எச். ஈ. தென்னக்கோன் (1971 – 1979)
1971 யூலையில் ஆறாவது ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்ட திரு. ஹேபர்ட் ஏர்னஸ்ட் தென்னக்கோன் 1979 சனவரி 22ஆம் திகதி தென்னாசிய மத்திய வங்கி ஆளுநர்களின் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த வேளையில் மரணமானார்.
திரு. எச். ஈ. தென்னக்கோன் கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் கல்விகற்று இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரியில் வரலாற்றில் சிறப்புப் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டதுடன் பல்கலைக்கழகக் கல்வியை நிறைவு செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து கொண்டார்.
பொதுத் திறைசேரியில் இணைந்து கொண்ட இவர் திறைசேரிக்கான செயலாளராகவும் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் நிரந்தரச் செயலாளராகவும் தொழிற்பட்டார். இறுதியாக ஜெனீவாவிலுள்ள வர்த்தகம் மற்றும் தீர்வை மீதான பொது உடன்படிக்கையின் நிறைவேற்றுச் செயலாளருக்கான வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி மீதான சிறப்பு மதியுரையாளர் என்ற பதம் இவருக்கு வழங்கப்பட்டதுடன் இப்பதவியை ஏற்பதற்காக 1964இல் திறைசேரியில் அவரின் பதவியைத் துறந்தார். இந்நியமனத்திற்கு முன்னதாக அவர் வர்த்தகம் மற்றும் தீர்வை மீதான பொது உடன்படிக்கையின் நாட்டிற்கான பிரதிநிதியாக 1959இல் தொழிற்பட்டார். அவர் வர்த்தகம் மற்றும் தீர்வை மீதான பொது உடன்படிக்கையினாலும் ஐரோப்பிய பொருளாதாரச் சமூகத்தினாலும் ஒழுங்குசெய்யப்பட்ட மாநாடுகள் உட்பட ஜெனீவா, மணிலா மற்றும் டோக்கியோவில் நடைபெற்ற பல பன்னாட்டு மாநாடுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
டோக்கியோவில் நாட்டிற்கான தூதுவராக பணியாற்றிய பின்னர், இலங்கைக்கு திரும்பிய இவர் 1971இல் மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார்.