Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

ஈகோன் ஐகோன் தொடர் IV எழுத்துமூலப் பரீட்சை - மாவட்ட வெற்றியாளர்கள்

2019இல் நடைபெறவிருக்கும் ஈகோன் ஐகோன் தொடர் IV தொலைக்காட்சி வினாடி வினாப் போட்டி நிகழ்ச்சிக்காக சிறந்த 16 பாடசாலைக் குழுக்களை (சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலம் ஒவ்வொன்றுக்கும்) தெரிவு செய்வதற்கு மத்திய வங்கியின் தொடர்பூட்டல் திணைக்களமானது மத்திய வங்கியின் பிரதேச அலுவலகங்களுடன் இணைந்து எழுத்துமூலப் பரீட்சையொன்றினை நடாத்தியது. இப்பரீட்சையானது நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட நிலையங்களில் 2019 சனவரி 22 அன்று சமகாலத்தில் நடாத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டப் பாடசாலைகளிலிருந்தும் க.பொ.த உயர்தர மாணவர் குழுக்கள் பங்கேற்றன. மாவட்ட ரீதியில் புள்ளிகளின் அடிப்டையில் முதலாவது இடத்தைப் பெற்ற குழுக்களின் பாடசாலைகளுடைய பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.

2018 திசெம்பரில் பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100)   ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2018 நவெம்பரில் பதிவுசெய்யப்பட்ட 1.0 சதவீதத்திலிருந்து திசெம்பரில் 0.4 சதவீதத்திற்குக் குறைவடைந்தது. திசெம்பர் 2018இல் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கத்தில் அவதானிக்கப்பட்ட குறைவானது உணவு மற்றும் உணவல்லாத வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் விலைகளின் குறைவினால் உந்தப்பட்டது. ஆண்டுக்கு ஆண்டு உணவுப் பணவீக்கம் 2018 நவெம்பரில் பதிவுசெய்யப்பட்ட -3.9 சதவீதத்திலிருந்து 2018 திசெம்பரில் -4.5 சதவீதத்திற்கு குறைவடைந்திருந்த வேளையில் ஆண்டுக்கு ஆண்டு உணவல்லாப் பணவீக்கமானது 2018 நவெம்பரின் 5.2 சதவீதத்திலிருந்து 2018 திசெம்பரில் 4.7 சதவீத்திற்கு குறைவடைந்தது. 

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றம் 2018 நவெம்பரின் 2.7 சதவீதத்திலிருந்து 2018 திசெம்பரில் 2.1 சதவீதத்திற்கு குறைவடைந்தது. 

இலங்கை மத்திய வங்கியை ஆள்மாறாட்டம் செய்து தீங்கிழைக்கும் திருட்டு முயற்சி

இலங்கையில் இருக்கும் நிதி நிறுவனங்களை பிரதானமாகக் குறிவைத்து ஆரம்பிக்கப்பட்டிருக்கும் திருட்டு முயற்சி பற்றி இலங்கை மத்திய வங்கிக்கு அறியக்கிடைத்துள்ளது. திருட்டு மின்னஞ்சல் முயற்சியானது இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்திலிருந்து கிடைக்கப்பெறுவது போலும் இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத்தின் அறிவிப்பு (Notice From Central Bank of Sri Lanka EPF) எனும் தலைப்புடனும் கிடைக்கப்பெறுகிறது. 

மத்திய வங்கிக்கு திறைசேரி உண்டியல்களை வழங்கல்

இலங்கை மத்திய வங்கியானது திறைசேரியின் காசுப்பாய்ச்சலில் 2019 சனவரி மாதத்திற்காக எதிர்பார்க்கப்பட்ட வெளிநாட்டு நாணய நிதியிடல் ஒழுங்கேற்பாடுகள் கிடைப்பதிலுள்ள தாமதத்தின் காரணமாக அரசாங்கத்தின் நிதியளித்தல் தேவைகளுக்கு உதவுவதற்காக திறைசேரியின் கோரிக்கையின் அடிப்படையில் 2019 சனவரியில் ரூ.90 பில்லியன் கொண்ட தொகைக்கான திறைசேரி உண்டியல்களுக்கு நிதியினை வழங்குவதற்கு நாணயச் சபையானது விதிவிலக்கான சூழ்நிலைகளின் கீழ் தேசிய நலன்கருதி திறைசேரியின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டது. 

