தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினால் (2013=100) அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 யூலையின் 5.8 சதவீதத்திலிருந்து 2016 ஓகத்தில் 4.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2016 ஓகத்தில் உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்கு பங்களித்துள்ளன.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றம் 2016 யூலையின் 3.4 சதவீதத்திலிருந்து 2016 ஓகத்தில் 3.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. .
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாதாந்த மாற்றத்தினைப் பரிசீலனையில் கொள்ளும் பொழுது, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 2016 யூலையில் 115.2 சுட்டெண் புள்ளியிலிருந்து 2016 ஓகத்தில் 113.3 சுட்டெண் புள்ளிக்கு 1.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. இம்மாதாந்த வீழ்ச்சிக்கு முக்கியமாக, உணவு வகையிலுள்ள விடயங்களின் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே முக்கிய காரணமாக அமைந்தது. காய்கறிகள், பச்சை மிளகாய், சீனி, தேங்காய், நெத்தலி, அரிசி, பருப்பு மற்றும் சின்ன வெங்காயம் என்பனவற்றின் விலைகள் இம்மாதத்தில் வீழ்ச்சியடைந்தன. 2016 ஓகத்தில் உணவல்லா வகையில் நலம்; தொடர்பூட்டல்; மற்றும் பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம் ஆகிய துணை வகைகள் வீழ்ச்சிகளைப் பதிவுசெய்தன. 2016 ஓகத்தில் ஆடை மற்றும் காலணிகள்; தளபாடங்கள், வீட்டுச் சாதனங்கள் மற்றும் வழமையான வீட்டுப் பேணல்கள்; போக்குவரத்து; உணவகங்கள் மற்றும் சுற்றுலாவிடுதிகள் மற்றும் பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் துணை வகைகள் அதிகரித்தன. அதேவேளை, வெறியக் குடிவகைகள் மற்றும் புகையிலையின் விலைகள் 2016 ஓகத்தில் அதிகரித்தன. இருப்பினும் கூட கல்வி துணை வகையின் விலை இம்மாத காலப்பகுதியில் மாற்றமின்றிக் காணப்பட்டன.
ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 யூலையின் 6.8 சதவீதத்திலிருந்து 2016 ஓகத்தில் 6.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. ஆண்டுச் சராசரி தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் 2016 யூலையின் 5.5 சதவீதத்திலிருந்து 2016 ஓகத்தில் 5.6 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது.