தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் தற்காலிக மதிப்பீடுகளின்படி, 2016இன் முதற்காலாண்டில், உண்மை நியதிகளில் இலங்கையின் பொருளாதாரம் 2015இன் முதற்காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட 2.5 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 5.5 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்திருக்கிறது. இப்பொருளாதார வளர்ச்சிக்கு, கூட்டப்பட்ட பெறுமதி நியதிகளில், 2016இன் முதற்காலாண்டில் முறையே 8.3 சதவீதத்தினாலும் 4.9 சதவீதத்தினாலும் வளர்ச்சியடைந்த கைத்தொழில் மற்றும் பணிகள் துறைகளே பெரும் உதவியாக அமைந்தன. அதேவேளையில், இக்காலப்பகுதியில் வேளாண்மையுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகள் 1.9 சதவீதம் கொண்ட மிதமான வளர்ச்சியைப் பதிவுசெய்தன. முதற்காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட வளர்ச்சி வீதம் இவ்வாண்டிற்காக எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியுடன் பெருமளவிற்கு ஒத்துச்செல்வதாகக் காணப்பட்டது.
எதிர்பார்க்கப்பட்டவாறு, மே மாதத்தில் பணவீக்கம் அதிகரித்து, பெறுமதிசேர் வரியில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றும் பெறுமதிசேர் வரி மற்றும் தேசத்தினைக் கட்டியெழுப்பும் வரிக்கு ஏற்புடைத்தான குறிப்பிட்ட சில பொருட்கள் விலக்கப்பட்டமை அதேபோன்று மோசமான வானிலை நிலைமைகளின் காரணமாக வழங்கல்பக்கத்தில் ஏற்பட்ட இடையூறுகள் என்பனவற்றைப் பிரதிபலித்தது. இதன்படி, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட (2006/2007=100) முதன்மைப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், முன்னைய மாதத்தின் 3.1 சதவீதத்திலிருந்து 2016 மேயில் 4.8 சதவீதத்திற்கு அதிகரித்த வேளையில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட (2013=100) முதன்மைப் பணவீக்கமும் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் முன்னைய மாதத்தின் 4.3 சதவீதத்திலிருந்து 2016 மேயில் 5.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் ஆகிய இரண்டினாலும் அளவிடப்பட்ட மையப் பணவீக்கமும் 2016 மேயில் அதிகரித்து வரி அமைப்பிற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் தாக்கத்தினை முக்கியமாகப் பிரதிபலித்தது. இம்மாறத்தக்க விலை அசைவுகளுக்கு மத்தியிலும், எதிர்வரும் காலத்தில் மிதமடைந்து பொருத்தமான கேள்வி முகாமைத்துவக் கொள்கைகளின் உதவியுடன் நடுத்தர காலப்பகுதியில் ஒற்றை இலக்க மட்டத்தில் தொடர்ந்தும் விளங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
நாணயத் துறையில், விரிந்த பணத்தின் (M2b) ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி 2016 மாச்சில் பதிவுசெய்யப்பட்ட 18.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 ஏப்பிறல் 18.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. தனியார் துறை மற்றும் அரச
துறை ஆகிய இரண்டிற்குமான கொடுகடனில் ஏற்பட்ட விரிவாக்கம் விரிந்த பணத்தின் வளர்ச்சிக்கு முக்கிய தூண்டுதலாக விளங்கிய வேளையில் அரச கூட்டுத்தாபனங்களுக்கான கொடுகடன் ஆண்டின் முதல் நான்கு மாத காலப்பகுதியில் மீள்கொடுப்பனவொன்றினைப் பதிவுசெய்தது. வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 ஏப்பிறலில் 28.1 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்த போதும் உண்மை நியதிகளில் 2016 ஏப்பிறலில் பகிர்ந்தளிப்புக்கள் முன்னைய மாதத்தின் ரூ.87.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.27.4 பில்லியனுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. குறுங்கால பணச் சந்தை வீதங்கள் ஓரளவு உறுதியான தன்மையினைக் கொண்டிருந்த வேளையில் உள்நாட்டுப் பணச் சந்தையில் ரூபாத் திரவத்தன்மை குறைந்த மட்டத்தில் காணப்பட்டமைக்கிடையிலும் கூட மற்றைய சில்லறைச் சந்தை வட்டி வீதங்களில் அவதானிக்கப்பட்ட மேல் நோக்கிய போக்கு தொடர்ந்தும் காணப்பட்டு முன்னர் மேற்கொள்ளப்பட்ட நாணயக் கொள்கை வழிமுறைகளின் படிப்படியான பரிமாற்றச் செயன்முறையினைப் பிரதிபலித்தது.
