இலங்கை மத்திய வங்கி அதன் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளூடாக 2024 ஒத்தோபர் 25 அன்று ரூ.100 பில்லியன்களை “அச்சிட்டது” எனக் குறிப்பிட்டு அண்மையில் அறிக்கைகள் வெளிவந்தன. இவ்வறிக்கைகள் செம்மையற்றவை மற்றும் அடிப்படையற்றவை என்பதை தெளிவுபடுத்துவது முக்கியமானதாகும். திறந்த சந்தைத் தொழிற்பாடுகளூடாக திரவத்தன்மையை (பணம்) உட்செலுத்துவது பொருளாதாரத்தில் குறுகிய கால வட்டி வீதங்களை நிலைநிறுத்தி விலை நிலையுறுதியை உறுதிசெய்யும் நோக்கத்திற்காக வங்கித்தொழில் முறைமையில் போதுமான திரவத்தன்மையை முகாமைசெய்வதை நோக்காகக்கொண்ட வழமையான மத்திய வங்கித் தொழிற்பாடொன்றாகும். ஆகையினால் அது “நாணயம் அச்சிடல்” என ஒட்டுமொத்தமாக தவறாகப் பொருள்கொள்ளப்பட முடியாது.