தொகைமதிப்பு புள்ளிவிபரத்திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றத்தின் மூலம் அளவிடப்பட்டவாறான, பணவீக்கம் (2013=100) ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 மார்ச்சின் 2.2 சதவீதத்திலிருந்து 2016 ஏப்பிறலில் 4.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் வெறியமல்லா குடிவகைகள்; வெறியம்சார் குடிவகைகள் மற்றும் புகையிலை; ஆடைகள் மற்றும் காலணிகள் தளபாடங்கள்; வீட்டுஉபயோகச் சாதனங்கள் மற்றும் வழமையான வீட்டு உபயோகப் பொருட்கள்; நலன்; போக்குவரத்து; பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம்; கல்வி; உணவகங்கள் மற்றும் சுற்றுலாவிடுதிகள் மற்றும் பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் துணைத்துறைகள் என்பன ஏப்பிறலின் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்குப் பங்களித்தன.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 2016 மார்ச்சில் பதிவுசெய்யப்பட்ட 2.4 சதவீதத்திலிருந்து 2016 ஏப்பிறலில் 2.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.
















