2022இன் முதலரைப்பகுதியில் கணிசமானளவு உயர்வாகவிருந்த உள்நாட்டு பணச் சந்தையின் திரவத்தன்மைப் பற்றாக்குறையானது 2022இன் பிற்பகுதியில் வீழ்ச்சியடைந்தது. எனினும், பணச் சந்தை திரவத்தன்மை நிலைமைகளில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பகுதியளவில் உள்நாட்டு பணச் சந்தைகளின் செயற்பாடு குறைவாக இருந்ததன் காரணமாக சந்தை வட்டி வீதங்கள் தொடர்ந்தும் உயர்வாக காணப்பட்டது. அதேவேளை, பல்வேறு உரிமம்பெற்ற வங்கிகள் அவற்றின் கட்டமைப்புசார் திரவத்தன்மைத் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கான சந்தை அடிப்படையிலான நிதியிடல் தெரிவுகளைக் கருத்திற்கொள்ளாது மத்திய வங்கியின் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் கீழ் ஓரிரவு துணைநில் வசதிகள் மீது தொடர்ந்தும் மிதமிஞ்சியளவு தங்கியிருக்கின்றன என்று அவதானிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து நிதியிடல் தெரிவுகளைப் பயன்படுத்திய பின்னர் மீளப் பெறும் தெரிவுகளாகப் பயன்படுத்துவதற்கு கிடைக்கக்கூடியதாகவிருக்கின்ற இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் ஓரிரவு வசதிகள் மீது மிகையாக சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான எந்தவொரு சமிஞ்சைகளை அத்தகைய உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் எடுத்துக்காட்டவில்லை.
















