நாணயச் சபையால் முகாமைச் செய்யப்படுகின்ற ஊழியர் சேமலாப நிதியமானது இலங்கையின் பாரிய ஓய்வூநிதியமாக விளங்குகின்றது. ஊழியர் நிதியத்தின் பெறுமதியைப் பாதுகாக்கின்ற அதேவேளை அதன் உறுப்பினர்களுக்கான ஆதாயங்களை அதிகரிக்கின்ற நீண்டகால நோக்குடன் அதன் முதலீட்டுச் சொத்துப்பட்டியலை இந்நிதியம் பேணுகின்றது. இந்நிதியம், குறித்த சில ஏற்றுக்கொள்ளப்பட்ட இடர்நேர்வு வழியலகுகளினுள் தொழிற்படுவதுடன் அதன் 94 சதவீதமான நிதியங்களை அரசாங்கப் பிணையங்களிலும் எஞ்சியவற்றை பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத பங்குரிமைகள், கம்பனித் தொகுதிக்கடன்கள், நம்பிக்கைச் சான்றிதழ்கள் அத்துடன் ஏனைய பணச் சந்தை சாதனங்கள் போன்றவற்றிலும் முதலீடுசெய்துள்ளது. குறித்துரைக்கப்பட்ட வரையறைகளுக்குட்பட்டு நாணயச் சபையினால் ஒப்புதலளிக்கப்பட்ட உபாயச் சொத்து ஒதுக்கீட்டில் வழங்கப்பட்டவாறான தகைமையுடைய சொத்து வகுப்புக்களில் பன்முகப்படுத்தப்பட்ட சொத்துப்பட்டியலில் நிதியங்கள் முதலிடப்பட்டுள்ளன. 2020.12.31 அன்றுள்ளவாறான ஊழியர் சேமலாப நிதியத்தின் முதலீட்டுச் சொத்துப்பட்டியலின் சந்தைப் பெறுமதியானது ரூ. 3,243 பில்லியனாகக் காணப்பட்டது.
















