ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் தொடர்ச்சியாக ஏழாவது தடவையாக ஐ.அ.டொலர் 1.0 பில்லியனை விஞ்சிய பெறுமதிகளைக் கொண்டிருந்த போதும், வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் 2021 திசெம்பரில் விரிவடைந்தமைக்கு இறக்குமதிகளின் மிதமிஞ்சிய அதிகரிப்பினால் பதிவுசெய்யப்பட்ட முன்னொருபோதுமில்லாத உயர்ந்தளவிலான மாதாந்த இறக்குமதிச் செலவினம் முக்கிய காரணமாயமைந்தது. 2021ஆம் ஆண்டுப்பகுதியில், ஏற்றுமதிகளின் வளர்ச்சியினை விட விஞ்சிக் காணப்பட்ட இறக்குமதிகளின் கணிசமானளவு அதிகரிப்பினால் உந்தப்பட்டு வர்த்தகப் பற்றாக்குறை குறிப்பிடத்தக்களவு விரிவடைந்து காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் முன்னைய மாதத்திலும் பார்க்க குறிப்பிடத்தக்கதொரு அதிகரிப்புடன் வளர்ச்சி உத்வேகத்தினைத் தொடர்ந்திருந்தன. அதேவேளை, தொழிலாளர் பணவனுப்பல்கள் 2021 திசெம்பரில் மாதாந்த அடிப்படையிலான வளர்ச்சியினைப் பதிவுசெய்து, பணவனுப்பல்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஊக்குவிப்புத் திட்டத்திற்கான பதிலிறுப்பினையும் பருவகால அதிகரிப்பினையும் பிரதிபலித்திருந்தன.















இலங்கைக்கு வெளிநாட்டு பணவனுப்பல் உட்பாய்ச்சல்களை அதிகரிப்பதற்கும் அதேபோன்று வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு பணம் அனுப்புகின்ற போது முறைசார்ந்த பணம் அனுப்பும் வழிகளை உபயோகிப்பதனை ஊக்குவிப்பதற்கும் இலங்கை மத்திய வங்கி தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. அதற்கமைய, "Lanka Remit" என்ற வர்த்தகநாமத்தின் கீழ் தேசிய வெளிநாட்டு பணவனுப்பல் நடமாடும் செயலியினை இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்துள்ளது. இச்செயலி லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிடெட் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.