எதிர்வரும் காலப்பகுதியில் மத்திய வங்கி உள்நாட்டு வட்டி வீதங்களில் உயர்வினை எதிர்பார்க்கின்றது எனத் தெரிவிக்கின்ற அண்மைய ஒரு சில ஊடக அறிக்கைகள் பற்றி இலங்கை மத்திய வங்கி அதன் கவனத்தினைச் செலுத்தியிருக்கிறது. அத்தகைய எதிர்பார்ப்பிற்காக குறிப்பிட்ட அறிக்கைகள் ஒதுக்குகளில் ஏற்பட்ட வீழ்ச்சி, எதிர்பார்த்ததிலும் பார்க்க உயர்வாகக் காணப்பட்ட இறக்குமதிகள் மற்றும் அரச பிணையங்கள் மீதான அதிகரித்த வட்டி வீதங்கள் என்பனவற்றை காரணங்களாக எடுத்துக்காட்டியிருக்கின்றன.
இலங்கை மத்திய வங்கி அதன் தற்போதைய எறிவுகளின் அடிப்படையில், சந்தை வட்டி வீதங்களில் அண்மைக் காலத்தில் அதிகரிப்பு எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை என்பதனை வலியுறுத்துகிறது. முதன்மைப் பணவீக்கம், மையப் பணவீக்கம், பணவீக்க எதிர்பார்ப்புக்கள், விரிந்த பணத்தின் வளர்ச்சி, கொடுகடன் விரிவாக்கம், பொருளாதார நடவடிக்கைகளின் விரிவாக்கம் அதேபோன்று பன்னாட்டு ஒதுக்கு நிலைமை என்பன வட்டி வீதங்களில் அதிகரிப்பொன்றினை எதிர்பார்ப்பதற்கான பகுத்தறிவுச் சந்தையொன்றினை நியாயப்படுத்துவனவாக இருக்காது.
உணவுப் பணவீக்கத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக முதன்மைப் பணவீக்கம் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க விரைவாக நடு ஒற்றை இலக்கத்திற்கு திரும்பிய வேளையில் கேள்வியினால் தூண்டப்படும் பணவீக்கத்தின் குறிக்காட்டியாக விளங்கும் மையப் பணவீக்கம் தொடர்ந்தும் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டது. மத்திய வங்கியின் பணவீக்க எதிர்பார்ப்பு அளவீட்டினால் அளவிடப்பட்டவாறான பணவீக்க எதிர்ப்பார்ப்புக்கள் மிதமடைந்திருக்கின்றன. பொருளாதார வளர்ச்சி உள்ளார்ந்த வளத்திலும் பார்க்கக் குறைவாகக் காணப்படுவது, பணவீக்க அழுத்தங்களில் அதிகரிப்பினை ஏற்படுத்தாது கூட்டுக் கேள்வியினை விரிவுபடுத்துவதற்கான வசதிகள் காணப்படுவதனை சுட்டுவதாகவுள்ளது. 2017 இறுதியில் விரிந்த பணத்தின் விரிவாக்கம் மற்றும் கொடுகடன் விரிவாக்கம் இரண்டும் எதிர்பார்க்கப்பட்ட மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்திருக்கின்றன. ஆரம்ப நிலுவை மற்றும் அரசிறைச் சேகரிப்பு போன்ற சில இறைக்குறிகாட்டிகள் முன்னேற்றங்களைக் காட்டியிருக்கின்றன.
வெளிநாட்டுத் துறையினைப் பொறுத்தவரையில், தற்பொழுது அலுவல்சார் ஒதுக்குகள் 2016 இறுதியின் ஐ.அ.டொலர் 6.0 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 7.9 பில்லியன் என மதிப்பிடப்பட்டன. 2017இல் மத்திய வங்கி தேறிய அடிப்படையில் உள்நாட்டுச் சந்தையிலிருந்து ஐ.அ.டொலர் 1.7 பில்லியனையும் 2018ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 284 மில்லியனையும் கொள்வனவு செய்து கொண்டமையின் காரணமாக ஒதுக்குகள் அளவுசார் ரீதியிலும் தரம்சார் ரீதியிலும் முன்னேற்றங்களைப் பதிவுசெய்துள்ளன.
அண்மைய உலகளாவிய சந்தை அபிவிருத்திகளும் உள்நாட்டின் நிச்சயமற்ற தன்மைகளும் பொருளாதாரமல்லா காரணிகளுக்கு காரணமாகி பெப்புருவரி மாதத்தில் உள்நாட்டுச் சந்தையில் சில தளம்பல்களை உருவாக்கிய போதும், அத்தகைய தளம்பல் மிகக் குறுகிய ஆயுளைக் கொண்டனவாகவே இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை ஏற்கனவே உறுதியடைந்துள்ள வேளையில் அரச பிணையங்கள் சந்தையில் காணப்படும் ஊகங்களும் கணிசமானளவிற்கு மிதமடைந்துள்ளன.
எனவே, மத்திய வங்கி வட்டி வீதங்களின் எதிர்கால நடத்தை தொடர்பான எதிர்பார்ப்புக்கள் பற்றிய பிழையான ஊடக அறிக்கையினால் தவறாக வழிநடத்தப்படாமல் இருக்க வேண்டுமென பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்குகிறது.