இலங்கை மத்திய வங்கியானது இலங்கையின் பசுமை நிதி வகைப்படுத்தலை 2022 மே 06 அன்று ஜோன் எக்ஸ்டர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் தொடங்கிவைத்தது. இலங்கையின் பசுமை நிதி வகைப்படுத்தல் என்பது சுற்றாடல் ரீதியாக நிலைபெறத்தக்க பொருளாதார நடவடிக்கைகளை வரைவிலக்கணம்செய்து வகைப்படுத்துவதுடன் 2019இல் மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கையின் நிலைபெறத்தக்க நிதிக்கான வழிகாட்டலில் எடுத்துரைக்கப்பட்ட முக்கிய செயற்பாட்டு விடயமொன்றாகக் காணப்படுகின்ற வகைப்படுத்தல் முறைமையொன்றாகும். இவ்வகைப்படுத்தலானது, பன்னாட்டு ரீதியான சிறந்த நடத்தைகளுக்கு இசைவாகத் தயாரிக்கப்பட்டுள்ள அதேவேளை, உள்நாட்டு பின்னணிக்கு ஏற்றவிதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆதலால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகள் இரண்டினூடாகவும் பசுமை நடவடிக்கைகளுக்கு குறைந்த செலவில் நிதியளித்தலைத் திரட்டுவதற்கு இது நிதியியல் சந்தை பங்கேற்பாளர்களை இயலச்செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.















