Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – கட்டடவாக்கம் 2025 யூலையில் மேலும் அதிகரித்தது

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 யூலையில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவடைதலைக் காண்பித்து, 60.0 ஆக அதிகரித்தது. கட்டுமானக் கருத்திட்டங்கள் கிடைக்கப்பெறும்தன்மையில் நிலையான அதிகரிப்பை பல நிறுவனங்கள் பதிவுசெய்து, தொழில்துறையில் நேர்க்கணியமான வளர்ச்சி உத்வேகத்தை சமிக்ஞைப்படுத்தியது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2025 யூலை

நடைமுறைக் கணக்கானது 2025இன் இதுவரையான காலப்பகுதியில் தொடர்ச்சியாக மாதாந்த மிகைகளைப் பதிவுசெய்ததுடன், வெளிநாட்டுத் துறையின் செயலாற்றம் 2025 யூலையில் மேலும் வலுவடைந்தது. 

2025 யூலை இறுதியுடன் முடிவடைந்த ஏழு மாத காலப்பகுதியில், வணிகப் பொருட்கள் மற்றும் பணிகள் உள்ளடங்கலாக, மொத்த ஏற்றுமதிகள் ஐ.அ.டொலர் 12.0 பில்லியனாக மேம்பட்டு, 6.7 சதவீதம் கொண்ட ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியொன்றைப் பதிவுசெய்தன. வணிகப் பொருட்களின் ஏற்றுமதிகள் இதுவரை இல்லாத உயர்ந்தளவான ஏற்றுமதிகளைப் பதிவுசெய்து, ஐ.அ.டொலர் 1.3 பில்லியனாக விளங்கின. ஏற்றுமதியின் வளர்ச்சி இறக்குமதியை விடவும் விஞ்சி இருந்தமையினால், வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறை 2024 யூலையுடன் ஒப்பிடுகையில் 2025 யூலையில் சுருக்கமடைந்தது. 

75 ஆவது ஆண்டுநிறைவைக் குறிக்கும் சுற்றோட்டத்திற்கு விடப்படும் ரூ.2000 ஞாபகார்த்த நாணயத் தாளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டது

75 ஆவது ஆண்டுநிறைவைக் குறிக்கும் சுற்றோட்டத்திற்கு விடப்படும் ரூ.2000 ஞாபகார்த்த நாணயத் தாளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. தேசத்தின் முன்னேற்றத்திற்கான அத்திவாரமாக பொருளாதார உறுதிப்பாட்டைப் பேணுவதற்கான மத்திய வங்கியின் தளராத அர்ப்பணிப்பினை பிரதிபலித்து “சுபீட்சத்திற்கான உறுதிப்பாடு” எனும் ஆண்டுநிறைவின் கருப்பொருளுக்கு ஒத்திசைவாக இந்நாணயம் அமைந்துள்ளது. இது இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் ஐந்தாவது ஞாபகார்த்த நாணயத் தாளாகும்.

காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி – 2025இன் முதலாம் அரையாண்டு

கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2024இன் முதலாம் அரையாண்டுடன் ஒப்பிடுகையில், 2025இன் முதலாம் அரையாண்டில் 11.4 சதவீதத்தினால் அதிகரித்தது. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளும் அதாவது, வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டிகள் இவ்வதிகரிப்பிற்குப் பங்களித்து, முறையே 14.4 சதவீதம், 11.5 சதவீதம் மற்றும் 8.4 சதவீதம் கொண்ட ஆண்டு அதிகரிப்புகளைப் பதிவுசெய்தன. அதேவேளை, அரையாண்டு அடிப்படையில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியும் அதன் துணைக் குறிகாட்டிகளும் 2024இன் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியில் பதிவாகிய பெறுமதிகளுடன் ஒப்பிடுகையில் 2025இன் முதலாம் அரையாண்டு காலப்பகுதியில் உயர்ந்தளவான வேகத்தில் அதிகரித்தன. இது தொடர்பில், அதிகூடிய அதிகரிப்பு வதிவிடக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியில் பதிவுசெய்யப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து வர்த்தக காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டிகள் காணப்பட்டன.

இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2025 யூலை

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 யூலையில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் மேம்பாடுகளை எடுத்துக்காட்டுகின்றன.

தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2025 யூலையில் 62.2 ஆக உயர்வான வீதத்தில் அதிகரித்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் விரிவடைதலினை எடுத்துக்காட்டுகின்றது. அனைத்து துணைச் சுட்டெண்களும் இம்மேம்பாட்டிற்கு சாதகமாகப் பங்களித்தன. 

இலங்கை மத்திய வங்கி நாணயக் கொள்கை அறிக்கை 2025 ஓகத்தினை வெளியிடுகின்றது

மத்திய வங்கி 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் தேவைப்பாடுகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் 2025இற்கான அதன் இரண்டாவது நாணயக் கொள்கை அறிக்கையினை வெளியிட்டது. ஆண்டொன்றிற்கு இருமுறை வெளியிடப்படுகின்ற நாணயக் கொள்கை அறிக்கையானது பொருளாதாரம், குறிப்பாக பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சித் தோற்றப்பாடு, தொடர்பிலான முன்னோக்கிய பார்வையிலமைந்த நுண்ணோக்குகள் மற்றும் எறிவுகளிற்கான இடர்நேர்வுகளை வழங்குகின்றது. இவ்வறிக்கையின் ஊடாக மத்திய வங்கி அதன் அண்மைய நாணயக் கொள்கைத் தீர்மானங்களிற்குப் பின்னணியிலுள்ள நியாயபூர்வதன்மையினைத் தொடர்பூட்டுவதன் மூலம் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறுந்தன்மை என்பவற்றினை மேம்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது.

Pages

சந்தை அறிவிப்புகள்