ரிகேஎஸ் பினான்ஸ் லிமிடெட் 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உரிமத்தினை இரத்துச் செய்தல்

011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கப்பட்ட நிதிக் கம்பனியான ரிகேஎஸ் பினான்ஸ் லிமிடெட் நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளையும் அதன் கீழ் விடுக்கப்பட்ட பல்வேறு பணிப்புரைகளையும் விதிகளையும் தொடர்ச்சியாக மீறிஃ மறுத்து வந்திருக்கின்றது. மேலும், ரிகேஎஸ் பினான்ஸ் லிமிடெட்டின் நிதியியல் நிலைமையும் போதுமானதற்ற மூலதன மட்டம், சொத்துக்களின் மோசமான தரம், தொடர்ச்சியான இழப்புக்கள் மற்றும் கோருகின்றமை அல்லது முதிர்ச்சியடைகின்றமை போன்ற சந்தர்ப்பங்களில் வைப்பாளர்களின் பணத்தினை மீளச் செலுத்தத் தவறுதல் போன்ற காரணங்களினால் திருப்திகரமானதாக காணப்படவில்லை.

நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கும் அச்சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட பணிப்புரைகள் மற்றும் விதிகளுக்கும் இணங்கியொழுகுவதற்கு ரிகேஎஸ் பினான்ஸிற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் (நாணயச் சபை) பல தடவைகள் கால நீடிப்புக்கள் வழங்கப்பட்டபோதிலும் ரிகேஎஸ் பினான்ஸின் நெருக்கடி நிலைமைகளை மீளெழுச்சிப்படுத்தும் விதத்தில் திருப்திகரமான முன்னேற்றங்கள் அடையப்படவோ அத்தகைய ஏற்பாடுகள் பணிப்புரைகள் மற்றும் விதிகளுக்கு இணங்கியொழுகவோ திருப்திகரமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

ரிகேஎஸ் பினான்ஸில் நிலவிய அத்தகைய கடுமையான கரிசனைகளை பரிசீலனையில்கொண்டு நாணயச்சபை, வைப்புக்கள் மற்றும் கடன்பாடுகளின் மீது உயர்ந்தபட்;ச உச்சவரம்பு விதிக்கப்பட்டமை, புதிய வைப்புக்களை ஏற்றுக்கொள்வது இடைநிறுத்தப்பட்டமை, புதிய கடன்களையும் முற்பணங்களையும் வழங்குவது இடைநிறுத்தப்பட்டமை, முதலீட்டு நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாடுகள் உட்பட பல்வேறு ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டது. எனினும், அத்தகைய ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் கூட ரிகேஎஸ் பினான்ஸ் திருப்திகரமான முன்னேற்றத்தினை கொண்டிராமையின் காரணமாக, நாணயச்சபை 2019 யூலை 10ஆம் நாள் ரிகேஎஸ் பினான்ஸின் உரிமத்தினை இரத்துச்செய்யும் அறிவித்தலை விடுத்தது. ரிகேஎஸ் பினான்ஸிற்கு வழங்கப்பட்ட உரிமம் ஏன் இரத்துச் செய்யப்படக்கூடாது என்பதற்கான காரணங்களை காட்டும் விதத்தில் நிதித்தொழில் சட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதியொன்றிற்குள் உரிமம் இரத்துச் செய்யப்பட்டமைக்கான அறிவித்தலுக்கு அதனது ஆட்சேபனையினை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய, ரிகேஎஸ் பினான்ஸ் 2019 ஓகத்து 02ஆம் திகதி மற்றும் ஓகத்து 08ஆம் திகதியிடப்பட்ட கடிதங்கள் மூலம் அதன் ஆட்சேபனைகளை நாணயச்சபைக்கு சமர்ப்பித்தது.

ஆட்சேபனைகளில் தரப்பட்ட காரணங்கள்ஃ முன்மொழிவுகள் போதுமானதற்றவையாகவும் ரிகேஎஸ் பினான்ஸிற்கு வழங்கப்பட்ட உரிமத்தினை இரத்துச் செய்வதற்கான அறிவித்தலை புறக்கீடு செய்வதற்குப் போதுமான காரணங்களை கொண்டிராதமையினாலும் நாணயச்சபை நிதித்தொழில் சட்டத்தின் கீழ் நிதி வியாபாரத்தினை கொண்டு நடாத்துவதற்கு ரிகேஎஸ் பினான்ஸிற்கு வழங்கியிருந்த உரிமத்தினை நிதித்தொழில் சட்டத்தின் 37ஆம் பிரிவின் நியதிகளில் இரத்துச் செய்வதற்கு  தீர்மானித்தது.

இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டமானது ரிகேஎஸ் பினான்ஸின் காப்புறுதி செய்யப்பட்ட ஒவ்வொரு வைப்பாளர்களுக்கும் இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தின் ஒழுங்குவிதிகளின்படி உயர்ந்தபட்சம் ரூ.600,000 வரையான தொகையினை இழப்பீடாகச் செலுத்துவதற்குத் தேவையான  நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மேலும், வைப்பாளர்கள்  எஞ்சியுள்ள தமது வைப்புக்களின் ஒரு பகுதியை நிதிக் கம்பனி முடிவுறுத்தப்படும் போது கோரல்களின் முன்னுரிமை தொடர்பான ஒழுங்குவிதிகளுக்குள்பட்டு ஒடுக்கிவிடும் செயன்முறையினூடாகவும் அறவிட்டுக் கொள்ள முடியும். 

ரிகேஎஸ் பினான்ஸின் அனைத்து கடன்பாட்டளர்களும் ரிகேஎஸ் பினான்ஸிற்கு அவர்கள் செலுத்த வேண்டிய  தொகையினை உரிய நேரத்தில் ரிகேஎஸ் பினான்ஸின் பெயரின் கீழ் உள்ள வங்கிக் கணக்கினூடாக மாத்திரம் செலுத்துமாறும் ரிகேஎஸ் பினான்ஸின் கடன்பாட்டாளர்களுக்கெதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளை தடுப்பதற்காக அனைத்து கொடுப்பனவுகளுக்குமான பதிவேடுகளை பேணுமாறும் ஆலோசனை வழங்கப்படுகின்றது. ஆகவே, வைப்பாளர்கள் இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கியுடன் ஒத்துழைக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலதிக விளக்கங்களுக்கு, வைப்பாளர்கள் 0112398806 மற்றும் 0112398774 ஊடாக அல்லது snbfi_querytksf@cbsl.lk மூலம் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்தினைத் தொடர்புகொள்ளலாம்.

Published Date: 

Thursday, September 19, 2019