தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் ஒத்தோபர் மாதத்தில் 54.8 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 செத்தெம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 4.2 புள்ளிகளாலான ஒரு குறைவாகும். இது தயாரிப்பு நடவடிக்கைகளானது 2017 செத்தெம்பர் உடன் ஒப்பிடும் போது 2017 ஒத்தோபரில் ஒரு குறைந்த வேகத்திலான அதிகரிப்பினை குறித்துக்காட்டுகின்றது. இது பிரதானமாக முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட அதிகரித்திருந்த மட்டங்களிலிருந்து மெதுவடைந்த புதிய கட்டளைகள் மற்றும் தொழில்நிலை துணைச்சுட்டெண்களினால் உந்தப்பட்டது. உற்பத்தி மற்றும் கொள்வனவுகள் இருப்பு துணைச்சுட்டெண்களும் ஒத்தோபர் மாதத்தில் ஒரு குறைந்த வீதத்தில் விரிவடைந்திருந்தது. அதே வேளையில், நிரம்பலர் வழங்கல் நேர துணைச்சுட்டெண் ஒரு உயர் வீதத்தில் நீட்சியடைந்ததுடன், இதற்கு வெளிநாட்டு வழங்குனர்களில் வேறு நாடுகளிலிருந்தான வழங்கல் கேள்விகளின் அதிகரிப்பு காரணமாக அவர்களுடைய வழங்கல் நேரம் நீட்சியடைந்தமையே காரணமாக அமைந்தது. ஒட்டுமொத்தமாக, கொ.மு.சுட்டெண்ணின் அனைத்து துணைச்சுட்டெண்களும் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலான பெறுமானங்களை ஆனால் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒரு குறைவான வேகத்தில் ஒத்தோபர் மாதத்தில் பதிவு செய்து ஒரு ஒட்டுமொத்த விரிவாக்கத்தினை காட்டியது. இதற்குமேலாக, நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்பு அடுத்த மூன்று மாதங்களுக்கான சாதகமான நிலைமையினை குறித்துக்காட்டியது.
பணிகள் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2017 செத்தெம்பர் 57.0 சுட்டெண் புள்ளியிலிருந்து ஒத்தோபர் மாதத்தில் 55.3 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்தது. இது பணிகள் துறையானது 2017 செத்தெம்பர் உடன் ஓப்பிடும் போது 2017 ஒத்தோபாரில் குறைவான வீதத்தில் தொடர்ச்சியான அதிகரிப்பை குறித்துக்காட்டுகின்றது. வியாபார நடவடிக்கைகள் அதிகரித்திருந்த வேளையில் புதிய வியாபாரங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புகள் 2017 செத்தெம்பர் உடன் ஒப்பிடும; போது ஒத்தோபரில் குறைவடைந்திருந்தது. அதே காலப்பகுதியில், தொழில்நிலை மற்றும் நிலுவையிலுள்ள பணிகளும் வீழ்ச்சியடைந்திருந்தது. விநியோக வழிமுறைகளின் விஸ்தரிப்பு மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான அபிவிருத்திகளின் காரணமாக வியாபார நடவடிக்கைளில் பிரதானமாக நிதியியல் பணிகள் மற்றும் தொலைத்தொடர்ப்பூட்டல் துறைகளில; ஒரு அதிகரிப்பு அவதானிக்கப்பட்டது. மே 2015இல் அளவீடு ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் இருந்து இரண்டாவது முறையாக தொழில்நிலை குறைவடைந்ததுடன், இதற்கு ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் இடைவெளிக்கு ஆட்சேர்ப்பின்மை மற்றும் பிரதானமாக தங்குமிடம், உணவு மற்றும் குடிபான துறையில் நிரந்தரமற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கையிலான குறைப்பு போன்றவை காரணமாக அமைந்தன. விதிக்கப்பட்ட விலைகளானது 2017 செத்தெம்பர் உடன் ஒப்பிடும் போது ஒத்தோபரில் குறைவான வீதத்தில் அதிகரித்திருந்த வேளையில் தங்குமிடம், உணவு மற்றும் குடிபான துறையில் விதிக்கப்பட்ட விலைகளில் ஒரு குறைவு அவதானிக்கப்பட்டது. தொழிலாளர் செலவிற்கான எதிர்பார்ப்புகள் துணைச்சுட்டெண் ஆண்டு இறுதி பருவகால மிகை ஊதியஙக்ள் மற்றும் பண்டிகைக்கால முற்பணங்கள் போன்ற அனுகூலங்கள் காரணமாக ஒத்தோபர் 2017 இல் சிறிதளவில் அதிகரித்திருந்தது.