தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (2013=100) ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2018 நவெம்பரில் அதன் வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கிலிருந்தும் மாற்றமடைந்து 2018 ஒத்தோபரின் 0.1 சதவீதத்திலிருந்து 1.0 சதவீதமான அதிகரிப்பினைப் பதிவுசெய்தது. 2018 நவெம்பரில் ஆண்டிற்கு ஆண்டுப் பணவீக்கத்தில் அதிகரிப்பு அவதானிக்கப்பட்டமைக்கு உணவு விடயங்களின் விலைகளில் காணப்பட்ட அதிகரிப்பு முக்கிய தூண்டுதலாக அமைந்தது. ஆண்டிற்கு ஆண்டு உணவுப் பணவீக்கம் 2018 ஒத்தோபரில் -6.6 சதவீதத்திலிருந்து 2018 நவெம்பரில் -3.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. எனினும், ஆண்டிற்கு ஆண்டு உணவல்லாப் பணவீக்கம் 2018 ஒத்தோபரின் 5.8 சதவீதத்திலிருந்து 2018 நவெம்பரில் 5.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.
ஆண்டுச் சராசரி அடிப்படையொன்றில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றம் 2018 ஒத்தோபரின் 3.3 சதவீதத்திலிருந்து 2018 நவெம்பரில் 2.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.
