திறைசேரி உண்டியல்களுக்காக இலங்கை மத்திய வங்கி மூலம் நிதி உதவி வழங்குவதன் காரணமாக ஏற்படும் பேரண்டப் பொருளாதார விளைவுகளை மீளாய்வுசெய்த அரசாங்கமானது கொடுக்கல்வாங்கலின் ஒரு பகுதியினை பெப்புருவரி மாதத்திலும் மீதியினை எதிர்பார்க்கப்பட்ட நிதியியல் ஒழுங்கேற்பாடுகள் கிடைக்கப்பெற்று அரசாங்கத்தின் கடன்படுதல் நிகழ்ச்சித்திட்டம் வழமைக்குத் திரும்பியவுடன் 2019இன் முதலாம் காலாண்டின் போதும் திரும்பி வழங்குவதற்கு இணங்கியுள்ளது. 

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு - 2018 திசெம்பர்

தயாரிப்பு நடவடிக்கைகள் நவெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் திசெம்பர் மாதத்தில் ஒரு மெதுவான வீதத்தில் அதிகரித்ததுடன், இதற்கு விசேடமாக புடவைகள், அணியும் ஆடைகள், தோல் மற்றும் அதனுடன் சார்ந்த நடவடிக்கைகளின் தொழில்நிலை மற்றும் உற்பத்தியில் ஏற்பட்ட மெதுவடைதலினால் பிரதானமாக உந்தப்பட்டது. சில தொழிலாளர்கள் சிறப்பான ஊதியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பருவகால தொழில்களை நோக்கிச் சென்றிருந்த காரணத்தினால் தொழில்நிலையில் ஒரு குறிப்பிடத்தக்களவு சரிவு உணரப்பட்டது. இது குறைவடைந்திருந்த உற்பத்தியினை பகுதியளவில் பாதித்திருந்தது. எவ்வாறாயினும், உணவு மற்றும் குடிபான உற்பத்திகளின் நடவடிக்கையில் தொடர்ச்சியான பண்டிகைப் பருவகாலக் கேள்வியின் பிரதானமான உந்தலினால் புதிய கட்டளைகள் அதிகரித்திருந்தது.

இலங்கை நிதி அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோருடனான சந்திப்பு தொடர்பில் பன்னாட்டு நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டின் லாகார்டே அவர்களின் அறிக்கை

பன்னாட்டு நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டீன் லாகார்டே இலங்கை நிதி அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோரை இன்று சந்தித்தார்.

சந்திப்பின் பின்னர் திருமதி லாகார்டே பின்வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளார்:

“அமைச்சர் சமரவீர மற்றும் ஆளுநர் குமாரசுவாமி ஆகியோரை இன்று பகல் சந்தித்தையிட்டு நான் மிகழ்ச்சியடைகிறேன். சவால்மிகுந்த பொருளாதாரச் சூழ்நிலைகள் மற்றும் நாட்டுக்கான கொள்கை முன்னுரிமைகள் தொடர்பாக நாம் கலந்துரையாடினோம். பன்னாட்டு நாணய நிதியத்தினால் உதவி வழங்கப்படும் பொருளாதாரச் சீர்திருத்த நிகழ்ச்சிநிரலுக்கு இலங்கையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை அதிகாரிகள் வலியுறுத்தினர்.

“நிகழ்ச்சிநிரலை காத்திரமாக நடைமுறைப்படுத்துவதுடன் கூடிய உறுதியான கொள்கைக் கலப்பானது நம்பிக்கையைப் பலப்படுத்துகின்ற அதேவேளை அதன் மக்களுக்குப் பயனளிக்கும் நிலைபெறத்தக்க, உயர்வான வளர்ச்சிப் பாதையில் இலங்கையினை நிலைநிறுத்துவதற்கு முக்கியமானதாக விளங்குகிறது. 

“இம்முயற்சிகள் சம்பந்தமாக இலங்கை அதிகாரிகளுக்கு ஆதரவளிப்பதற்கு பன்னாட்டு நாணய நிதியம் தயாராகவிருப்பதுடன், பெப்புருவரி மாத நடுப்பகுதியில் நிகழ்ச்சிதிட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்காக பன்னாட்டு நாணய நிதியக் குழுவொன்று கொழும்பு வரவுள்ளது.”

Pages

சந்தை அறிவிப்புகள்