பொருளாதாரத்தின் வெளிநாட்டுத் துறைப் பக்கத்தில், வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை 2016இன் முதல் நான்கு மாத காலப்பகுதியில், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2.4 சதவீதத்தினால் சுருக்கமடைந்தமைக்கு ஏற்றுமதிகளில் ஏற்பட்ட சுருக்கத்திலும் பார்க்க இறக்குமதிகளில் ஏற்பட்ட வீழ்ச்சி பெரிதாக இருந்தமையே காரணமாகும். 2016 சனவரியிலிருந்து மே வரையான காலப்பகுதியில் சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் ஏறத்தாழ 18.4 சதவீதத்தினால் அதிகரித்திருக்குமென மதிப்பிடப்பட்ட வேளையில், 2016 சனவரியிலிருந்து ஏப்பிறல் வரையான காலப்பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்கள் 4.7 சதவீதத்தினால் அதிகரித்தன. 2016 மே இறுதியளவில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 5.6 பில்லியனாக மதிப்பிடப்பட்டன.
அதேவேளை, பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை, சென்மதி நிலுவை நிலைமைக்கும் அரசாங்கத்தின் பரந்தளவான பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்திற்கும் உதவியளிக்கும் விதத்தில் 2016 யூன் 03ஆம் திகதியன்று இலங்கைக்கு சிஎஉ 1.1 பில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.5 பில்லியன்) கொண்ட மூன்றாண்டுகள் விரிவாக்கப்பட்ட நிதி வசதியொன்றிற்கு ஒப்புதலளித்தது. ப.நா. நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஒப்புதல் மற்றும் அதனைத் தொடர்ந்து சந்தை மனோபாவங்களில் ஏற்பட்ட முன்னேற்றம் என்பனவற்றின் காரணமாக 2016இன் யூன் மாதம் வரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலருக்கெதிராக இலங்கை ரூபா உயர்வடைந்தது. முன்னோக்கிப் பார்க்கையில், விரிவாக்கப்பட்ட நிதி வசதி, ஏனைய பல்புடை மற்றும் இருபுடை கொடுகடன் வசதிகள் என்பன திட்டமிடப்பட்ட அமைப்பியல் சீர்திருத்தங்கள் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட படுகடனை உருவாக்காத மூலதனப் பாய்ச்சல் என்பனவற்றுடன் சேர்ந்து நாட்டின் வெளிநாட்டு நிலைமையினைப் பலப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. இறைத் துறையில் எதிர்பார்க்கப்படுகின்ற முன்னேற்றங்கள் நீடித்திருக்கக்கூடிய அடிப்படையில் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினைப் பேணுவது தொடர்பான மத்திய வங்கியின் கொள்கைகளுக்கு உதவும்.
மேலே ஆராயப்பட்ட அபிவிருத்திகளைப் பரிசீலனையில் கொண்டு, நாணயச் சபை 2016 யூன் 24ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் தற்போதைய நாணயக் கொள்கை நிலை பொருத்தமானது என்ற கருத்தினைக் கொண்டிருந்ததுடன், அதற்கிணங்க மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் தற்போதைய வீதமான முறையே 6.50 சதவீதத்தினாலும் 8.00 சதவீதத்தினாலும் மாற்றமின்றிப் பேணுவதெனத் தீர்மானித்தது. தேவையானவிடத்து நாணயச் சபை உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தையில் ஏற்படும் அபிவிருத்திகளைத் தொடர்ந்தும் நெருக்கமாகக் கண்காணிப்பதுடன் தேவையானவிடத்து நாணயக் கொள்கை நிலையிலும் பொருத்தமான சீராக்கங்களை செய்யும்.
நாணயக் கொள்கைத் தீர்மானம்: | கொள்கை வீதங்கள் மாற்றப்படவில்லை |
துணைநில் வைப்பு வசதி வீதம் | 6.50% |
துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் | 8.00% |
நியதி ஒதுக்கு விகிதம் | 7.50% |