கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம், 2022 ஒத்தோபரில் 66.0 சதவீதத்தைப் பதிவுசெய்து, 2021 ஒத்தோபரிலிருந்து அவதானிக்கப்பட்ட அதன் தொடர்ச்சியான அதிகரிக்கின்ற போக்கிலிருந்து மீண்டது

2021 ஒத்தோபர் தொடக்கம் அதிகரித்த போக்கில் சென்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 செத்தெம்பரின் 69.8 சதவீதத்திலிருந்து 2022 ஒத்தோபரில் 66.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.  அதையொத்த போக்கினைத் தொடர்ந்து, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 செத்தெம்பரின் 94.9 சதவீதத்திலிருந்து 2022 ஒத்தோபரில் 85.6 சதவீதத்திற்கு குறைவடைந்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 செத்தெம்பரின் 57.6 சதவீதத்திலிருந்து 2022 ஒத்தோபரில் 56.3 சதவீதத்திற்கு குறைவடைந்தது.

மாதத்திற்கு மாதம் அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாற்றமானது தொடர்ச்சியாக பதினேழு மாதங்களின் பின்னர், 2022 ஒத்தோபரில் 0.35 சதவீதத்தினால் குறைவடைந்தது. 0.75 சதவீதமாகவிருந்த உணவுவகையிலுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த வீழ்ச்சி இதற்கு பிரதானமாகப் பங்களித்தது. அதற்கமைய, உணவு வகையினுள் உடன் மீன், கருவாடு மற்றும் அரிசி விலைகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிகள் அவதானிக்கப்பட்டன.  இருந்தபோதிலும், உணவல்லா வகையினுள் தொலைத்தொடர்பு (செல்லிட, நிலையான தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்கள்) ஆடைகள், பாதணிகள், உணவகம் மற்றும் விடுதிகள் துணை வகைகளின் விலைகளில் மாதகாலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள்  காரணமாக 2022 ஒத்தோபரில் மாதாந்த அதிகரிப்பொன்று பதிவாகியது. எனினும், போக்குவரத்து (பெற்றோல் மற்றும் டீசல்) துணை வகை 2022 ஒத்தோபரில் குறைவடைந்து, உணவல்லா வகையில் ஒட்டுமொத்த மாதாந்த அதிகரிப்பு பாரியளவில் மிதமடைவதற்கு பங்களித்தது.

முழு வடிவம்

 

Published Date: 

Monday, October 31, 2022