ஜோன் எக்ஸ்ரர் (1950 – 1953)
திரு. ஜோன் எக்ஸ்ரர் வங்கியின் முதலாவது ஆளுநராக 1950 ஓகத்து 28ஆம் திகதி பதிவியேற்றுக் கொண்டதுடன் 1953 யூனில் பதவியை விட்டுச் சென்றார்.
அமெரிக்கப் பொருளியலாளரான ஜோன் எக்ஸ்ரர் வூஸ்ரர் கல்லூரியிலிருந்து (1923 – 1928) பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார். பிளெச்சர் ஸ்கூல் ஒவ் லோ அன்ட் டிப்ளோமசியில் கல்வி கற்ற பின்னர் அவரின் ஈடுபாடு மாபெரும் மந்தம் தொடர்பானதாகக் காணப்பட்டமையினால் இது அவர் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தினை நாடுவதற்கு வழிவகுத்ததுடன் அங்கு அவர் தனது பொருளியல் கல்வியினை நிறைவு செய்து கொண்டார். ஹார்வார்ட்டில் பொருளியலைக் கற்பிக்கத் தொடங்கிய அவர் பணம் மற்றும் வங்கித்தொழிலில் பாண்டியத்தினைப் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் எக்ஸ்ரர் பெடரல் றிசேர்வ் முறைமையில் பொருளியலாளராக இணைந்து கொண்டார்.
மத்திய வங்கியை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப நிபுணத்துவத்திற்காக, இலங்கை அரசாங்கத்தினால் ஐக்கிய அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலிறுத்தும் விதத்தில், இப்பணியினை மேற்கொள்வதற்கு ஐக்கிய அமெரிக்காவின் பெடரல் றிசேர்வ் சபையினால் திரு. ஜோன் எக்ஸ்ரர் பெயர் குறிக்கப்பட்டார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர் பிலிப்பைன்ஸ் மத்திய வங்கியினை உருவாக்குவதிலும் ஈடுபட்டிருந்தார்.
தற்பொழுது எக்ஸ்ரர் அறிக்கை என அறியப்படும் திரு. ஜோன் எக்ஸ்ரரினால் வரையப்பட்ட விதந்துரைப்புக்களுக்கிணங்க 1950இல் இலங்கை மத்திய வங்கி உருவாக்கப்பட்டது. முதல் ஆளுநர் என்ற ரீதியில் அவரது பிரதான பணியாக வங்கியை நிறுவுவது, தொடர்பான அலுவலர்களை ஆட்சேர்ப்பது மற்றும் அதன் உருவாக்கக் காலத்தில் அதனை வழிநடத்திச் செல்வது என்பன காணப்பட்டன. திரு. ஜோன் எக்ஸ்ரர் ஆளுநர் என்ற அவரது பதவியினை 3 ஆண்டுகளின் பின்னர் இலங்கையரொருவரிடம் கையளித்தார். திரு. எக்ஸ்ரர் உலக வங்கியுடன் ஓராண்டு இணைந்திருந்ததன் பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் பெடரல் றிசேர்வ் முறைமைக்கு திரும்பியிருந்தார். 1959ஆம் ஆண்டு வரை அவர் நியூயோர்க் பெடரல் றிசேர்வ் வங்கியின் பன்னாட்டு தொழிற்பாடுகளின் துணைத் தலைவர் பதவியை வகித்தார். அதன் பின்னர் அவர் முதலாவது நஷனல் சிட்டி வங்கியில் மூத்த துணைத்தலைவராக இணைந்து 1960 இலிருந்து 1972 வரை மத்திய வங்கிகளுக்கும் அரசாங்கங்களுக்குமிடையிலான வெளிநாட்டு உறவுகளுக்குப் பொறுப்பாக இருந்தார்.
1972இல் ஓய்வுபெற்ற அவர் தனிப்பட்ட ஆலோசனைப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.