Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – 2022 மே

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2022 மேயில் குறைவடைந்த செயலாற்றத்தினைக் காண்பித்தன.

தயாரிப்பு முகாமையாளர் கொள்வனவு சுட்டெண்ணானது ஏப்பிறல் மாதத்தில் பருவகால ரீதியாக குறைவான பெறுமதியிலிருந்து 13.9 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட அதிகரிப்புடன் 2022 மேயில் 50.3 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. 

பணிகள் துறை கொ.மு.சுட்டெண், 2022 மேயில் 42.4 சுட்டெண் பெறுமதிக்கு சிறிதளவு வீழ்ச்சியடைந்து தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாகவும் பணிகள் நடவடிக்கைகளில் சுருக்கத்தை எடுத்துக்காட்டியது. 

முழுவடிவம்

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2022 ஏப்பிறல்

2022 ஏப்பிறலில் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் இறக்குமதிச் செலவினம் குறைவடைந்த அதேவேளையில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் அதிகரித்து காணப்பட்டது. சுங்கத்திலிருந்தான தற்காலிகமான தரவுகளின்படி, இறக்குமதியில் ஏற்பட்ட இக் குறைவானது 2022 மேயில் வேகத்தை கூட்டியுள்ளது. இதன் விளைவாக வர்த்தகப் பற்றாக்குறையானது ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் குறிப்பிடத்தக்க சுருக்கமொன்றினைப் பதிவுசெய்துள்ளது. அதேவேளை, சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பன முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 ஏப்பிறலில் மிதமான செயலாற்றமொன்றினைக் காண்பித்தன. இருப்பினும், 2022 மேயில் தொழிலாளர் பணவனுப்பல்கள் மீளெழுச்சியடைந்து வெளிநாட்டு நடைமுறைக்கணக்கின் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவளித்தது. அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை என்பவற்றில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் 2022 ஏப்பிறல் மாத காலப்பகுதியில் சிறியளவிலான தேறிய உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன. உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் தொடர்ந்து காணப்பட்ட அழுத்தங்களைக் கருத்திற்கொண்டு, முறைசார சந்தை நடவடிக்கைகளைக் குறைக்கவும் உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற சந்தை செலாவணி வீதங்களுக்கிடையிலான இடைவெளியைச் சுருக்கவும் உதவிய திறந்த கணக்குகள் மற்றும் சரக்குக் கொடுப்பனவுகள் முறைமைகள் மீதான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய வங்கி 2022 மேயில் அறிமுகப்படுத்தியது. மேலும், மத்திய வங்கியானது அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்கும் 2022 மே 13 முதல் வங்கிகளுக்கிடையிலான சந்தையில் முன்னைய நாளில் நிர்ணயிக்கப்பட்ட செலாவணி வீதத்தின் அடிப்படையில் தளம்பல் தன்மையின் அளவு (அனுமதிக்கக்கூடிய இரு பக்க மாறுபாட்டு எல்லையுடன்) குறித்த தினசரி வழிகாட்டலை வழங்கத் தொடங்கியது. இப்புதிய ஏற்பாடுகளின் நடைமுறைப்படுத்தலானது இதுவரையிலான செலாவணி வீத நிர்ணயத்தில் பாரியளவிலான உறுதிப்பாட்டினை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய செலாவணிவீத ஏற்பாடு: பின்னணி, இதுவரையிலான நேர்க்கணிய தாக்கம் மற்றும் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள்

இக்குறிப்பு தற்போதைய செலாவணிவீத ஏற்பாட்டிற்கான பின்னணி மற்றும் அது ஏற்கனவே ஏற்படுத்தியுள்ள நேர்க்கணிய தாக்கம் மற்றும் எதிர்வரும் காலப்பகுதியில் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள் என்பன தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுபடுத்த எண்ணுகின்றது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2022 மேயில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் மேலும் அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 ஏப்பிறலின் 29.8 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 39.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இவ்வதிகரிப்பானது உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் மாதாந்த அதிகரிப்புக்களினால் தூண்டப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 ஏப்பிறலின் 46.6 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 57.4 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஏப்பிறலின் 22.0 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 30.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்காக வங்கித்தொழில் முறைமையினூடாக வெளிநாட்டுச் செலாவணியின் கிடைப்பனவை நிச்சயப்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பினை மத்திய வங்கி மீளுறுதிப்படுத்துகின்றது

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்யும் பட்சத்தில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு திறந்த கணக்குக் கொடுப்பனவு நியதிகள் அல்லது சரக்குக் கணக்கு நியதிகளைப் பயன்படுத்துவதனைக் கட்டுப்படுத்தி, 2022 மே 06ஆம் திகதியிடப்பட்ட 2022ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கொடுப்பனவு நியதிகள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளை 2022 மே 20 தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் நிதியமைச்சு வெளியிட்டது.

உள்நாட்டு வங்கித்தொழில் முறைமையில் வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மை நிலைமைகளை மேம்படுத்தும் பொருட்டு இலங்கை மத்திய வங்கியினாலும் அரசாங்கத்தினாலும் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஏனைய பல்வேறு வழிமுறைகளுடன் இவ்வழிமுறை இணைந்து செல்கின்றது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினராக திரு நிஹால் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார்

திரு. அந்தோனி நிஹால் பொன்சேகா 2022 மே 26 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை உறுப்பினராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னர் 2016 யூலை தொடக்கம் 2020 மே வரை நாணயச் சபையில் பணியாற்றியிருந்தார்.

இவர் கொழும்பு, இலங்கைப் பல்கலைக்கழகத்திலிருந்து தனது விஞ்ஞானமானிப் பட்டத்தை பெற்றுக்கொண்டதுடன் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய வங்கியாளர்கள் நிறுவனத்தின் சக உறுப்பினரும் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய பிணையங்கள் மற்றும் முதலீடுகள் நிறுவனத்தின் கௌரவ சக உறுப்பினருமாவார். இவர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் மூத்த சுயாதீனப் பணிப்பாளர் மற்றும் குழுமக் கணக்காய்வுக் குழுவின் தலைவர், பீனிக்ஸ் இன்டஸ்றீஸ் லிமிடெட்டின் தலைவர், பிரான்டிக்ஸ் லங்கா லிமிடெட்டின் நிறைவேற்றுத்தரமற்ற பணிப்பாளர் மற்றும் கணக்காய்வுக் குழுத் தலைவர் அத்துடன் பீனிக்ஸ் வென்ஜெர்ஸ் லிமிடெட்டின் நிறைவேற்றுத்தரமற்ற பணிப்பாளர் முதலீட்டுக் குழுத் தலைவர் ஆகிய பதவிகளை வகிக்கின்றார்.

Pages