Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2019 மாச்சு

2019இன் முதற்காலாண்டுப்பகுதியில், ஏற்றுமதி வருவாய்கள் 5.6 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) அதிகரித்த வேளையில் இறக்குமதிச் செலவினம் 19.3 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமையின் காரணமாக வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை, 2018இன் முதற்காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 2,982 மில்லியனிலிருந்து ஐ.அ.டொலர் 1,661 மில்லியனுக்கு சுருக்கமடைந்தது.

2019 மாச்சில், வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை 2018 மாச்சின் ஐ.அ.டொலர் 871 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ஐ.அ.டொலர் 592 மில்லியனுக்குக் குறுக்கமடைந்தது. 

2019 மாச்சில் வர்த்தகப் பற்றாக்குறையின் கணிசமான குறைப்பிற்கு இறக்குமதிச் செலவினம் 12.6 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்தமை காரணமாக அமைந்ததுடன் இதற்கு ஏற்றுமதி வருவாய்கள் 2.6 சதவீதத்தினால் அதிகரித்தமை (ஆண்டிற்கு ஆண்டு) மேலும் ஆதரவாக விளங்கியது.

2019 ஏப்பிறலில் பணவீக்கம் அதிகரித்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 மாச்சின் 2.9 சதவீதத்திலிருந்து 2019 ஏப்பிறலில் 3.6 சதவீதத்திற்கு அதிகரித்தமைக்கு உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள விடயங்களின் விலைகளில் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்புக்களே காரணமாகும். இதேவேளையில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் உணவுப் பணவீக்கமானது 2019 ஏப்பிறலில் -1.2 சதவீதமாகக் காணப்பட்ட வேளையில் உணவல்லாப் பணவீக்கம் தொடர்ந்து நான்காவது மாதமாக அதிகரித்த போக்கினைக்காட்டி நடைமுறை மாதத்தில் 7.5 சதவீத அதிகரிப்பினைப் பதிவுசெய்தது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – 2019 ஏப்பிறல்

2019 ஏப்பிறலில், தயாரிப்பு நடவடிக்கைகள், 2019 மாச்சிலிருந்து 25.9 சுட்டெண் புள்ளிகளினால் வீழ்ச்சியடைந்தமையின் காரணமாக முன்னெப்பொழுதுமில்லாத விதத்தில் தாழ்ந்த 41.0 சுட்டெண் பெறுமதியினை பதிவுசெய்தது. தயாரிப்பு கொ.மு.சுட்டெண்ணின் வீழ்ச்சிக்கு உணவு, குடிபானம் மற்றும் புகையிலைத் தயாரிப்பு மற்றும்  புடவைகள், அணியும் ஆடைகள், தோல் மற்றும் அதனுடன் தொடர்பான நடவடிக்கைகளுக்கான உற்பத்திகள் என்பனவற்றிற்கான புதிய கட்டளைகளிலும் அவற்றின் உற்பத்தியிலும் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியே முக்கிய தூண்டுதலாக அமைந்தது. இவ்வீழ்ச்சிக்கு, ஏப்பிறலில் காணப்பட்ட புத்தாண்டு விடுமுறைகளும் மற்றும் சுமூகமான தொழிற்சாலை தொழிற்பாடுகளைப் பாதித்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதுகாப்புக் கரிசனைகளும் காரணங்களாக அமைந்தன. பெரும்பாலான பதிலிறுப்பாளர்கள், குறிப்பாக,  புடவை மற்றும் ஆடைத் துறையில் உள்ளவர்கள் பாதுகாப்பு கரிசனைகளின் காரணமாக தொழிற்சாலைகளின் வேலை நேரங்களை கட்டுப்படுத்தவேண்டியவர்களாக இருந்தமையினையும் விரும்பத்தக்க உற்பத்தி மட்டங்களை எய்தமுடியாமல் இருந்தமையினையும் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். 

த பினான்ஸ் கம்பனி பிஎல்சி மீது இலங்கை மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகள்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, கம்பனியின் வைப்பாளர்களினதும் ஏனைய ஆர்வலர்களினதும் நலன்களைப் பாதுகாக்கும் நோக்குடன் 2019 பெப்புருவரி 15ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தற்காலிக வழிமுறைகளாக, பல எண்ணிக்கையான ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை எடுத்தது. த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கு வசதியளிப்பதற்கான ஒழுங்குமுறைப்படுத்தும் வழிமுறைகள் புதிய வைப்புக்களை ஏற்றுக்கொள்தல், வைப்புக்களின் மீளப்பெறுகைகள், கடன்கள் மற்றும் முற்பணங்களின் பகிர்ந்தளிப்பு என்பனவற்றை இடைநிறுத்துவது உள்ளிட்ட வழிமுறைகளை உள்ளடக்கியிருக்கின்றன.

பன்னாட்டு நாணய நிதியம் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் ஐ.அ.டொலர் 164.1 மில்லியன் கொண்ட ஆறாவது தொகுதிக் கடனை விடுவிக்கிறது

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ், பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை ஐந்தாவது மீளாய்வினை நிறைவுசெய்ததுடன் சிஎஉ 118.5 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 164.1 மில்லியன்) கொண்ட ஆறாவது தொகுதியை பகிர்ந்தளிப்பதற்கு ஒப்புதலளித்திருக்கிறது. நிறைவேற்றுச் சபை ஒழுங்கினை ஓராண்டினால் 2020 யூன் வரை நீடிப்பதற்கும் எஞ்சிய பகிர்ந்தளிப்புக்களை மீள்கட்டப்படுத்துவதற்கும் ஒப்புதல் அளித்திருக்கிறது.

ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் துணை நிறுவனங்கள், துணை - துணை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டுச் சொத்துக்களின் விற்பனை

இலங்கை மத்திய வங்கி, 2017இன் பிற்பகுதியில் ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டினால் எதிர்நோக்கப்பட்ட கடுமையான திரவத்தன்மைத் தடைகள் உட்பட, 2011 இலிருந்து கம்பனியில் இடம்பெற்ற பல்வேறுபட்ட ஒழுங்கீனங்களையும் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு வழிமுறைகளையும் மேற்கொண்டது.

ஈரிஐ பினான்ஸ்சின் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய திரவத்தன்மை நிலைமையினையும் வைப்பாளர்களுக்கான மீள்கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியாத நிலைமையினையும் பரிசீலனையில் கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கம்பனியின் தொழிற்பாடுகளை மட்டுப்படுத்தும் விதத்தில் 2018.01.02ஆம் திகதியன்று பணிப்புரைகளை விடுத்தது. மேலும், கம்பனியினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவின்படி, விற்பனைப் பெறுகைகளைப் பயன்படுத்தி வைப்பாளர்களுக்கு மீள்கொடுப்பனவுகளை மேற்கொள்ளச் செய்யும் நோக்குடன், நாணயச் சபை ஈரிஐ பினான்ஸ்சின் அடையாளம் காணப்பட்ட துணை நிறுவனங்கள், துணை – துணை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டுச் சொத்துக்களை ஐ.அ.டொலர் 75 மில்லியன் கொண்ட தொகைக்கு விற்பனை செய்வதற்கான சம்மதத்தினை 2018.02.21 அன்று வழங்கியது.

Pages

சந்தை அறிவிப்புகள்