முதன்மைப் பணவீக்கம் மற்றும் மையப் பணவீக்கம் இரண்டிலும் தொடர்ந்தும் காணப்பட்ட அதிகரித்துச் செல்லும் போக்கு பொருளாதாரத்தில் கேள்வியினால் தூண்டப்பட்ட பணவீக்க அழுத்தங்களில் உயர்வு ஏற்படுவதனைப் பிரபலித்தது. மோசமான வானிலை நிலைமைகளினால் தோன்றிய வழங்கல்பக்க இடையூறுகள் மற்றும் வரி அமைப்பில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்கள் என்பன கடந்த இரண்டு மாதங்களில் பணவீக்கத்தின் மேல் நோக்கிய அசைவிற்குப் பங்களித்தன. அதேவேளை, உண்மைத் துறையில் கிடைக்கத்தக்கதாகவுள்ள குறிகாட்டிகள் பொருளாதார நடவடிக்கையில் தொடர்ச்சியான வளர்ச்சி உத்வேகம் காணப்படுவதனை எடுத்துக்காட்டின. குறிப்பாக, வலு உருவாக்கம் சுற்றுலா மற்றும் துறைமுகத்துடன் தொடர்பான பணிகள், கட்டவாக்கத் துறை, முதலீட்டுப் பொருட்களின் இறக்குமதிகள் அதேபோன்று தயாரிப்பு மற்றும் பணிகள் துறைக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் என்பன கடந்த சில மாதங்களாக முன்னேற்றங்களைக் காட்டின.
நாணயப் பக்கத்தில், 2016இன் தொடக்கப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நாணய இறுக்கமாக்கல் வழிமுறைகளுக்குப் பதிலுறுத்தும் விதத்தில் சந்தைப் வட்டி வீதங்கள் மேல் நோக்கிச் சீராக்கப்பட்டதுடன் உள்நாட்டுப் பணச் சந்தையில் ரூபாவின் திரவத்தன்மை தொடர்ந்தும் குறைந்த மட்டத்தில் காணப்பட்டது. 2016 மே மாதத்தில் விரிந்த பண (M2b) நிரம்பலின் வளர்ச்சியில் ஓரளவு மெதுவான தன்மை காணப்பட்ட போதும் நாணய விரிவாக்கம் விரும்பத்தக்க மட்டத்திற்கு மேலேயே தொடர்ந்தும் காணப்பட்டது. சந்தை வட்டி வீதங்களில் அதிகரிப்புக் காணப்பட்டமைக்கிடையிலும் கூட, 2016 மேயில் வர்த்தக வங்கிகளினால் தனியார் துறையினருக்கு வழங்கப்பட்ட கொடுகடன், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 ஏப்பிறலின் 28.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 28.0 சதவீதம் கொண்ட உயர்ந்த வேகத்தில் அதிகரித்தது. தற்காலிகத் தரவுகளும் கூட தனியார் துறைக்கான கொடுகடனின் வளர்ச்சி யூன் மாத காலப்பகுதியிலும் தொடர்ந்தமையினை எடுத்துக்காட்டின. சந்தை வட்டி வீதங்களில் காணப்பட்ட மேல் நோக்கிய அசைவுகளுக்கிடையிலும் தனியார் துறை வங்கிக் கொடுகடனுக்குத் தொடர்ந்தும் ஆர்வம்காட்டி வருவதானது மிகையான கேள்வியையும் எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் உயர்ந்த பணவீக்கத்தினையும் உருவாக்கக்கூடும்.
உள்நாட்டுக் கொடுகடனில் காணப்படும் நீடித்த அதிகரிப்பும் விரிவடைந்த வர்த்தகப் பற்றாக்குறைக்குக் காரணமாக விளங்குகின்றது. இதற்கிணங்க 2016இன் முதல் ஐந்து மாத காலப்பகுதியில் ஒன்றுசேர்ந்த வர்த்தகப் பற்றாக்குறை ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 1.4 சதவீதம் கொண்ட அதிகரிப்பினைப் பதிவு செய்திருக்கிறது. சுற்றுலா மற்றும் ஏனைய பணிகளின் ஏற்றுமதிகளிலிருந்து கிடைத்த அதிகரித்த வருவாய்கள், தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் அரசிற்கான நீண்ட கால நிதியியல் பாய்ச்சல்கள் என்பன சென்மதி நிலுவை மீதான அழுத்தத்தினை ஓரளவிற்குத் தளர்த்தின.
மேலே ஆராயப்பட்ட அபிவிருத்திகளைப் பரிசீலனையில் கொண்டு, நாணயச் சபை 2016 யூலை 28ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் பணவீக்க அழுத்தங்களின் உயர்வினை முன்கூட்டியே கட்டுப்படுத்தும் பொருட்டும் சென்மதி நிலுவைக்கு ஆதரவளிக்கும் விதத்திலும் மிகையான கேள்வி அழுத்தங்களைக் கட்டுப்படுத்துவதற்கு நாணயக் கொள்கையினை மேலும் இறுக்கமாக்கும் தேவை காணப்படுகின்றது என்ற கருத்தினைக் கொண்டிருந்தது. இதற்கமைய நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கியின் பிரதான கொள்கை வட்டி வீதங்களான துணைநில் வைப்பு வசதி வீதம், துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பன ஒவ்வொன்றினையும் 50 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 7.00 சதவீதத்திற்கும் 8.50 சதவீதத்திற்கும் 2016 யூலை 28ஆம் நாள் வியாபாரம் முடிவடைவதிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் அதிகரிப்பதெனத் தீர்மானித்தது. எதிர்கால நோக்குடன் நாணயக் கொள்கையினை இறுக்கமாக்குவது, நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை ஒற்றை இலக்க மட்டத்தில் பேணுவதனை உறுதிப்படுத்துமெனவும் இது பொருளாதார உத்வேகத்திற்கு ஆதரவளிக்குமெனவும் நாணயச் சபை கருதுகிறது. எனவே, தற்போதைய கொள்கைச் சீராக்கமானது நீண்ட கால விளைவு வளைகோட்டின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தினைக் கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படவில்லை. மத்திய வங்கி பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளைத் தொடர்ந்தும் நெருக்கமாகக் கண்காணித்து வருவதுடன் தேவையானவிடத்து நாணயக் கொள்கை நிலைக்குப் பொருத்தமான சீராக்கங்களையும் மேற்கொள்ளும்.
நாணயக் கொள்கைத் தீர்மானம்: | கொள்கை வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன |
துணைநில் வைப்பு வசதி வீதம் | 7.00% |
துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் | 8.50% |
நியதி ஒதுக்கு விகிதம் | 7.50% |