உரிமம்பெற்ற நிதிக் கமபனிகளுக்கு அவற்றின் வியாபார விரிவாக்கங்களுக்கு ஆதரவளிக்கின்ற விதத்தில் வெளிநாட்டு மூலங்களிலிருந்து குறைந்த செலவில் நிதியிடலைப் பெற்றுக்கொள்வதற்கான நெகிழ்ச்சித்தன்மையினை வழங்கும் நோக்குடன் 2021 ஏப்பிறல் 9ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளினால் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு நாணயக் கடன்பாடுகள் மீது பணிப்புரைகளை விடுத்திருக்கிறது. இப்பணிப்புரைகளின் நோக்கங்கள் யாதெனில் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் வெளிநாட்டு நிதியிடல் வெளிப்படுத்துகைகளினால் உருவாக்கப்படும் ஏதேனும் நிதியியல் தளம்பல்களை உறுதிப்படுத்துவதும் அத்தகைய வெளிநாட்டு நாணயக் கடன்பாடுகளுக்கான இடர்நேர்வு முகாமைத்துவக் கட்டமைப்பினை வழங்குவதுமேயாகும்.
















