இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ப.நா.நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது ப.நா.நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்தினைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இத்தூதுக் குழு ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில், அலுவலர்கள் அறிக்கையினைத் தயாரிக்கும். இது முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு, கலந்துரையாடல்களுக்கும் தீர்மானங்களுக்குமாக ப.நா.நிதிய நிறைவேற்றுச் சபைக்குச் சமர்ப்பிக்கப்படும்.
- புதிய உண்ணாட்டரசிறைச் சட்டத்தினால் ஆதரவளிக்கப்பட்டு 2018இற்கான வரவு செலவுத்திட்டம் இறைத்திரட்சியை தொடர்ந்தும் மேற்கொள்ளுதல் வேண்டும்.
- பணவீக்கத்திற்கும் கொடுகடன் வளர்ச்சிக்கும் அழுத்தம் கொடுக்கும் விதத்தில் நாணயக் கொள்கை தொடர்ந்தும் விழிப்புடன் இருத்தல் வேண்டும்.
- சீர்திருத்த உத்வேகத்தினை அப்படியே பேணுவது பாதிக்கப்படக்கூடிய தன்மையினைக் கட்டுப்படுத்துவதற்கும் அனைத்தையுமுள்ளடக்கிய வளர்ச்சியை உறுதியாகப் பேணுவதற்கும் முக்கியமானதாகும்.
கொழும்பிலும் ஆண்டுக் கூட்டங்களின் போதும் அலுவலர்களுடன் இடம்பெற்ற ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, பன்னாட்டு நாணய நிதியத்தின் அலுவலர் குழு வாசிங்கடனில் பின்வரும் அறிக்கையினை வெளியிட்டது:
“மூன்றாண்டு கால விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் ஒழுங்குகளினால் ஆதரவளிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், அதிகாரிகள் முன்கூட்டியே நடவடிக்கைகளை நிறைவு செய்தல் மற்றும் ப.நா. நிதிய நிறைவேற்றுச் சபையின் ஒப்புதல் என்பனவற்றிற்குட்பட்டு, மூன்றாவது மீளாய்வு தொடர்பில் ப.நா.நிதியக் குழு இலங்கை அதிகாரிகளுடன் அலுவலர் மட்டத்திலான உடன்படிக்கையொன்றினை அடைந்தது.
“சபை 2017 திசெம்பரளவில் மூன்றாவது மீளாய்வினை நிறைவு செய்வதற்கான இலங்கையின் கோரிக்கையினைக் கருத்திற்கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகின்றதுடன், அத்தகையதொரு நேரத்தில் ஆதரவளிக்கும் நிகழ்ச்சித்திட்டத்துடன் இசைந்து செல்லத்தக்க விதத்தில் 2018 வரவு செலவுத்திட்டம் முன் நடவடிக்கையொன்றாக பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. புதிய உண்ணாட்டரசிறைச் சட்டத்தினை கூட்டிணைப்பதன் மூலம் 2018 வரவு செலவுத்திட்டம் வலுவான அரசிறைகளினால் ஆதரவளிக்கப்பட்ட இறைத்திரட்சியினைத் தொடரச் செய்யும். மத்திய வங்கி பணவீக்கம் மற்றும் கொடுகடன் வளர்ச்சி மீதான அழுத்தங்களைக் குறைப்பதற்குத் தயாராக இருக்க வேண்டிய வேளையில் செலாவணி வீத நெகிழ்ச்சித்தன்மையினையும் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.
அதிகாரிகள் நாட்டின் இறை நிலைமையினை மேம்படுத்தி அதன் பன்னாட்டு ஒதுக்குகளைப் பலப்படுத்தியிருக்கின்றார்களெனினும் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளைச் சீர்திருத்தும் விடயத்தில் இன்னமும் அதிகமானவற்றை செய்ய வேண்டியிருக்கிறது. இறை மற்றும் வெளிநாட்டுச் சமநிலையற்ற தன்மைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் ஆர்வம்மிக்க சமூக அபிவிருத்திக் குறிக்கோள்களைப் பூர்த்தி செய்வதற்கும் சீர்திருத்த உத்வேகத்தினை வலுவாகப் பேணுவது முக்கியமானதாக இருக்கும். போட்டித்தன்மையினைப் பாதுகாப்பது, சமூகப் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்களை மேம்படுத்துவது, தனியார் துறை அபிவிருத்தியை உத்வேகப்படுத்துவது என்பனவற்றை நோக்கிய புதுப்பிக்கப்பட்ட முயற்சி வளர்ச்சியை அதிகளவில் உத்வேகம் கொண்டதாகவும் அனைத்தையுமுள்ளடக்குமொன்றாகவும் மாற்றுவதற்கு முக்கியமானதாக இருக்கும்.