Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கைச் சபையானது 2024 சனவரி 22ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 9.00 சதவீதம் மற்றும் 10.00 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் பன்னாட்டுப் பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகளின் அனைத்தையுமுள்ளடக்கிய பகுப்பாய்வொன்றினைத் தொடர்ந்து, நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை இலக்கிடப்பட்ட 5 சதவீத மட்டத்தில் பேணுகின்ற வேளையில் பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றல்வாய்ந்த மட்டத்தினை அடைவதனை இயலச்செய்யும் பொருட்டு சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. வரிவிதிப்பு மற்றும் நிரம்பல் பக்க காரணிகள் என்பவற்றின் அண்மைய அபிவிருத்தித் தாக்கங்கள் பணவீக்கத்தின் மீது மேல்நோக்கிய அழுத்தங்களைக் குறுங்காலத்தில் தோற்றுவிக்கக்கூடுமென்பதனை சபை கருத்திற்கொண்டது. இருப்பினும், இவ்வபிவிருத்திகளின் தாக்கம் நடுத்தர காலப் பணவீக்கத் தோற்றப்பாட்டினைப் பெருமளவு மாற்றியமைக்காதென சபை கருதியது. மேலும், கடந்த கால நாணயக் கொள்கைத் தளர்த்தல் வழிமுறைகளினால் உருவாக்கப்பட்ட இடைவெளி மற்றும் சந்தைக் கடன்வழங்கல் வட்டி வீதங்களில் மேலும் கீழ்நோக்கிய சீராக்கத்திற்காக அரச பிணையங்களுடன் இணைக்கப்பட்ட இடர்நேர்வு மிகையின் வீழ்ச்சி என்பவற்றினை சபை கருத்திற்கொண்டது. சந்தைக் கடன்வழங்கல் வட்டி வீதங்களை மேலும் குறைப்பதிலிருந்து எதிர்பார்க்கப்படுகின்ற நன்மைகள் வியாபாரங்களுக்கும் தனிநபர்களுக்கும் நிதியியல் நிறுவனங்களின் மூலம் போதியளவிலும் விரைவாகவும் ஊடுகடத்தப்பட வேண்டுமென்பதனை சபை வலியுறுத்தியது.

பன்னாட்டு நாணய நிதியத்தின் அலுவலர்கள் இலங்கைக்கான விஜயத்தை நிறைவுசெய்துள்ளனர்

அண்மைய பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் கீழான பொருளாதார மற்றும் நிதியியல் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதிலுள்ள முன்னேற்றம் என்பன தொடர்பில் கலந்துரையாடுவதற்கு திரு. பீற்றர் புரூவர் தலைமையிலான பன்னாட்டு நாணய நிதியத்தின் பணிக்குழுவொன்று 2024 சனவரி 11 தொடக்கம் 19 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்தது. விஜயத்தின் இறுதியில் பன்னாட்டு நாணய நிதியம் பின்வரும் ஊடக அறிக்கையினை 2024 சனவரி 19 அன்று வெளியிட்டதுடன் அதனைக் கீழுள்ள இணைப்பின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (தயாரித்தல் மற்றும் பணிகள்) - 2023 ​திசெம்பர்

தயாரிப்பு மற்றும் பணிகள் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் இரண்டும் 2023 திசெம்பரில் அதிகரித்தன.

தயாரிப்புக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2023 திசெம்பரில் 52.7 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரித்தல் நடவடிக்கைகளில் விரிவடைதலினை எடுத்துக்காட்டியது. தொழில்நிலை தவிர அனைத்து துணைச் சுட்டெண்களிலும் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் இம்மேம்படுத்தலுக்குக் காரணமாக அமைந்தன.

பணிகள் துறை கொ.மு.சுட்டெண், 2023 திசெம்பரில் 58.9 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டியது. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் இதற்கு முன்னிலை வகித்திருந்தன. 

முழுவடிவம்

 

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2023 திசெம்பரில் அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 நவெம்பரின் 3.4 சதவீதத்திலிருந்து 2023 திசெம்பரில் 4.0 சதவீதத்திற்கு அதிகரித்தது. முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இவ்வதிகரிப்பானது அநேகமாக 2023 நவெம்பரில் இலங்கை மத்திய வங்கியினால் எதிர்பார்க்கப்பட்ட எறிவுகளிற்கு இசைவாக காணப்படுகின்றது.

