“2020 - டிஜிட்டல் கொடுக்கல்வாங்கல்கள் ஆண்டு” ஊக்குவிப்புப் பிரசாரம், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் அவர்களினால் 2020 மாச்சு 11ஆம் திகதியன்று சிரேஷ்ட வங்கியாளர்கள், வங்கியல்லா நிதி நிறுவனங்களின் அலுவலர்கள், மத்திய வங்கி அலுவலர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்களின் பங்கேற்புடன் இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் தொடங்கிவைக்கப்பட்டது. ஆரம்ப வைபவத்தைத் தொடர்ந்து இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. டி. குமாரதுங்க, “Cash වදේ” என்ற காசுத் தொல்லை பற்றிய விளம்பரப் பிரசாரத்தினை அறிமுகம் செய்தார். பணத்தைப் பயன்படுத்துவதன் காரணமாக திருட்டுப் போகும் இடர்நேர்வு அல்லது வரிசைகளில் காத்திருந்து நேரத்தை விரையமாக்குதல் போன்றன காரணமாக நுகர்வோரும் வர்த்தகர்களும் எதிர்கொள்கின்ற இன்னல்களை இவ்விளம்பரப் பிரசாரம் எடுத்துக்காட்டுகின்றது.
















