நாணயக் கொள்கைச் சபையானது நேற்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில், ஓரிரவு கொள்கை வீதத்தினை 8.75 சதவீதம் கொண்ட தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்கள் ஆகிய இரண்டிலும் பரிணமிக்கின்ற நிலைமைகள் மற்றும் தோற்றப்பாடு என்பவற்றினைக் கவனமாகக் கருத்திற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது. ஏற்கனவே பாரியளவில் தாக்கமொன்றினை ஏற்படுத்தியிருந்த ஏனைய வழிமுறைகளுடன் ஒன்றுசேர்ந்து, 2026 மேயில் முன்கூட்டிய நாணயக் கொள்கை இறுக்கமாக்குதலின் தாக்கங்களுக்குச் சபை குறிப்பான கவனத்தைச் செலுத்தியது. மத்திய கிழக்கில் பரிணமிக்கின்ற புவிசார் அரசியல் பதற்றங்களிலிருந்து தோன்றுகின்ற நிச்சயமின்மையையும் பொருளாதாரம் மீதான எல்-நினோ நிலைமைகளுடன் தொடர்புடைய சாத்தியமான இடர்நேர்வுகளையும் சபை இனங்கண்டுள்ளது.
உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கையானது தொடர்ந்தும் தாக்குப்பிடிக்குந்தன்மையுடன் காணப்பட்டு, 2026இன் முதலாம் அரையாண்டில் 4.7 சதவீதம் கொண்ட (ஆண்டிற்காண்டு) உண்மை வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது. முன்னணிப் பொருளாதாரக் குறிகாட்டிகள் தொடர்ச்சியான உத்வேகத்தினைச் சுட்டிக்காட்டுகின்ற போதிலும், உலகளாவிய மற்றும் காலநிலையுடன் தொடர்புடைய நிச்சயமற்றதன்மைகள் தோற்றப்பாட்டின் மீது தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும். அண்மைய கொள்கை வழிமுறைகளிற்குப் பதிலிறுத்துகின்ற விதத்தில் தனியார் துறைக்கான கொடுகடன் வளர்ச்சியானது படிப்படியாக மிதமடைகின்ற போதிலும், பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் பொருட்டு கொடுகடன் பாய்ச்சல்கள் தொடர்ந்தும் போதியளவில் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
முதன்மைப் பணவீக்கமானது 2026 ஓகத்தில் 8.0 சதவீதத்திற்கு (ஆண்டிற்காண்டு) அதிகரித்தமையானது பொருளாதாரத்தின் பன்முகத் துறைகளில் வலு அதிர்வின் ஊடுகடத்தலினைப் பிரதிபலித்தது. முதன்மைப் பணவீக்கமானது 5 சதவீத இலக்கினை நோக்கிப் படிப்படியாகத் தளர்வடைவதற்கு முன்னர் 2027இன் முதலாவது காலாண்டு முழுவதும் உயர் ஒற்றை இலக்கங்களில் தொடர்ந்தும் காணப்படுமென எறிவுசெய்யப்பட்டுள்ளது. உயர்ந்தளவிலான வலு விலைகளிலிருந்தான கசிவுத்தாக்கங்களின் விளைவொன்றாக மையப் பணவீக்கமும் அதிகரித்தது. தற்போது பணவீக்கத்தில் சடுதியான அதிகரிப்பொன்று காணப்படுகின்ற போதிலும், நடுத்தரகாலப் பணவீக்க எதிர்பார்க்கைகள் இலக்கினை அண்மித்துப் பரந்தளவில் தொடர்ந்தும் நிலைநிறுத்தப்பட்டவையாகக் காணப்படுகின்றன.
மத்திய கிழக்கில் தொடர்ச்சியாக நிலவுகின்ற பதற்றங்களிற்கு மத்தியில், வெளிநாட்டுத் துறையானது தொடர்ந்தும் தாக்குப்பிடிக்குந்தன்மையுடன் காணப்பட்டுள்ளது. தொடர்ச்சியான நான்கு மாத காலப் பற்றாக்குறைகளிற்குப் பின்னர், நடைமுறைக் கணக்கானது 2026 ஓகத்தில் மிகையொன்றினைப் பதிவுசெய்திருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையிலிருந்தும் தொழிலாளர் பணவனுப்பல்களிலிருந்துமான மேம்பட்ட வருவாய்களுடன் இணைந்து, மிதமடைந்த வணிகப்பொருள் இறக்குமதிகளின் மூலம் இதற்கு ஆதரவளிக்கப்பட்டது. மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட தேறிய வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவுகளினால் ஆதரவளிக்கப்பட்டு, மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2026 ஓகத்து இறுதியில் ஐக்கிய அமெரிக்க டொலர் 6.9 பில்லியனாக அதிகரித்தன. 2026 யூலை மற்றும் ஓகத்து ஆகிய மாதங்களில் ஐக்கிய அமெரிக்க டொலரிற்கெதிராகப் பெறுமதியுயர்வடைந்திருந்த இலங்கை ரூபாவானது செத்தெம்பரில் கலவையான அசைவுகளினைப் பதிவுசெய்தது. அண்மைய நாட்டிற்கான தரமிடல்சார் மேம்படுத்தலானது சந்தை மனோபாவங்களினை மேலும் வலுவடையச்செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய வங்கியானது அதன் கொள்கைத் தீர்மானங்களில் முன்னோக்கிய பார்வையினைக் கொண்டதாகவும் தரவுகள் மீது சார்ந்திருப்பதாகவும் தொடர்ந்து விளங்கும். பணவீக்க அழுத்தங்கள் தீவிரமடையுமாயின் அல்லது பணவீக்க எதிர்பார்க்கைகள் நிலையுறுதிகுலையும் சமிக்ஞைகளைக் காண்பிக்குமாயின் பணவீக்கம் இலக்கினை அண்மித்து நிலையுறுதிபெறுவதை உறுதிசெய்வதற்கு உரிய காலத்தில் பொருத்தமான வழிமுறைகளை மேற்கொள்கின்ற அதேவேளை, பொருளாதாரம் நடுத்தர காலத்தில் அதன் சாத்தியமான மட்டத்தினை அண்மித்துத் தொழிற்படுவதற்கு ஆதரவளிப்பதற்கு மத்திய வங்கி தயாராகவிருக்கின்றது.
நாணயக் கொள்கை மீளாய்வு பற்றிய அடுத்த கிரமமான அறிக்கை வெளியீடு 2026 நவெம்பர் 20ஆம் நாளன்று நடைபெறும்.








