Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2018 செத்தெம்பர்

2018 செத்தெம்பரில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை அழுத்தமொன்றிற்கு உட்பட்டது. வர்த்தகக் கணக்கில் காணப்பட்ட விரிவடைந்த பற்றாக்குறை மற்றும் சொத்துப்பட்டியல் முதலீடுகள் வெளிச்செல்வதற்கு காரணமாக அமைந்த ஐ.அ.டொலர் வலுவடைந்தமை என்பன இம்மாதத்தில் சென்மதி நிலுவையினை மோசமாகப் பாதித்தன. ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் தொடர்ந்து நான்காவது மாதமாக ஐ.அ.டொலர் 1 பில்லியனை விஞ்சிக் காணப்பட்ட போதும் இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட உயர்ந்த வளர்ச்சி ஏற்றுமதி வருவாய்களின் அதிகரிப்பை விஞ்சிக் காணப்பட்டது. நிதியியல் கணக்கில், அரச பிணையங்கள் சந்தையின், வெளிநாட்டு முதலீடுகள் உலகளாவிய நிதியியல் சந்தைகள் உறுதியடைந்தமைக்கு பதிலிறுத்தும் விதத்தில் வெளிப்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன. அதேவேளை, கொழும்பு பங்குப் பரிவர்த்தனையும் செத்தெம்பர் மாதத்தில் வெளிநாட்டு முதலீடுகளில் ஒரு சில வெளிப்பாய்ச்சல்களைக் காட்டியது. இதன்விளைவாக ஆண்டின் முதல் எட்டுமாத காலப்பகுதியில் ஐ.அ.டொலருக்கெதிராக 5.3 சதவீதத்தினால் தேய்வடைந்த இலங்கை ரூபா செத்தெம்பரில் மேலும் 4.6 சதவீதத்தினால் தேய்வடைந்து உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் மீது அழுத்தமொன்றைப் பிரதிபலித்தது.

இலங்கை சமிக்ஞைப் படையணியின் 75ஆவது ஆண்டு நிறைவினை குறிக்கும் முகமாக ஞாபகார்த்த நாணயக் குத்தியொன்று வெளியிடப்படுகின்றது

இலங்கை மத்திய வங்கி, இலங்கை சமிக்ஞை படையணியின் 75ஆவது ஆண்டு நிறைவினைக் குறிக்கும் முகமாகவும் 75 ஆண்டு காலப்பகுதிக்கு மேலாக நாட்டிற்கு அது ஆற்றிய அரும் பணிக்கு அங்கீகாரமளிக்கும் விதத்திலும் ரூ.10 முகப்புப் பெறுமதியினைக் கொண்ட சுற்றோட்ட நியம ஞாபகார்த்த நாணயக் குத்தியொன்றினை வெளியிட்டிருக்கின்றது. முதலாவது நாணயக் குத்தி உத்தியோக பூர்வமாக மாண்புமிகு பிரதம மந்திரியும் நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான திரு. மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களினால் 2018 நவெம்பர் 27ஆம் நாளன்று கையளிக்கப்பட்டது. 

இந்நாணயக் குத்தியானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினூடாக சுற்றோட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதுடன் ஏற்கனவே சுற்றோட்டத்திலுள்ள ஏனைய நாணயத் தாள்கள் மற்றும் குத்திகளுடன் சேர்ந்து கொடுப்பனவுகளுக்கு பயன்படுத்தப்படக்கூடியதாகவிருக்கும்.

புதிய சுற்றோட்ட நியம நாணயக் குத்தித் தொடரொன்று வெளியிடப்படுகின்றது

இலங்கை மத்திய வங்கி, நாணயக் குத்திகளின் வார்ப்புச் செலவினைக் குறைத்தல், நாணயக் குத்திகளின் பாவனைக் காலத்தினை அதிகரித்தல், இலகுவாக எடுத்துச் செல்லக்கூடிய தன்மையினை வழங்கல், கட்புல ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் இலகுவாக அடையாளம் காணக்கூடிய தன்மையை வழங்கி ஆகியவற்றின் குறிக்கோள்களுடன் ரூ.10, ரூ.5, ரூ.2, ரூ.1 ஆகிய முகப்புப் பெறுமதியில் புதிய நாணயக் குத்தித் தொடரை சுற்றோட்டத்திற்கு விட்டிருக்கின்றது. முதலாவது நாணயக் குத்திகளைக் கொண்ட பொதி உத்தியோக பூர்வமாக மாண்புமிகு பிரதம மந்திரியும் நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான திரு. மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களினால் 2018 நவெம்பர் 27ஆம் நாளன்று கையளிக்கப்பட்டது. 