ஐந்து மாதகால தொடர்ச்சியான பணச் சுருக்கத்தின் பின்னர், உணவு வகையானது 2023 நவெம்பரில் பதிவுசெய்த 3.6 சதவீதப் பணச் சுருக்கத்திலிருந்து 2023 திசெம்பரில் 0.3 சதவீதம் கொண்ட பணவீக்கத்தைப் பதிவுசெய்தது.  அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்காண்டு) 2023 நவெம்பரின் 6.8 சதவீதத்திலிருந்து 2023 திசெம்பரில் 5.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. கொ.நு.வி.சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2023 திசெம்பரில் 0.89 சதவீதத்தைப் பதிவுசெய்தமைக்கு உணவு வகையின் பொருட்களில் அவதானிக்கப்பட்ட 1.16 சதவீதம் கொண்ட விலை அதிகரிப்புக்கள் மற்றும் உணவல்லா வகையின் பொருட்களில் அவதானிக்கப்பட்ட 0.27 சதவீதம் கொண்ட விலை குறைப்புக்கள் ஆகியவற்றின் இணைந்த தாக்கம் காரணமாக அமைந்தது. பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம் (ஆண்டிற்காண்டு) 2023 நவெம்பரின் 0.8 சதவீதத்திலிருந்து 2023 திசெம்பரில் 0.6 சதவீதமாக குறைவடைந்தது.

கட்டடவாக்கத் தொழிற்துறைக்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் - நவெம்பர் 2023

கட்டடவாக்க கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2023 நவெம்பரில் 44.3 கொண்ட மொத்த நடவடிக்கைச் சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் சுருக்கமொன்றை எடுத்துக்காட்டியது. புதிய கருத்திட்டங்களின் குறைந்த மட்டமும் செயற்பாட்டிலுள்ள கருத்திட்டங்களுடன் தொடர்பான வேலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியும் அவை இறுதிக்கட்டங்களில் இருப்பதால் நடவடிக்கை மட்டங்களைத் தடைப்படுத்தியுள்ளன எனப் பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனா்.

முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில், புதிய கட்டளைகள் நவெம்பரில் உயர்வான வேகத்தில் வீழ்ச்சியடைந்தன. எனினும், அடுத்த ஆண்டின் முதலரைப்பகுதியில், குறிப்பாக அரசாங்க நிதியளிக்கப்பட்ட கருத்திட்டங்களை வழங்குவதில் பல பதிலிறுப்பாளர்கள் உயர்வடைதலொன்றை எதிர்பார்க்கின்றனர். தற்போதைய தொழிற்துறை சூழ்நிலையின் கீழ் குறைந்தபட்ச அலுவலர்களுடன் கம்பனிகள் இயங்குவதனால் தொழில்நிலை தொடர்ந்தும் சுருக்கமடைந்து காணப்பட்டது. மேலும், கட்டடவாக்க வேலையில் குறைவடைதலுக்கிணங்க கொள்வனவுகளின் அளவு வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, வழங்குநர் விநியோக நேரம் மாதகாலப்பகுதியில் நீட்சியடைந்து காணப்பட்டது.

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2023 நவெம்பர்

வர்த்தகப் பற்றாக்குறையானது ஓராண்டிற்கு முன்னைய நிலையுடனும் 2023 ஒத்தோபர் மாதத்துடனும் ஒப்பிடுகையில் ஏற்றுமதிகளில் ஏற்பட்ட மேம்பாடு மற்றும் இறக்குமதிகளில் ஏற்பட்ட சுருக்கம் என்பவற்றின் இணைந்த தாக்கத்தின் காரணமாக 2023 நவெம்பரில் சுருக்கமடைந்து காணப்பட்டது. ஏற்றுமதிகள் 2022 செத்தெம்பர் மாதத்திலிருந்து முதலாவது தடவையாக ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தன.

மாதாந்த தொழிலாளர் பணவனுப்பல்கள் ஐ.அ.டொலர் 500 மில்லியன் தொகையினை விஞ்சித் தொடர்ந்தும் காணப்பட்டதுடன் 2022இன் தொடர்புடைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2023 நவெம்பரில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தன.

Pages

சந்தை அறிவிப்புகள்