது. மேல்நோக்கிய எரிபொருள் விலைகளின் திருத்தம் மற்றும் இலங்கை ரூபாவின் தேய்மானம் காரணமாக பணிகள் வழங்குனர்களினால் விதிக்கப்பட்ட விலைகள் அதிகரித்திருந்தது. பணிகள் துறையில் எதிர்பார்க்கப்பட்ட தொழிலாளர் செலவுகள் 2018இற்கான எதிர்பார்க்கப்பட்டிருந்த ஊதிய அதிகரிப்புகள் காரணமாக அதிகரித்திருந்தது.