தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2022 செத்தெம்பரில் 73.7 சதவீதத்தைப் பதிவுசெய்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100)1 ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 ஓகத்தின் 70.2 சதவீதத்திலிருந்து 2022 செத்தெம்பரில் 73.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு  பணவீக்கத்தின் இத்தகைய அதிகரிப்பு, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலும் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்புக்களால் பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஓகத்தின் 84.6 சதவீதத்திலிருந்து 2022 செத்தெம்பரில் 85.8 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஓகத்தின் 57.1 சதவீதத்திலிருந்து 2022 செத்தெம்பரில் 62.8 சதவீதத்திற்கு அதிகரித்தது.

அண்மையில் மாதத்திற்கு மாதம் பணவீக்கத்தில் அவதானிக்கப்பட்ட மிதமடைதல் 2022 செத்தெம்பரிலும் தொடர்ந்தது என்பது கவனிக்கத்தக்கதாகும். அதற்கமைய, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2022 செத்தெம்பரில் 2.34 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. இதற்கு, முறையே 1.96 சதவீதத்தினையும் 0.38 சதவீதத்தினையும் கொண்ட உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன. உணவல்லா வகையினுள் மாதகாலப்பகுதியில் வீடமைப்பு, நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள் (மின்சாரக் கட்டணம், மண்ணெண்ணை மற்றும் நீர்க் கட்டணம்), நானாவிதப் பொருட்கள் மற்றும் பணிகள் போன்ற துணை வகைகளின் விலைகளில்  அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன. மேலும், உணவு வகையினுள் பழவர்க்கங்கள், கோதுமை மா மற்றும் கோழி இறைச்சி என்பவற்றின் விலைகளில் அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன. எவ்வாறாயினும், மாதகாலப்பகுதியில் அரிசி, சீனி மற்றும் பருப்பு என்பவற்றின் விலைகள் குறைவடைந்தன.

அதேவேளை, ஆண்டுச் சராசரிப் பணவீக்கம் 2022 ஓகத்தின்; 31.3 சதவீதத்திலிருந்து 2022 செத்தெம்பரில் 36.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. 

பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஓகத்தின் 60.5 சதவீதத்திலிருந்து 2022 செத்தெம்பரில் 64.1 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம், 2022 ஓகத்தின்  26.0 சதவீதத்திலிருந்து 2022 செத்தெம்பரில் 31.0 சதவீதத்திற்கு அதிகரித்தது.

முழுவடிவம்

Published Date: 

Friday, October 21, 2022