நாணயக் குத்திகள் 2018 திசெம்பர் 3ஆம் நாளிலிருந்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினூடாக சுற்றோட்டத்திற்கு விடப்படும். இப்புதிய நாணயக் குத்திகள் ஏற்கனவே வெளியிடப்பட்ட இதே நாணய இனக்குத்திகளுடன் சேர்ந்து சுற்றோட்டத்திலிருக்கும். 

2018 ஒத்தோபரில் பணவீக்கம் மேலும் வீழ்ச்சியடைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100)   ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறு முதன்மைப் பணவீக்கம் 2016 சனவரி முதல் ஆகக் குறைவாக 2018 ஒத்தோபரில் 0.1 சதவீதத்தினைப் பதிவுசெய்து தொடர்ச்சியாக மூன்றாவது மாதத்திற்காகவும் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தது. 2018 ஒத்தோபரில் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கத்தில் அவதானிக்கப்பட்ட மெதுவடைதலானது பிரதானமாக உயர்வான உணவு விலைகளின் காரணமாக முன்னைய ஆண்டின் தொடர்பான மாதத்தில் நிலவிய உயர்வான தளத்தினால் தூண்டப்பட்டிருந்தது. ஆண்டுக்கு ஆண்டு உணவுப் பணவீக்கமானது தொடர்ச்சியாக மூன்றாவது மாதத்திற்காகவும் வீழ்ச்சியடைந்து 2018 ஒத்தோபரில் -6.6 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. எவ்வாறாயினும், ஆண்டுக்கு ஆண்டு உணவல்லாப் பணவீக்கமானது மாதத்தின் போது தொடர்ந்து அதிகரித்து 5.8 சதவீதத்தினை அடைந்தது. 

ஆண்டுச் சராசரி அடிப்படையொன்றில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றம் 2018 செத்தெம்பரில் 4.0 சதவீதத்திலிருந்து 2018 ஒத்தோபரில் 3.3 சதவீதமாகக் குறைவடைந்தது.

மூடிஸ் பிந்திய தரப்படுத்தல் தீர்மானம் ஆதாரமற்றது

இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டு நாணய வழங்குநர் மற்றும் முன்னுரிமை பிணையளிக்கப்படாத தரப்படுத்தல்களை B1 (எதிர்மறை) இலிருந்து B2 (நிலையானது) இற்கு தரம் குறைப்பதற்காக 2018 நவெம்பர் 20 அன்று மூடிஸ் முதலீட்டாளர் சேவையினால் (மூடிஸ்); எடுக்கப்பட்ட தீர்மானமானது நாட்டின் பேரண்டப் பொருளாதார அடிப்படைகளை முறையாகப் பிரதிபலிக்கவில்லை எனவும் இது அடிப்படையற்றது எனவும் இலங்கை மத்திய வங்கி கருதுகின்றது. 

இலங்கைச் சுபீட்சச் சுட்டெண் - 2017

2017இல் இலங்கை சுபீட்சச் சுட்டெண் 2016இல் பதிவுசெய்யப்பட்ட 0.661 இலிருந்து 0.771 இற்கு அதிகரித்தமைக்கு “பொருளாதாரம் மற்றும் வியாபாரச் சூழல்” மற்றும் “சமூக பொருளாதார உட்கட்டமைப்பு” ஆகிய துணைச் சுட்டெண்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களே முக்கிய காரணங்களாகும். பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல் துணைச் சுட்டெண் 2017ஆம் ஆண்டுப்பகுதியில் மேம்பட்டமைக்கு தலைக்குரிய மொ.உ.உற்பத்தியில் ஏற்பட்ட அதிகரிப்பும் தொழில் வாய்ப்புடன் இணைந்து காணப்பட்ட அம்சங்களில் ஏற்பட்ட அதிகரிப்புக்களும் காரணங்களாக அமைந்தன. சமூக பொருளாதார உட்கட்டமைப்பு துணைச் சுட்டெண்ணினைப் பொறுத்தவரையில் விரைவுப் பாதையின் விரிவாக்கத்தின் காரணமாக வீதிவலையமைப்பில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், பாலங்கள் மற்றும் மேம்பாலச் செயற்றிட்டங்களின் கட்டுமானம், மின்னூட்டல் வசதிகளின் கிடைப்பனவு மற்றும் குழாய்வழி நீரின் தரத்தில் ஏற்பட்ட மேம்பாடுகள் என்பன முக்கிய தூண்டுதல்களாக அமைந்தன.

Pages

சந்தை அறிவிப்புகள்